சிறுகதையின் சிறந்த மொழியாக்கம்: தமிழ்ப் படைப்புக்கு தங்கமுனை விருது

2 mins read
எழுத்தாளர் ராம்சந்தருக்கு இரண்டாவது முறையாக தங்கமுனை விருது
b97c5582-8542-4a5f-8455-ebfdd1642b0a
தங்கமுனை விருதில் மொழிபெயர்ப்புப் பிரிவில் முதல் பரிசு பெற்றார் ராம்சந்தர், 36, (இடது). சுஜா செல்லப்பனின் ‘அகண்’ சிறுகதையை மொழிபெயர்த்ததற்காக அந்தப் பரிசை ராம்சந்தர் பெற்றார். - படங்கள்: தங்கமுனை விருது

பத்து ஆண்டுகளுக்குமுன் சிறுகதைப் பிரிவில் தங்கமுனை விருதில் பரிசு வென்ற ராம்சந்தர், 36, இவ்வாண்டு அதே போட்டியின் மற்றொரு பிரிவில் பரிசைப் பெற்றுள்ளார்.

தேசிய நூலக வாரியத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மூத்த பணித்திட்ட நிர்வாகியான இவர், இம்முறை தமிழ்ச் சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்து முதல் பரிசை வென்றார். 

ஓய்வு நேரத்தில் ராம்சந்தருக்கு எழுதுவதிலும் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம். அறிவியல் புதினத்திற்கான ‘அரூ’ இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவரான இவர், எழுத்தின்மீது பேரார்வம் உள்ளவர்.

எழுத்தாளர் சுஜா செல்லப்பனின் ‘அகண்’ சிறுகதையை மொழிபெயர்த்துள்ள திரு ராம்சந்தர், “சுஜாவின் எழுத்துநடை சுருக்கமானாலும் அழுத்தமாக இருக்கும். சொற்களை அவர் நன்கு தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவார்,” என்றார்.

திருவாட்டி சுஜா தமக்கு அறிமுகமானவர் என்ற முறையில் அவரது சிறுகதையை மொழிபெயர்த்துப் பரிசு வாங்கியதை நினைத்து மகிழ்வதாக அவர்சொன்னார்.

மொழிபெயர்ப்பின்போது அவரது நயமிகு சொல்லாடலை ஆங்கிலத்தில் சரியான முறையில் வெளிப்படுத்த தாம் முற்பட்டதாக திரு ராம்சந்தர் கூறினார். 

திருவாட்டி சுஜாவின் எழுத்துப் பண்பை மொழிபெயர்ப்பில் கொண்டுவர இயலுமா எனத் தமக்கு முதலில் தயக்கம் நிலவியதை இவர் நினைவுகூர்ந்தார். 

“‘அகண்’ என்ற தலைப்பே சவாலானதாக இருந்தது. ‘அகண்’ என்பது அல்லாத கண் எனப் பொருள்படுவதுபோலத் தோன்றியதால் ‘ஒக்கியுலஸ்’ என்ற லத்தீன் சொல்லின் அடிப்படையில் இறுதியில் ‘அன்-ஒக்கியுலஸ்’ (Un-Oculus) என்ற தலைப்பைச் சிறுகதைக்கு வைத்தேன்,” என்றார் திரு ராம்சந்தர்.

தாயாருக்கு மூன்றாவது கண் இருப்பது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘அகண்’ சிறுகதை அமைந்துள்ளது. 

தமது சிறுகதைக்கு திரு ராம்சந்தர் செய்துள்ள மொழியாக்கத்தைப் பாராட்டிய திருவாட்டி சுஜா, இவர் தமது ஆங்கிலக் குரலாகவே இருந்ததாகக் கூறினார். 

“மலையாளக் கவிதை நூல் ஒன்றைத் தமிழில் மொழியாக்கம் செய்த நான், மொழிபெயர்ப்பின் சவால்களை அறிவேன். ஆகவே, ராம்சந்தர் எனது கதையின் தொனி மாறாமல் மொழியாக்கம் செய்திருப்பது எனக்கு நிறைவைத் தந்துள்ளது,” என்று திருவாட்டி சுஜா கூறினார்.

இதற்கு முன்னதாக மொழிபெயர்ப்புகளைச் செய்து வந்ததாகக் குறிப்பிட்ட திரு ராம்சந்தர், எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் ‘அன்வைண்டிங்’ சிறுகதைத் தொகுப்பில் தமது சில படைப்புகள் இடம்பெற்றதாகக் கூறினார். 

அறிவியல் புதினத்தை விரும்பிப் படிக்கும் திரு ராம்சந்தர், அமெரிக்க எழுத்தாளர் ஐசக் அசிமோவின் ரசிகராவார். தமிழ்ச் சிறுகதைகளில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்றோரின் எழுத்துகளை விரும்பிப் படிப்பதாக இவர் கூறினார்.

கவிதைகளையும் வாசிப்பதாகக் கூறிய திரு ராம்சந்தர், தமக்குப் பிடித்தமான ஆங்கிலக் கவிஞர் மேரி ஒலிவர் என்றார்.

எஸ்ஐஏ உபகாரச் சம்பளத்தில் 2007ல் சிங்கப்பூருக்கு வந்து பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்ட திரு ராம்சந்தர், அதன் பின்னர் இங்கு வேலை செய்து வருகிறார்.

தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றுக்கு இம்முறை முதல் பரிசு கிடைத்திருப்பது குறித்து இவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

2023ல் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புப் பிரிவு, பிற மொழிப் படைப்புகளைக் கூடுதலான வாசகர்களிடம் கொண்டுசேர்க்க வழிவகுத்திருப்பதாக தங்கமுனை விருது ஏற்பாட்டாளரான ஆர்ட்ஸ் ஹவுஸ் நிர்வாக இயக்குநர் ஷேரன் டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்