இந்திய முஸ்லிம் மகளிர் உடல்நலனுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்கு

இந்திய முஸ்லிம் மகளிர் உடல்நலனுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்கு

3 mins read
5456455a-0c09-4652-928b-824daf0abc65
பெண்களின் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை வரைபடங்கள், காரணங்களுடன் விளக்கினார் மருத்துவர் வனஜா கலைச்செல்வன். - படம்: லாவண்யா வீரராகவன்
Google News Preferred Icon

பெண்கள் பெரும்பாலும் பிறரை முதலில் கவனித்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதால் அவர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதுகுறித்த புரிதலையும் ஏற்படுத்தும் பயிலரங்கு ஒன்று நடைபெற்றது.

குறிப்பாக, இந்திய முஸ்லிம் பெண்களுக்காகத் தமிழில் நடத்தப்பட்ட இப்பயிலரங்கு, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) தாருல் மக்முர் பள்ளிவாசலில் நடைபெற்றது. 35 முதல் 60 வயதுடைய பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட இப்பயிலரங்கில் ஏறத்தாழ 100 பேர் பங்கேற்றனர்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) இந்திய முஸ்லிம் சமூகச் சேவை சங்கமும் இணைந்து ஏற்படு செய்திருந்த இந்தப் பயிலரங்கை தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த அலோசகரான மருத்துவர் வனஜா கலைச்செல்வன் வழிநடத்தினார்.

பருவமடையும் காலம் தொட்டு, மாதவிடாய் நிறுத்தம் வரையிலான காலகட்டங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அவர் விளக்கினார். தடுப்பூசிகள், திருமணத்திற்கு முன்னும் பின்னும் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், கர்ப்பகாலப் பராமரிப்பு குறித்தும் அவர் பேசினார்.

எது சாதாரண உடல்நிலை, எந்த அறிகுறிகளைப் புறக்கணிக்ககூடாது எனவும் எளிமையான முறையில் விளக்கினார் மருத்துவர் வனஜா.

பல்வேறு புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திய அவர், 30களில் தொடங்கி 60களைத் தாண்டிய மூத்த வயது வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பரிசோதனைகளையும் பட்டியலிட்டார்.

சமச்சீர் உணவு, நடைப்பழக்கம், தூக்கம், மனநலன், எடை, கவனம், மாற்ற அறிகுறிகள், முதலுதவி மருத்துவப் பெட்டி ஆகியவை குறித்துப் பேசிய அவர், பயிலரங்கின் முடிவில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இப்பயிலரங்கை, நேரம் ஒதுக்கி வழிநடத்திய மருத்துவர்க்கு சிறப்பு செய்யப்பட்டது. (இடமிருந்து) சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், மருத்துவர் வனஜா கலைச்செல்வன், சிறப்பு விருந்தினர் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.
இப்பயிலரங்கை, நேரம் ஒதுக்கி வழிநடத்திய மருத்துவர்க்கு சிறப்பு செய்யப்பட்டது. (இடமிருந்து) சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், மருத்துவர் வனஜா கலைச்செல்வன், சிறப்பு விருந்தினர் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக். - படம்: லாவண்யா வீரராகவன்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், “விழிப்புணர்வே செயலாட்சியாக மாறும். பெண்களின் ஆரோக்கிய முன்னேற்றம் வீட்டையும், வீடமைப்பின் முன்னேற்றம் சமுதாயத்தையும், சமுதாய முன்னேற்றம் நாட்டையும் மேம்படுத்தும்,” என்றார்.

மக்கள் கூடும் இடங்களில் ஒன்றான பள்ளிவாசலில் பயிலரங்கை நடத்துவதால் பலரைச் சென்றடைய முடியும் என்பதால் பள்ளிவாசலில் அது நடைபெற்றது சிறப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர்கள் இதற்குப் பின்னர் உடல்நலனில் கவனம் செலுத்துவார்கள் என்றும், பலரிடம் இச்செய்திகளைக் கொண்டு சேர்ப்பார்கள் எனவும் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

“வீடுகளில் உணவுமுறை உள்ளிட்ட சில முடிவுகளைப் பெரும்பாலும் பெண்கள் எடுக்கின்றனர். அவர்களிடம் ஆரோக்கியமான் உணவுப் பழக்கம் போன்ற சில வழிமுறைகளைக் கொண்டு சேர்ப்பது, பரவலாக வீடுகளைச் சென்றடையச் செய்கிறது. அதனாலேயே அவர்களை முன்னிறுத்தி இத்திட்டத்தை வடிவமைத்தோம்,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.

பொதுவாக, உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பகிர்வதில் தயக்கம், மொழித்தடை எனப் பல்வேறு தடைகள் இருக்கலாமென்றும், ஒரு பெண் மருத்துவர் தமிழில் இதனை வழிநடத்தியது, அத்தடைகளை உடைத்திருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

பெண்களுக்கான பரந்துபட்ட திட்டமாக இயங்கும் ‘லெட் ஹெர் ஷைன்’ திட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்தப் பயில்ரங்கைப் பல்வேறு சமய அமைப்புகளுடன் கைகோத்து, பல பின்னணிகளைச் சேர்ந்த பெண்களைச் சென்றடைய விரிவாக்கும் எண்ணம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பயிலரங்கில் பங்கேற்ற நாஜிதா செல்வம், 35, “என்னைப் போன்ற பணிக்குச் செல்லும் பெண்கள் சிறு சிறு அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதில் கவனம் கொள்ள வேண்டுமெனத் தெரியவந்துள்ளது,” என்றார்.

மேலும், வயதான பின்னர்தான் உடல்நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனும் மனப்போக்கை இது மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய இளம்பெண்கள் பள்ளி, இணையம்வழி பல்வேறு செய்திகளைத் தெரிந்துகொள்வதாகவும் மூத்தோருக்கு அந்த வாய்ப்பு இல்லாததால், இத்தகைய பயிலரங்குகள் உதவுவதாகவும் சொன்னார் நஜிமா பேகம், 34.

“இது குறிப்பாக தமிழில் நடந்ததால் மூத்தோர் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றதைப் பார்த்தேன். நான் இதுவரை எனது உடல்நலனில் அக்கறை இல்லாமல் மேற்கொண்ட சிறு தவறுகள் குறித்தும் அறிந்துகொண்டேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
சிண்டாமுஸ்லிம்மகளிர்உடல்நலம்விழிப்புணர்வு