விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் தொடர்பில் முஹம்மது ஹாரிஸ் கேரிக்கு ‘சமூகத்தில் விரைந்து உதவுவோருக்கான விருது’ (CFRA) வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வழங்கிவரும் இந்த விருது, தன்னலமற்ற துணிச்சல், விவேகம், பொதுநலச் சிந்தனை போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் குடிமக்களை அங்கீகரிக்கிறது.
கடந்த மாதம் அப்பர் சாங்கி ரோட்டில் தமது வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த முகமது ஹாரிஸ், காயமடைந்து காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு முதலுதவி அளித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விருது கிடைத்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாகத் திரு ஹாரிஸ், தமிழ் முரசிடம் கூறினார். “விபத்தில் பாதிக்கப்படுவோர்க்கு நான் மனமுவந்து உதவி அவர்களது வேதனையைப் போக்க முற்படுவேன்,” என்று ராயஸ் கிங்ஸ் குழுமத்தின் மூத்த மக்கள் தொடர்பு மேலாளராகப் பணிபுரியும் திரு ஹாரிஸ் கூறினார்.
விருது பெற்றதற்காகத் திரு ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் தாம் பெருமை அடைவதாக ராயல் கிங்ஸ் குழுமத் தலைவர் சிராஜுதீன் தெரிவித்தார்.
“ஹாரிசின் துணிச்சல், அறிவுக்கூர்மை, பரிவு, சமூகக் கடப்பாடு ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.


