சிங்கப்பூர்க் கலைகளின் சிறப்பை விமானப் பயணிகளிடம் எடுத்துரைக்கும் வகையில் தேசியக் கலை மன்றம், சாங்கி விமான நிலையக் குழுமத்துடன் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த மூன்று ஆண்டுகால உடன்பாடு, சிங்கப்பூரின் கலைத் திறமையை சாங்கி விமான நிலையத்தின் வாயிலாக உலகிற்கு எடுத்துச்சொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விமான நிலைய முனையங்களில் காட்சிப்படுத்தப்படும் கலைப் படைப்புகள், நேரடிக் கலை நிகழ்ச்சிகள் போன்ற வழிகளில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூரின் கலாசாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை இது உருவாக்கும்.
சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்திடும் நிகழ்வில் கலாசார, சமூக இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தேசியக் கலை மன்றம் மற்றும் சாங்கி விமான நிலையக் குழுமப் பேராளர்களும் உள்ளூர்க் கலைஞர்களும் இணைந்து கவிதை, இசை நிகழ்ச்சிகளை நடத்தி இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.
“ஒரு தேசமாக நாம் யார் என்பதை நமது கலைகள் வடிவமைக்கின்றன எனும் நமது வலுவான நம்பிக்கையை இந்தத் துடிப்பான ஒருங்கிணைப்பு பிரதிபலிக்கிறது,” என்று திருவாட்டி லோ தமது உரையின்போது குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் செழுமையான கலைப் பாரம்பரியத்தை சாங்கி விமான நிலையத்தில் காட்சிப்படுத்துவதன்மூலம் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்லும் ஏறத்தாழ 70 மில்லியன் பயணிகளிடம் ஒரு தனித்துவமான, மேலோங்கிய எண்ணத்தை உருவாக்குவதுடன் நமது சிங்கப்பூர் அடையாளத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இலக்கியம், காட்சிப் பொருள்கள், கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கலை முயற்சிகள் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் இலக்கியக் கவிதைகள், நேரடி கவிதை அமர்வுகள் மூலமாக அறிமுகப்படுத்தப்படுவதோடு தேசிய கலைக் குழுமத்தின் ‘ஐ பிளே எஸ்ஜி மியூசிக்’ என்ற முன்னெடுப்பும் விமான நிலையச் சூழலுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
முக்கியமான கலைத் திருவிழாக்களின்போது சாங்கி விமான நிலையம் காட்சிப்படுத்தும் கலைஞர்களுக்கான ஓர் உலகளாவிய மேடையாகச் செயல்பட்டு, சிங்கப்பூரின் படைப்புத்திறன்களை உலக அளவில் பறைசாற்ற உதவும்
இந்த ஒப்பந்தம், கலைகளைப் பாரம்பரிய பண்பாட்டுத் தளங்களுக்கு அப்பால் பொதுவெளிக்குக் கொண்டுசெல்லும் உத்தியின் ஒரு பகுதியாகும்.
சிங்கப்பூர் கலைத் திட்டம் 2023 முதல் 2027 வரையிலான வழிகாட்டுதல்களின்படி, நாட்டை ஒரு கலைக் சித்திரமாக மாற்றி, சிங்கப்பூரை ஒரு தனித்துவமான நகரமாக உருமாற்றும் தொலைநோக்குப் பார்வையின் அங்கமாக இது அமைகிறது.

