அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல

அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல

3 mins read
a9416be3-c6b2-4938-90f1-8207a635ddca
சென்ற நவம்பரில் மியன்மாரில் நடைபெற்ற ‘திருமதி சுப்ராநேஷனல் 2024’ போட்டியில் மூன்றாம் நிலையையும் ‘திருமதி தோழமை’ விருதையும் வென்ற ‌‌ஷஜிதா அமீன், 33. - படம்: திருமதி சுப்ராநேஷனல் 2024

தன் பத்து வயது மகளை ஒற்றைத் தாயாராகப் பார்த்துக்கொள்வது ஒருபுறம், தளவாடத் துறையில் சுயதொழில் செய்வது மறுபுறம் என திருவாட்டி ‌‌ஷஜிதா அமீனுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரமே குறைவு.

ஆனால், அவர் தம் இலக்குகளை எப்படியும் எட்டிவிடும் நம்பிக்கையுடன் அழகுராணிப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வருகிறார்.

மியன்மாரில் சென்ற நவம்பரில் நடந்த ‘மிசஸ் சுப்ராநேஷனல் 2024’ அழகுராணிப் போட்டியில் அவர் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து மூன்றாம் இடத்தில் வந்தார். அதில் கலந்துகொண்ட ஒரே சிங்கப்பூரரும் அவரே.

2023ல் ‘மிசஸ் சிங்கப்பூர் இண்டர்நேனல் குளோபல்’ பட்டத்தை வென்ற ஹஜிதா, 2024லும் கோலாலம்பூரில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார். அப்போது அவருக்கு ‘மிசஸ் கொன்ஜீனியேலிட்டி’ பட்டம் கிடைத்தது.

ஆனால், அனைத்துலக அழகுராணிப் போட்டியில், முதல் மூன்று நிலைகளில் வருவது அவருக்கு இதுவே முதன்முறை.

துணிச்சலுக்குக் கிடைத்த வெகுமதி

“மியன்மாரில் நடந்துவரும் உள்நாட்டுக் கலவரத்தால், என் உற்றார் உறவினர் பலரும் என்னை இப்போட்டிக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தினர்.

“போட்டிக்கு ஒரு மாதமே இருந்த வேளையில், நான் அதுபற்றி யோசித்தேன். பிள்ளைக்குத் தாயாரான நான், பாதுகாப்பாகத் திரும்புவேனா எனப் பயந்தேன். ஆனால், என் நாட்டை நான் பிரதிநிதிப்பதால் இப்போட்டியில் கலந்துகொள்வதை என் கடமையாக எண்ணிக் கலந்துகொண்டேன்,” என்றார் ‌‌ஷஜிதா, 33.

தன் மகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால், இதற்கு முன்பு சில அனைத்துலக அழகுராணிப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புகளையும் அவர் கைவிட நேரிட்டது. ஆனால், தன் மகள் வெளிநாட்டுக்குச் செல்லும் அதே சமயம் இப்போட்டி நடைபெற்றதால் ஷஜிதாவின் ஆசை கைகூடியது.

இப்போட்டியில் ‌‌ஷஜிதாவுக்கு ‘மிசஸ் ஃபிரண்ட்ஷிப்’ பட்டமும் கிடைத்தது.

“சிங்கப்பூர், விருந்தோம்பல்மிக்க நாடு. பல சுற்றுப்பயணிகளையும் அரவணைக்கிறது. மற்ற போட்டியாளர்களுடன் பேசும்போதும், புதிய நட்புகளை உருவாக்கும்போதும் நானும் அதே பண்புகளை வெளிப்படுத்த விரும்பினேன்,” என்றார் ‌‌ஷஜிதா.

பல புதிய அனைத்துலக நட்பு வட்டாரங்களை உருவாக்கும் வாய்ப்பை அழகுராணிப் போட்டி மூலம் பெற்றார் ‌‌ஷஜிதா.
பல புதிய அனைத்துலக நட்பு வட்டாரங்களை உருவாக்கும் வாய்ப்பை அழகுராணிப் போட்டி மூலம் பெற்றார் ‌‌ஷஜிதா. - படம்: ‌‌ஷஜிதா

அழகுராணிப் போட்டிகளில் தாம் கலந்துகொள்வதன் மூலம் இந்தியப் பெண்களுக்கு, குறிப்பாக தம் மகள் உள்ளிட்ட இளையர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறார் ‌‌ஷஜிதா.

“பெரும்பாலான இந்தியப் பெண்கள் வேலை, வீடு, பிள்ளைகள் என்று மட்டுமே சிந்திக்கிறார்கள். அழகுராணிப் போட்டிகளில் கலந்துகொண்டால், ‘நீ ஏன் இதுபோன்ற உடையை அணிகிறாய்?’, ‘நீ உன் பிள்ளைகளை நிராகரித்துவிட்டாய்’ என சமுதாயத்தில் எழும் விமர்சனங்களுக்கு அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை விட்டுவிட்டு, தமக்கென பன்முக அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளும்படி நான் பெண்களை ஊக்குவிக்கிறேன்.

“மக்கள் அஞ்சுவதை நாம் செய்யத் துணிந்தால், விண்ணையும் எட்டலாம்,” என்றார் ‌‌ஷஜிதா.

இப்போட்டிகளால் தனக்குக் கிடைத்த புதிய அனுபவங்கள் பற்றி சொன்ன அவர், “கடினமாக இருந்தாலும் முயற்சி செய்யும்போது கிடைக்கும் பலன்கள் பெரும் மனநிறைவைத் தரும்,” என்றார்.

மக்கள் அஞ்சுவதை நாம் செய்யத் துணிந்தால், விண்ணையும் எட்டலாம்.
‌‌ஷஜிதா அமீன்

அன்றாடம் ஒரு நவீன உடை

தகுதிச்சுற்றில் சிங்கப்பூரின் சின்னங்களான ஆர்க்கிட், சிங்கம் இரண்டையும் கொண்ட நீடித்த நிலைத்தன்மைமிக்க உடையை அணிந்தார் ‌‌‌ஷஜிதா.

சிங்கப்பூரின் சின்னங்களான ஆர்க்கிட், சிங்கம் என இவ்விரண்டையும் கொண்ட நீடித்த நிலைத்தன்மைமிக்க உடையை அணிந்தார் ‌‌‌ஷஜிதா.
சிங்கப்பூரின் சின்னங்களான ஆர்க்கிட், சிங்கம் என இவ்விரண்டையும் கொண்ட நீடித்த நிலைத்தன்மைமிக்க உடையை அணிந்தார் ‌‌‌ஷஜிதா. - படம்: ‌‌ஷஜிதா

போட்டியின் முதல் நாளில், இந்தியப் பண்பாட்டையும் சிங்கப்பூரின் அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சிவப்பு, வெள்ளை நிறச் சேலையை அவர் உடுத்தினார்.

பண்பாட்டுச் சுற்றில், இந்தியப் பண்பாட்டையும் சிங்கப்பூரின் அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சிவப்பு, வெள்ளை நிறச் சேலையை உடுத்தினார் ‌‌ஷஜிதா.
பண்பாட்டுச் சுற்றில், இந்தியப் பண்பாட்டையும் சிங்கப்பூரின் அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சிவப்பு, வெள்ளை நிறச் சேலையை உடுத்தினார் ‌‌ஷஜிதா. - படம்: ‌‌ஷஜிதா

இரண்டாம் நாளில், சிங்கப்பூரின் பல்லினத்தன்மையை வெளிப்படுத்த ‘சொங்கெட்’ எனும் மலாய் பாரம்பரியத் துணியால் நெய்யப்பட்ட சீன அரச உடை பாணியிலான உடையை அவர் அணிந்தார். திறன் சுற்றில், சிங்கப்பூரின் புகழ்பெற்ற ‘ஹோம்’ எனும் தேசிய தினப் பாடலையும் அவர் பாடினார்.

குறிப்புச் சொற்கள்