குச்சிகள் உரசும் ஒலியும் சலங்கைகளின் ஒலியும் சிரிப்பொலிகளும் இணைந்து இந்திய மரபுடைமை நிலையத்தின் இரண்டாம் தளத்திலிருக்கும் அரங்கமெங்கும் இன்னிசை பரவியிருந்தது.
கோலாட்டக் குச்சிகளைவிட நீளமான கிட்டியாட்டக் குச்சியை ஒரு கையிலும் குச்சியில் இணைக்கப்பட்டிருந்த வட்டச் சலங்கைகள் கோக்கப்பட்ட உலோகச் சங்கிலியை மற்றொரு கையிலும் பிடித்துக்கொண்டு அங்கிருந்தவர்கள் குனிந்து நிமிர்ந்து ஆடிய தாளத்துடன் இசையின் லயமும் இணைந்து உற்சாகம் களைகட்டியது.
கோலாட்டத்தின் விறுவிறுப்பும் கும்மியாட்டத்தின் துடிப்பும் கைகோத்து ஆடும் குலவையாட்டத்தின் ஒத்திசைவும் சேர்ந்த ‘சலங்கைக் கிட்டியாட்டம்’ பார்வையாளர்களையும் உள்ளிழுத்து ஆடவைத்தது.
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மட்டுமே பரவலாக உள்ள இந்த நாட்டுப்புறக் கலையைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தது ‘ஆட்டம்’ அமைப்பு.
ஆனந்தா மரபுக்கலைகள் கூடத்துடன் (ஆட்டம்) இந்திய மரபுடைமை நிலையம் வழங்கும் ‘நம் மரபு’ தொடரில் 2026ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக ‘சலங்கைக் கிட்டியாட்டம்’ பயிலரங்கு பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்றது.
‘சலங்கைக் கிட்டியாட்டக்’ கலைஞர் கோபி ஆறுமுகம் வழிநடத்திய இப்பயிலரங்கில் சிறார், இளையர், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்று மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபி ஆறுமுகம், 32, ஐந்து வயதிலிருந்தே கிட்டியாட்டம் ஆடி வருகிறார்.
அவரது ஊர் மரபான இந்த ஆட்டத்தை ஊர்மக்கள் அனைவரும் ஆடுகிறார்கள். மே மாதம் நடைபெறும் மலையேறியம்மன் கோயில் திருவிழாவிற்காக ஒரு மாத காலம் பயிற்சி மேற்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து ஆடுவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
பாரம்பரியமான இக்கலை பிற ஊர்களில் அழிந்துவிட்டாலும் தங்கள் கிராமத்தில் ஐந்து வெவ்வேறு பாணிகளில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார் திரு கோபி ஆறுமுகம்.
இந்தப் பாரம்பரியக் கலையை, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் கற்றுக் கொடுப்பதில் அவருக்குப் பெருமகிழ்ச்சி, அளவிலாப் பெருமை.
“பல தலைமுறைகளுக்கு முன்னதாகவே இங்கு வந்து தங்கிவிட்டாலும் பாரம்பரியக் கூறுகள் மீது சிங்கப்பூர்த் தமிழர்கள் காட்டும் விருப்பம் மகிழ்ச்சி தருகிறது,” என்றார் திரு கோபி ஆறுமுகம்.
இவ்வகைக் கலைகளைக் கற்கும்போதும், இந்தியாவிலிருந்து வந்துள்ள கலைஞர்களைப் பார்க்கும்போதும் அவர்களுக்கு மொழி, பண்பாட்டுக்கு அருகில் செல்லும் உணர்வு கிடைப்பதாகக் கருதுவதாக கலைஞர் கோபி ஆறுமுகம் குறிப்பிட்டார்.
தமிழர்களுடன் பிறமொழி பேசும் இந்தியர்களும் பிற இனத்தவரும் கூடி இதனை ஆர்வத்துடன் கற்பதைப் பார்ப்பது தனித்துவமான காட்சி என்றார் அவர்.
“சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் பாரம்பரியத்தை வாழ்வியலுடன் இணைப்பதற்கான தளங்கள் அரிதாகியுள்ளன. இந்நிலையில், சிற்றூரிலிருந்து வந்த, இணையத் தேடல்மூலம் அறிந்துகொள்ள இயலாத இக்கலையை, குறிப்பாக இளையர்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்களுக்கு ஆர்வம் பிறக்கிறது,” என்றார் ‘ஆட்டம்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தினி.
மேலும், இது ஒரு சமூகத்தை இணைக்கும் கலை வடிவம் என்றும் தனிமனிதராக இல்லாமல் ஒரு சமூகமாக இணைந்து படைக்கும்போது கிட்டும் மகிழ்ச்சி அலாதியானது என்றும் அவர் சொன்னார்.
பல இன, சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் என்பதால் இக்கலையை ‘நம் மரபு’ பயிலரங்குத் தொடரின் வழியாகச் சிங்கப்பூருக்குக் கொண்டுவர நினைத்ததாகவும் விஷ்ணுவர்தினி தெரிவித்தார்.
“என் மகள் ஹேமாமிர்தா மருதனுக்குப் பண்பாடு, கலை குறித்த அடிப்படைப் புரிதல் கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அனைத்து வயதினர்க்கும் ஏற்றவாறு பொறுமையுடன் கலைஞர்கள் கற்றுத்தந்ததில் மகிழ்ச்சி,” என்று கூறினார் பயிலரங்கில் பங்கேற்ற சுப்ரபா மருதன்.
தமது ஐந்து வயது மகள் வ்ரிஷா ஹம்சினி கார்த்திகேயனுக்கு பாரம்பரியக் கலையை அறிமுகம் செய்யவும், பலருடன் கலந்து பழகவும், இணைந்து நடனமாடவும் இந்நிகழ்ச்சி வாய்ப்பளித்ததாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் நந்தினி ரத்தினகுமார், 39.

