ரவி சிங்காரம்
‘பெண்களால் செய்ய இயலாதது என்ன?’ என்ற வினாவிற்கு இதுவரை விடை கிடைத்ததில்லை, கிடைக்கவும் போவதில்லை என்பதற்குச் சான்றாக இந்த சாதனைப் பெண்மணிகள் திகழ்கின்றனர்.
நியாயத்திற்காக ஆறு ஆண்டுகள் போராடிய தாய். குடும்ப வணிகத்தைப் புதிய சிகரங்களுக்கு இட்டுச் செல்லும் தொழில்முனைவர். அடுத்தத் தலைமுறைக்குத் தூண்டுகோலாக விளங்கும் ஆசிரியர்.
இவ்வாறு பல சூழல்களிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்துவரும் பெண்மணிகளுக்குத் தகுந்த அங்கீகாரம் வழங்கும் வகையில் ‘மகளிர் சாதனையாளர் விருதுகள்’ எனும் புதிய விருதுகள், ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று 20 பேருக்கு வழங்கப்பட்டன.
தத்வா புரொடக்ஷன்ஸ், பண்டிஷ் பீட்ஸ் புரொடக்ஷன்ஸ், தொழில்முனைவர் பத்மஜா ஆகியோரின் ஏற்பாட்டில், எஸ்பி ஜெய்ன் அனைத்துலக நிர்வாகப் பள்ளியில் விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிங்கப்பூருக்கான இந்தியத் துணைத் தூதர் பூஜா தில்லு, “நீங்கள் சிங்கப்பூரின் புத்தாக்க உணர்வைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், காலத்தை வென்ற பண்பாட்டுக் கூறுகளையும் முன்னெடுத்துச் செல்கின்றீர்கள்,” எனச் சாதனைப் பெண்மணிகளைப் பாராட்டினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற திருவாட்டி ஜாய்ஸ் கிங்ஸ்லி, தம் தந்தையார் எஸ்.ஐ.சாமி தொடங்கிய ‘எஸ்ஐஎஸ்’ இறைச்சி வணிகத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் பெண்கள் பலர் இருப்பதைக் கண்ட அவர், பெண் தொழில்முனைவர்களுக்கு ஆதரவளிக்க 2012ல் ‘லிஷா’ மகளிர் பிரிவைத் தொடங்கினார். சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையில் இயக்குநராகவும் அதன் ‘சிஸ்டர்ஹூட் ஆஃப் ஆன்ட்ரபிரனர்ஸ்’ பிரிவின் தலைவராகவும் திகழ்கிறார்.
மனநலச் சவால்களுக்குப் பல தளங்களிலும் குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர் சுஜாதா திவாரி, ‘அகைன்ஸ்ட் ஆல் ஆட்ஸ்’, ‘விம்சிக்கல் மியூசிங்ஸ்’ போன்ற நூல்களை எழுதி பலரிடத்திலும் துணிச்சலையும் சிந்தனையையும் தூண்டியுள்ளார். இன்று அவர் பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். அவருக்கு, ‘இலக்கியக் கலை, நலம்’ (Literary Arts and Wellbeing) விருது வழங்கப்பட்டது.
பிலிப்பின்சைச் சார்ந்த திருவாட்டி டயானா டான், தமது இந்தியக் கணவர்மூலம் சேலைகளுக்கு அறிமுகமானார்; அவற்றால் கவரப்பட்டார்.
“அன்றாடம் சேலை அணியவேண்டும் என்ற ஆசை பிறந்தது,” என்றார் அவர். அதே ஆர்வம், அதிலிருந்த தொழில் வாய்ப்புகளையும் அவருக்கு அடையாளம் காட்டியது. ஈராண்டுகளுக்கு முன்பு ‘திவாஷ் ராயல்’ நிறுவனத்தைத் தொடங்கிய அவர், உடனடியாக அணியக்கூடிய லினன், மல்மல் சேலைகளை விற்பனை செய்து வருகிறார். ‘தொழில்முனைப்புத் தலைமைத்துவ’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
‘புற்றுநோய் சிகிச்சை, நோயாளிப் பராமரிப்பில் சிறப்பு’ விருதை வென்ற மார்பக அறுவை சிகிச்சையாளர் டாக்டர் ராதிகா லக்ஷ்மணன், முன்பு மருத்துவத் துறையிலிருந்த ஆண்-பெண் பாகுபாட்டைக் கடந்துவந்தவர். 1980கள் முதல் 2003 வரை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
“அப்போது, ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய துறையில் ஒரு பெண்ணாக அங்கீகாரம் பெற, ஆண்களைவிட இரண்டு, மூன்று மடங்கு சிறப்பாகச் செயல்படவேண்டும் என்ற வெறியுடன் உழைத்தேன்,” என்றார் அவர்.
எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்குப் பின்னர் அவர் அறுவை சிகிச்சைப் பயிற்சியை (FRCS) முடிக்க 11 ஆண்டுகளாயின. இதனால், தமது 40களின் தொடக்கத்தில்தான் டாக்டர் ராதிகா திருமணம் செய்துகொண்டு தாய்மையடைந்தார்.
“வேலை, குடும்பம் எனப் பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினமானது. ஆனால், குடும்பத்தினரும் நண்பர்களும் நல்லாதரவு வழங்கினால் பெண்களால் சாதிக்க முடியும்,” என்றார் அவர்.
“சவால்களைக் கடந்து மற்றவர்களுக்கு வழியமைத்துக் கொடுத்த எண்ணற்ற பெண்களின் கதைகளே இந்நிகழ்ச்சிக்கு ஊக்கமளித்தன,” என்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான நட்டாஷா தேஜுஜா, சுவேதா வர்மா, பத்மஜா.


