குடியிருப்புகளைக் கலைகளால் உயிர்ப்பிக்கும் ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’

குடியிருப்புகளைக் கலைகளால் உயிர்ப்பிக்கும் ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’

3 mins read
902cda11-c556-4ad8-bc36-3f47c572fbe8
நமது தெம்பனிஸ் நடுவத்தில் ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 4) கோலாகலமாக நடைபெற்றது. - படம்: தேசியக் கலை மன்றம்
multi-img1 of 2

பரதநாட்டியம், சீன ஓப்ரா, மலாய் நடனம், யுரேஷிய நாட்டுப்புறப் பாடல்கள் என அனைத்தையும் ஒரே மேடையில், குடியிருப்புகளுக்கு அருகிலேயே தெம்பனிஸ் வட்டாரவாசிகள் அண்மையில் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

அந்தச் சிறப்பான பல்லினக் கலை அனுபவத்தை ‘ஆர்ட்ஸ்எவரிவேர்@சிடிசி’ (ArtsEverywhere@CDC) திட்டம் சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அத்திட்டத்திற்கு ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள், மக்கள் கழகம், தேசியக் கலை மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றன.

சிங்கப்பூரின் பல்லினக் கலாசார அடையாளத்தைக் கொண்டாடும் விதத்தில் குடியிருப்பாளர்களின் வீட்டு வாசலுக்கே வண்ணமயமான கலைப் படைப்புகளைக் கொண்டு சேர்க்கும் இவ்வாண்டின் விழா, சனிக்கிழமை (ஜூலை 4) நமது தெம்பனிஸ் நடுவத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கலைகளால் இணையும் சமூகம்

உயர்தரக் கலை அனுபவங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட அந்த விழாவில், கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் சமூக மேம்பாட்டு மன்றங்களின் மேயர்களும் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவும் (நடுவில்) மற்ற முக்கிய விருந்தினர்களும் மேடையில் குழுப் புகைப்படம் எடுத்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவும் (நடுவில்) மற்ற முக்கிய விருந்தினர்களும் மேடையில் குழுப் புகைப்படம் எடுத்துகொண்டனர். - படம்: தேசிய கலை மன்றம்

“கடந்த ஈராண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டுள்ளன. இவற்றின்வழி சிங்கப்பூர் முழுவதும் 154,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களைச் சென்றடைந்துள்ளோம்,” எனத் திரு நியோ கூறினார்.

கலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “கலைகள் வாயிலாக, வெறும் விழிப்புணர்வைத் தாண்டி பரஸ்பரப் பாராட்டை வளர்த்துக்கொள்கிறோம். பொதுவான இடங்களைப் பகிர்ந்துகொள்வதைத் தாண்டி, பொதுவான அனுபவங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.

“இத்தகைய பகிரப்பட்ட அனுபவங்களின் மூலமே நமது பல்லினக் கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடி மேலும் வலுப்படுத்துகிறோம்,” என்றார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.
நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: தேசிய கலை மன்றம்

குடியிருப்புகளிலேயே கலைகளை அணுகுவதன் மூலம், மக்களிடையே பிணைப்பு உருவாவதோடு, சிங்கப்பூரை இல்லமாக்கும் பல்வேறு கலாசாரங்களின் செழுமையைக் கண்டு பெருமிதம் கொள்ள முடிகிறது என மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, ஆங் மோ கியோ சென்ட்ரல் ஸ்டேஜ், கோவன் ஹப், பார்க் பாயிண்ட் ஆகிய புதிய இடங்களுக்கும் நிகழ்ச்சிகள் விரிவுபடுத்தப்படவுள்ளன.

ஆழமான கலாசாரப் பரிமாற்றம், பரவலான மக்களைச் சென்றடைவது, கலைஞர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்குவது ஆகிய மூன்று இலக்குகளுடன் இத்திட்டம் மேம்பட்ட வடிவில் பயணிக்கவுள்ளது.

பழமையைப் புதுப்பிக்கும் ‘அனேக ராகம் ரக்யாத்’

நமது தெம்பனிஸ் நடுவத்தில் அரங்கேறிய இவ்விழாவின் முக்கிய அங்கமாக, 1960களில் புகழ்பெற்ற பல்லின சமூகக் கலாசாரக் கச்சேரியான ‘அனேக ராகம் ரக்யாத்’ (Aneka Ragam Rakyat) நிகழ்ச்சியின் மறுவடிவாக்கம் அமைந்திருந்தது.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடனக் குழு (பரதநாட்டியம்), எரா டான்ஸ் தியேட்டர் (மலாய் நடனம்), ரீ சின் ஓப்ரா சங்கம் (சீன ஓப்ரா), தி மியூசிக் மென் (யுரேஷிய நாட்டுப்புற இசை) ஆகியவை ஒன்றிணைந்து சிங்கப்பூரின் தனித்துவமான கலாசாரங்களை ஒரே மேடையில் அரங்கேற்றின. மொத்தம் 22 கலைஞர்கள் அதில் பங்கேற்றனர்.

“1960களில் இருந்த அதே சூழ்நிலையை உருவாக்க நினைத்தோம். கலாசாரங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் எப்படி நமது பலமாக இருந்தது என்பதை நினைவுகூர இதுவொரு நல்ல வாய்ப்பு,” என அப்சராஸ் ஆர்ட்ஸ் குழுவின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி தெரிவித்தார்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் குழுவின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி, 59.
அப்சராஸ் ஆர்ட்ஸ் குழுவின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி, 59. - படம்: தேசிய கலை மன்றம்

வழக்கமான அரங்க நிகழ்ச்சிகளைப் போலின்றி, திறந்தவெளியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் ஈடுபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

“பார்வையாளர்கள் வெறும் உட்கார்ந்து பார்க்காமல், அவர்களுக்கும் கலாசார நடன அசைவுகளைச் சொல்லிக் கொடுத்து இதில் இணைத்துக் கொண்டோம்,” என்று கூறிய அவர், இதுபோன்ற முன்னெடுப்புகள் மக்களிடையே கலையை நோக்கிய ரசனையை உருவாக்கி, அவர்களைக் கலையரங்கங்களுக்கு வரத் தூண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பார்வையாளர்களைக் கவர்ந்த கூடுதல் அங்கங்கள்

முக்கிய மேடை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, குடும்பத்தினரை ஈர்க்கும் வகையிலான பல்வேறு அங்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ‘பிளே!’ (PLAY!) கலைக்குழுவினர் நடத்திய பயிலரங்கில் வண்ணமயமான கடைவீடு மாதிரிகளை வடிவமைக்கும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிடைத்தது. பாரம்பரிய கலைப்படைப்பு உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வசதி, 1960களின் இசையை வாசித்தபடி வலம்வந்த ‘நியூ ஸ்ட்ரீம் பிராஸ் பேண்ட்’ (New Stream Brass Band) இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ஆகியவையும் இடம்பெற்றன.

இவ்விழாவில் கலந்துகொண்ட பிடோக் வட்டாரத்தைச் சேர்ந்த 17 வயது சஹானா, தமது பள்ளியின் மாணவர் மன்றம் வாயிலாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்துகொண்டதாகக் கூறினார். பல்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிந்துகொள்ளவே இங்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், “வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நண்பர்களுடன் வந்திருந்த எனக்கு, இது சமூகங்களை ஒன்றிணைக்கும் சிறந்த அனுபவமாக அமைந்தது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்