தங்கப் பதக்கங்களை அள்ளிய ஜுடோ விளையாட்டாளர்

தங்கப் பதக்கங்களை அள்ளிய ஜுடோ விளையாட்டாளர்

2 mins read
f3802d4e-f9b9-471b-98a8-16feb0c5e598
22 வயதான சிங்கப்பூர் ஜுடோ விளையாட்டாளர் நேசன் (வலது). - படம் : ஜெய் தேவராஜ் தேவர்
Google News Preferred Icon

‘த ஃபெசீக் லேப்’ (The Fesique Lab) உடற்பயிற்சிக்கூட நிறுவனத்தை நிறுவிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜெய் தேவராஜ் தேவரின் பயிற்சியின்கீழ், 22 வயதான சிங்கப்பூர் ஜுடோ விளையாட்டாளர் நேசன், ‘பெஸ்த்தா சுக்கான்’ (Pesta Sukan) போட்டியிலும் ‘கியூ கிரேடு’ (Kyu Grade) சாம்பியன்ஷிப் போட்டியிலும் களமிறங்கி தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.

நேசன், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஜூடோ அணியின் தலைவராகவும் பயிற்சித் தலைவராகவும் செயலாற்றி வருவதுடன், ‘ஐலண்ட் ஜூடோ’ கிளப்பில் பயிற்சியும் பெற்றுவருகிறார்.

‘பெஸ்த்தா சுக்கான்’ போட்டியில் கலந்துகொண்ட 22 வயதான சிங்கப்பூர் ஜுடோ விளையாட்டாளர் நேசன் (நீல நிற உடையில்).
‘பெஸ்த்தா சுக்கான்’ போட்டியில் கலந்துகொண்ட 22 வயதான சிங்கப்பூர் ஜுடோ விளையாட்டாளர் நேசன் (நீல நிற உடையில்). - படம் : ஜெய் தேவராஜ் தேவர்

இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி ‘கியூ கிரேடு’ சாம்பியன்ஷிப் போட்டியில் நேசன் தங்கப் பதக்கம் வென்றார். அதன் பிறகு ஆகஸ்ட் 1ஆம் தேதி ‘பெஸ்த்தா சுக்கான்’ போட்டியில் ஆண்களுக்கான ‘சீனியர் எக்ஸ்ட்ரா லைட்’ பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் தேசிய ஜுடோ அணியில் நேசன் சேர்க்கப்பட்டுள்ளார். உயர்நிலைப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பதற்கான முக்கியப் படியாக இவருக்கு இது அமைந்துள்ளது.

பயிற்றுவிப்பாளர் ஜெய் (இடது), 22 வயதான சிங்கப்பூர் ஜுடோ விளையாட்டாளர் நேசன் (வலது).
பயிற்றுவிப்பாளர் ஜெய் (இடது), 22 வயதான சிங்கப்பூர் ஜுடோ விளையாட்டாளர் நேசன் (வலது). - படம் :  ஜெய் தேவராஜ் தேவர்

தலைமுறை கடந்த வெற்றி

நேசனின் இந்தச் சாதனை, பயிற்றுவிப்பாளர் ஜெய் தேவராஜ் தேவருக்கு மிகவும் பெருமை தருவதாக அமைந்துள்ளது. இருபது வருடங்களுக்கு மேலாக உடற்பயிற்சி, வலிமைப் பயிற்சித் துறையில் ஜெய் தேவராஜ் ஈடுபட்டுவருகிறார்.

கடந்த 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘பெஸ்த்தா சுக்கான்’ போட்டியில் பங்கேற்று அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 2003ல் நடைபெற்ற ‘மசில் வார்’ போட்டியிலும் அவர் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

“நான் 24 ஆண்டுகளுக்குமுன் வெள்ளிப் பதக்கம் வென்ற அதே ‘பெஸ்த்தா சுக்கான்’ மேடையில், இந்த ஆண்டு என் மாணவர் நேசன் தங்கப் பதக்கம் வென்றதும் தேசிய அணிக்குத் தேர்வாகியிருப்பதையும் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றியைத் தலைமுறை கடந்த வரலாற்றுச் சிறப்பாகப் பார்க்கிறேன்,” என்று தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜெய் தேவராஜ் சொன்னார்.

பதக்கங்களை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், கட்டுப்பாடு, தொடர் முன்னேற்றம், விளையாட்டு மீதான பேரார்வம் ஆகியவற்றை நேசன் தனது பயணத்தில் வெளிப்படுத்தி வருகிறார் என்று திரு ஜெய் மேலும் கூறினார்.

தொடர் முயற்சியும் இலக்கும்

ஜுடோ விளையாட்டுக்கான சிறப்பு உடற்தகுதி மேம்பாடு, கட்டமைக்கப்பட்ட வலிமைப் பயிற்சிகள், எடைப் பிரிவைச் சீராகப் பராமரித்தல் ஆகியவற்றில் பயிற்றுவிப்பாளர் ஜெய் தேவராஜின் வழிகாட்டலில் நேசன் தீவிரக் கவனம் செலுத்துகிறார்.

எதிர்காலத்தில் மேலும் பல அனைத்துலக அளவிலான போட்டிகளில் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் நேசன் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்வெற்றிசிங்கப்பூர்விளையாட்டு