பயம் வேண்டாம், முத்திரை குத்த வேண்டாம்

காதுகளில் குரல்கள் கேட்பது குறித்து விவரிக்கும் ஆவணப்படம்

பயம் வேண்டாம், முத்திரை குத்த வேண்டாம்

3 mins read
91012f5a-afa8-4001-935d-c03097e94209
சூ சி மனிதநேய இளையர் மன்றத்தில் ஆவணப்படம் திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றும் மனநல நிபுணர் சீதாலட்சுமி சுப்பையா. - படம்: லாவண்யா வீரராகவன்
Google News Preferred Icon

மனத்திலோ காதுகளிலோ அசாதாரணமான குரல்கள் கேட்பது இயல்புக்கு மீறியதன்று எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது ‘மை வர்ட் அகெய்ன்ஸ்ட் மைன்’ (My Word Against Mine) எனும் ஆவணப்படம்.

நெதர்லாந்தில் உருவாகி, அனைத்துலக அளவில் பல்வேறு திருவிழாக்களிலும் அரங்குகளிலும் திரையிடப்பட்டு விருதுவென்ற இப்படம், ஆகஸ்ட் 13ஆம் தேதி திரையிடப்பட்டது.

சூ சி மனிதநேய இளையர் மன்றத்தின் (Tzu Chi Humanistic Youth Centre (HYC)) ஆதரவுடன் சிங்கப்பூரில் திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் ஏறத்தாழ 80 பேர் பங்கேற்றனர்.

ஏறத்தாழ பத்துப் பேரில் ஒருவருக்கு இவ்வகைக் குரல்கள் கேட்பதைச் சுட்டிய மனநல நிபுணர் சீதாலட்சுமி சுப்பையா, 55, இது பயங்கரமான பிரச்சினையன்று என்றும் மற்றவர்கள் கேட்காத குரல்களைக் கேட்கும், பார்க்காதவற்றைப் பார்க்கும் பலர் இருக்கிறார்கள் என்பதையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த இத்திரைப்படம் உதவுமென நம்புவதாகச் சொன்னார்.

தம் நண்பரும் நெதர்லாந்தில் பணியாற்றும் மனநல நிபுணருமான ட்ரிக் இத்தகைய திரைப்படத்தை வெளியிட்டுள்ளதை அறிந்தவுடன், இதனைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டார்.

“இவ்வகைக் குரல்களைக் கேட்கும் அனைவரும் இதனால் சிரமப்படுகிறோம் என்று நினைப்பதில்லை. குரல்களுடன் மிகவும் திறம்பட வாழும் பலர் இருக்கவே செய்கின்றனர்,” என்ற அவர், இச்சிரமத்தை எதிர்கொள்ளும் பலரது வாழும் அனுபவங்களை இப்படம் எடுத்துரைப்பதைச் சுட்டினார்.

குரல்களைக் கேட்கும் பிரச்சினையை எதிர்கொள்ளும் ஐந்து பேர், அவர்களது பின்னணிக் கதை, அனுபவம் உள்ளிட்டவற்றை அடக்கிய 100 மணி நேர உரையாடல்களை இரண்டு மணி நேரத் திரைப்படமாகக் சுருக்கித் தயாரிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து மொழியில் உருவான இப்படம், ஆங்கில வசனங்களுடன் திரையிடப்பட்டது.

ஏறத்தாழ 33 ஆண்டுகள் அனுபவமுள்ள மருத்துவர் சீதாலட்சுமி, “இதனை எதிர்கொள்ள ‘பேச்சுப் பயிற்சி’ (Talk Therapy) சிகிச்சையை அளிக்கிறோம். இதனை மக்களுக்குப் புரிய வைப்பது எளிதன்று. ஆனால், இந்தப் படம் இரண்டு மணி நேரத்தில் அந்த மெதுவான செயல்முறையை மிக அழகாகச் சுருக்கிக் காட்டுகிறது,” என்றார்.

இப்படத்தைப் பற்றிப் பேசிய திரு ட்ரிக், “குரல்களைக் கேட்பது ஒரு பிணியன்று. மனித வாழ்க்கையில் நிகழும் ஓர் இயல்பான அனுபவம். கடுமையான அதிர்ச்சி, மன அழுத்தத்தின் விளைவாகவே இது ஏற்படுகிறது. இதில் முக்கியமாக, நாங்கள் குரல்களுடன் நேரடியாகப் பேசி, அந்த நபருக்கும் குரலுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்த முயல்கிறோம்,” என்று விளக்கினார்.

“பொதுவாக, சமூகத்தில் குரல்களைக் கேட்கும் நபர்களை ‘ஸ்கிட்ஸோஃப்ரினியா’ (Schizophrenia) என்ற மனச்சிதைவு நோயாளிகளாக முத்திரை குத்தும் போக்கு உள்ளது. ஆனால் கடுமையான காய்ச்சல், அறுவை சிகிச்சை மருந்து, தனிமை போன்ற பல சூழல்களின் காரணமாகவும் குரல்கள் கேட்கலாம். அனைவருக்கும் மருந்து மட்டும் தீர்வாகிவிடாது. அன்பும் புரிதலும் பேச்சு சிகிச்சையுமே போதுமானது,” என்றார் அவர்.

குரல்கள் கேட்பது குறித்த அடிப்படை விளக்கத்தையும், திரைப்படத்தின் அவசியத்தையும் விளக்கிய மனநல நிபுணர் சீதாலட்சுமி.
குரல்கள் கேட்பது குறித்த அடிப்படை விளக்கத்தையும், திரைப்படத்தின் அவசியத்தையும் விளக்கிய மனநல நிபுணர் சீதாலட்சுமி. - படம்: லாவண்யா வீரராகவன்

“இது பலருக்குச் சொந்தக் குரலாக இருக்காது,” என்று விளக்கிய டாக்டர் சீதாலட்சுமி, “முடிவெடுக்கும்போது நமக்குள்ளும் சில உரையாடல்கள் நடக்கும். அது நமது மனசாட்சியாக இருக்கலாம். நாம் பின்பற்றும் வழிமுறைகளுக்கு ஒத்துப்போகாத செயல்களை மேற்கொள்ளும்போது ஒரு குரல் தடுக்கும். அது நமது தாயின் குரலாக இருக்கலாம்,” என்றார்.

“ஆனால், நம்முடன் நாமே பேசும் குரல், நாம் விரும்புவதுடன் தொடர்புடையதாக இல்லை. சொந்தக் குரல் என்று அடையாளம் காணமுடிந்தாலும், மனத்திலிருந்து பிரிந்த ஒன்று. இதனால் அது பயம் தருகிறது,” என்றார் திரு ட்ரிக்.

இவை இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் நிலை ஏற்படும்போது உதவி கேட்க வேண்டும் எனத் தெரிந்துகொள்ளலாமென்று இருவரும் விளக்கினர்.

இந்த நிலை உறவினருக்கோ நண்பருக்கோ இருப்பதை அறிந்தால் அவர்கள் மீது இரக்கமும் அனுதாபமும் கொள்ள வேண்டும் என்பதும் உரிய உதவி இருப்பதைச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதும் இந்நிகழ்ச்சியின் வெளிப்பாடாக இருப்பதை டாக்டர் சீதாலட்சுமி சுட்டினார்.

மனத்தில் கேட்கும் குரல்களுடன் வாழும் மக்கள் அனுபவங்களைப் பேசிய ஆவணப்படம்.
மனத்தில் கேட்கும் குரல்களுடன் வாழும் மக்கள் அனுபவங்களைப் பேசிய ஆவணப்படம். - படம்: லாவண்யா வீரராகவன்

குரல்களைக் கேட்போர், அவற்றைப் புறக்கணித்து, ஒதுக்கித் தள்ளுவதற்குப் பதிலாக, அவற்றை உற்று நோக்கினால், சரியான தடயங்களைக் கண்டறிந்து, அவற்றின் மையப்பகுதிக்குச் சென்று தீர்வுகாணலாம் என்றும் தெரிவித்தார் அவர்.

ஆவணப்படத்தில் இடம்பெற்றவர்கள் வேறுநாட்டவர் என்றாலும் சாதாரண மனிதர்கள் என்பதால், அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பகிர்வது ஆவணப்படத்தைப் பார்ப்போருக்குச் செய்தி சென்றுசேரும் எனச் சொன்னார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்