கம்பத்தில் பிறந்து வளர்ந்ததால் அனைவரையும் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே கருதுபவர் திருவாட்டி செல்லம் நாராயணசாமி, 65. கடந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 குழந்தைகளை வளர்த்த இவருக்கு அண்மையில் ‘நர்ச்சரிங் ஹார்ட்ஸ்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் மகளிர் பிரிவு சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில், சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய பெண்கள் நால்வருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மார்ச் 7ஆம் தேதியன்று சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் விஜயா அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
“பிள்ளை வளர்ப்பும் (Fostering), சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் என் வாழ்வின் அங்கமாகவே உள்ளன. அதற்காக விருது கிடைப்பது கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் திருவாட்டி செல்லம்.
“சொந்தப் பிள்ளைகள் மூவர், வளர்ப்பு மகனுடன் சேர்த்து எனக்கு நான்கு மகன்கள்,” என்று புன்னகையுடன் குறிப்பிட்டார் செல்லம். ஆறு மாதக் குழந்தையாகத் தன்னிடம் வந்த சீன இனத்தைச் சார்ந்த வளர்ப்பு மகனுக்குத் தற்போது 20 வயது என்றும் அவர் இப்போதும் தம்முடனே இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமது சொந்தக் குழந்தைகள் வளர்ந்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு மற்றுமொரு குழந்தையை வளர்க்கத் தொடங்கியுள்ளார் செல்லம். 22 நாள் குழந்தையாகத் தம்மிடம் வந்த அப்பிள்ளைக்குத் தற்போது ஒரு வயதாகிறது என்றார் அவர்.
மேலும், தமது வீட்டுக்கு அருகிலுள்ள ‘ஆரஞ்ச் வேலி’ நிலையத்துக்குச் சென்று சக மூத்தோருக்கும் உதவுகிறார் செல்லம். “என் வயதையொத்த பலரும் தனிமையாக உணர்வதைப் பார்ப்பேன். அவர்களுடன் பேசிப் பழகி மகிழ்விப்பதுடன், சமூக ஈடுபாடு, துடிப்புடன் செயல்படுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பேன்,” என்று அவர் சொன்னார்.
அவரது தன்னலமற்ற தன்மை, தாய்மை மனப்பான்மை, சமூக அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாகச் செல்லத்துக்கு விருது வழங்கப்பட்டது.
மூத்தோர் தொடர்பான சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருவாட்டி யோகேஸ்வரி சந்திரசேகரனுக்கு, 39, ‘கோல்டன் இயர்ஸ் கார்டியன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்து.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் சமூகப் பணி, குடியிருப்புத் திட்டம், வரவேற்பு மையத்தின் தலைவராகவும் உதவி இயக்குநரகவும் பணியாற்றும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, மூத்த குடியிருப்பாளர்களை மையமாகக் கொண்ட பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
“நான் சமூகச் சேவை, அடித்தளத் தலைவர், தாதிமை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறேன். ஆனால், மூத்தோருடன் பணியாற்றுவதே எனக்கு மனநிறைவளிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார். அவர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி என்றார் அவர்.
சமூக ஒன்றிணைப்புக்கான பங்களிப்பு, தலைமைத்துவப் பண்பு உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கும் நோக்கில், சிங்கப்பூர் மலையாளிகள் சங்கத்தின் தலைவரான சுனு கானிக்கு, 65, ‘கம்யூனிட்டி ஆங்கர்’ (Community Anchor) விருது வழங்கப்பட்டது.
“சமூகத்துக்குத் தொடர்ந்து பங்களித்து வந்தாலும், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சிரமங்களைச் சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது பெருமைக்குரியது,” என்று அவர் குறிப்பிட்டார். தமக்கு அதிக மனநிறைவையளித்த பங்களிப்பு அது என்றார் சுனு.
வீடு திரும்ப விரும்பிய ஊழியர்களுக்கு உதவ மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியதுடன், அடிப்படைத் தேவைகள் கிடைக்காதவர்களுக்கு உணவு, தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வியாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், ஒவ்வொரு பெண்ணும் தன்னால் இயன்ற, சிறிய, சாத்தியமான வழிகளில் சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்றார்.
தொடக்கத்தில் விருதை ஏற்பது குறித்துச் சிந்தித்ததாகச் சொன்ன அவர், இது சிங்கப்பூர் மலையாளிகள் சங்கத்தின் ஒட்டுமொத்தப் பணியை அங்கீகரிக்கும் விதமாக அமைவதால் ஏற்றுக்கொண்டதாகச் சொன்னார்.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவராகச் செயல்படுவதில் சில சிரமங்கள் உள்ளது என்றார் பத்தாண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றும் மும்தாஜ் முகமது யூசூஃப்.
இவர், ‘அட்வகேட் ஆஃப் இன்னர் ஸ்ட்ரெங்க்த்’ (Advocate for Inner Strength Award) எனும் விருதினைப் பெற்றார்.
“எனது குழந்தைப் பருவத்தில் பல்வேறு சிரமங்களைக் கடந்து வந்துள்ளேன். வறுமைப் பிடியிலிருந்து விடுபட்டு வெகுதூரம் வந்துள்ளதை எண்ணிப் பெருமைகொள்கிறேன்,” என்றார் அவர்.
இந்திய முஸ்லிம் சமூகத்தில் உள்ள மனநலத் தேவைகளை உணர்ந்த அவர், ‘சேக்ரட் ஹார்ட்வொர்க்’ எனும் மனநல மையத்தை நிறுவியுள்ளதுடன் அங்கு நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சியென்றும் அவர் குறிப்பிட்டார்.
விருதுகளின் நோக்கம் குறித்துப் பேசிய சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரிவின் தலைவர் சுதா தியாகராஜன், 46, “வெவ்வேறு வயது, துறைகளைச் சேர்ந்த பெண்களைக் கொண்டாடுவது, இளையர்கள் மேலும் பலரைச் சமூகப் பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
மகளிர் பிரிவின் துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஜெயந்தி ஜெயராஜ், “பல நாள்களாக எங்களது குழுவினர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த விருது விழா சிறப்பாக நடந்துள்ளதில் மகிழ்ச்சி,” என்றார்.

