சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் இருக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் வாராந்தர வகுப்புத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
நன்னடத்தை, தொடர்புத்திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்கும் ‘ஃபோர்ட் அச்சீவர்ஸ் சிங்கப்பூர்’ (Fort Achievers Singapore) இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சிறப்புத் தேவையுள்ள பிள்ளைகளை வளர்க்கும் வசதி குறைந்த பெற்றோருக்கு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.
அத்தகைய பிள்ளைகளுக்காகப் பெற்றோர் தங்களால் இயன்றதைச் செய்து வந்தாலும், பல நேரங்களில் அவர்கள் செய்வதறியாமல் திணறுவதாக ‘ஃபோர்ட் அச்சீவர்ஸ் சிங்கப்பூர்’ இயக்குநர் ராயன் ஸ்டோன் தெரிவித்தார்.
சிறப்புத் தேவையுள்ள தங்கள் பிள்ளைகளுக்கான திட்டங்களைக் குடும்பங்கள் மாற்றி அமைத்தாலும், நடத்தை, தொடர்புத்திறன் ஆகியவை தொடர்பில் சவால்களைச் சந்தித்து வருவதாகத் திரு ஸ்டோன் குறிப்பிட்டார்.
“தங்கள் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்று பெற்றோரிடம் அடிக்கடி சொல்லப்படுகிறது. அன்றாடம் என்ன தேவை என்பதைச் சுட்டிக்காட்டும் நடைமுறைகளை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்.
வாரம் ஒருமுறை நடக்கும் சிகிச்சை அமர்வுகளுக்கு அப்பாலும் ஆதரவு நீட்டிக்கப்பட்டு, அது குழந்தையின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும்போதுதான் அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படும் என்று திரு ஸ்டோன் நம்புகிறார்.
“குடும்பங்கள் எப்போதும் சிகிச்சையையே சார்ந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. சிகிச்சை நேரத்தைக் கடந்தும் பெற்றோர், பராமரிப்பாளர்கள், இல்லப் பணிப்பெண்கள், ஆசிரியர்கள் ஆகியோர் என்ன செய்ய வேண்டும் எனத் துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்,” என்றும் அவர் சொன்னார்.
‘நோய்த்தணிப்புப் பராமரிப்புக்கான ஆய்வு, கல்விச் சிறப்பு மையம்’ நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பராமரிப்பாளர்கள் தங்களைச் சார்ந்திருப்பவர்களைக் கவனிக்க அன்றாடம் சராசரியாக ஏழு மணிநேரம் செலவிடுகின்றனர்.
இத்தகைய தீவிரமான அர்ப்பணிப்பு, பெரும்பாலும் நாட்பட்ட சோர்வு, தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. ஒரு சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டது.

