பாரம்பரியத்தின் கொண்டாட்டம்: சூலியா சமூகத்தின் கல்யாண விருந்து

பாரம்பரியத்தின் கொண்டாட்டம்: சூலியா சமூகத்தின் கல்யாண விருந்து

படம்: ஷாபாஸ் நிறுவனம்

28 Jul 2026 - 7:27 pm

3 mins read

பாரம்பரிய உணவு வகைகள் அடங்கிய விருந்து பொதுவாகத் திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் விசேடங்களிலும் மட்டுமே பரிமாறப்படுவது வழக்கம். தனியார் உணவகங்களிலோ கடைகளிலோ இவற்றைத் தனித்துச் சுவைப்பது எளிதன்று.

அத்தகைய கல்யாண விருந்து ஒன்றின் மதிப்பை உணர்ந்து, மணமக்களைவிட உணவை முதன்மையாகக் கொண்டாடும் திருமண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது ஷாபாஸ் நிறுவனம்.

மண்டபத்தின் விழாக் கோலம், சீரகச் சம்பா அரிசி உணவின் வாசம், மனம் மயக்கும் மங்கள இசை ஆகியவை நிரம்பி வழிந்த அரங்கில், ‘பாரம்பரியங்களின் கொண்டாட்டம்: சூலியா அனுபவம் 2.0’ (A Wedding of Traditions: The Chulia Experience 2.0) என்ற நிகழ்ச்சி ஜூலை 19ஆம் தேதி நடைபெற்றது.

முன்னோடிகளின் வரலாற்றைப் பறைசாற்றிய விழா

இந்நிகழ்ச்சி சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் அதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய ‘சூலியா’ (Chulias) எனப்படும் தமிழ் முஸ்லிம் முன்னோடிகளின் மரபையும் பண்பாட்டையும் வெளிச்சமிட்டுக் காட்டியது.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இவ்விருந்து நிகழ்ச்சியில், பாரம்பரிய இசை, பண்பாடு சார்ந்த விளக்கவுரைகள், புதிர்ப் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றன.

விருந்தினர்க்கு ‘சென்டோல்’ (Chendol), சூடான பானங்கள், மருதாணிக் கூடம், நிழற்படக் கூடம் போன்ற சுவாரசியமான சிறப்பம்சங்கள் அவ்வரங்கின் திருமணக் களையை மேலும் கூட்டின.

செண்டோல், சூடான பானங்கள் போன்றவற்றை வரிசையில் நின்று ஆவலுடன் பங்கேற்பாளர்கள் பெற்றுச் சென்றனர்.
செண்டோல், சூடான பானங்கள் போன்றவற்றை வரிசையில் நின்று ஆவலுடன் பங்கேற்பாளர்கள் பெற்றுச் சென்றனர். - படம்: ஷாபாஸ் நிறுவனம்

பிரியாணி வகைகளுக்காக புகழ்பெற்ற ஷாபாஸ் நிறுவனம், பிரியாணி இல்லாத விருந்தைப் படைத்தது இந்நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்கது.

“இந்திய முஸ்லிம் திருமணம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவதும் பிரியாணிதான். எங்களின் புகழ்பெற்ற படைப்பும் பிரியாணிதான். ஆனால், வழக்கமாக வெளியில் கிடைக்காத சூலியா சமூகத்தின் ஆழமான பண்பாட்டையும், பாரம்பரிய உணவுகளையும் அப்படியே மாற்றாமல் மக்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டோம்,” என்றார் ஷாபாஸ் நிறுவனத்தின் தலைவர் அப்துல் மாலிக் அப்துல் சலாம்.

கண்களுக்கும் நாவுக்கும் விருந்தளித்த ‘5 கறிச் சோறு’

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது சூலியா சமூகத்தினரின் புகழ்பெற்ற ‘5 கறிச் சோறு’ விருந்து.

இவ்வுணவில், நெய்ச்சோறு, கலியா (ஈரல் உருளைக்கிழங்கு மசாலா), ஆட்டுக்கறி குருமா, கோழிக்கறி சம்மா, தால்ச்சா, கத்தரிக்காய்ப் பச்சடி, சீனித் துவையல் (தக்காளி, வாழைப்பழம், எலுமிச்சை சேர்ந்த கலவை) ஆகியவை அமைந்தன.

பரிமாறப்பட்ட ‘5 கறிச் சோறு’ விருந்து.
பரிமாறப்பட்ட ‘5 கறிச் சோறு’ விருந்து. - படம்: ஷாபாஸ் நிறுவனம்

பெரும்பாலும் சூலியா மக்களின் வீடுகளில் மட்டுமே சமைக்கப்படும் இவ்விருந்து, பங்கேற்பாளர்களுக்கு ஓர் அரிய அனுபவமாக அமைந்தது.

பண்பாட்டுப் பாலம்

சாதி, சமய, இன எல்லைகளைத் தாண்டி வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்கள் ஒன்றுகூடி, சூலியா பண்பாட்டைக் கற்றுக்கொள்ளவும் அச்சமூகத்தின் பாரம்பரிய உணவைச் சுவைத்துக் கொண்டாடவும் இந்நிகழ்ச்சி சிறந்த தளமாக அமைந்தது.

தமிழ் பேசாத பார்வையாளர்களும் நிகழ்வை முழுமையாகப் புரிந்து மகிழும் வகையில், உரையாடல்களும் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றன.

வேலைப் பரபரப்புக்கு இடையிலும் இந்த அனுபவத்தைத் தவறவிடக் கூடாது என்பதற்காக அவசரமாக விரைந்துவந்தவர்களில் 50 வயது சீனப் பெண்மணியான திருவாட்டி ரஜினா சின்னும் ஒருவர்.

அவர் நிகழ்ச்சியின் நிறைவில்தான் வருகை தந்தார். இருப்பினும், விருந்து நிகழ்ச்சி மறக்கவியலா அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் இதைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. கடைசி நேரத்தில்தான் வரமுடிந்தது என்றாலும் இங்கிருந்த மக்களின் விருந்தோம்பல், எடுத்துரைக்கப்பட்ட வரலாற்றுக் கூறுகள் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன,” என்றும் மீண்டும் இதுபோன்ற வாய்ப்பு கிட்டினால் மீண்டும் பங்கேற்பேன் என்றும் திருவாட்டி சின் கூறினார்.

உணவை ஒரு பாலமாகக் கொண்டு, வெவ்வேறு இனத்தவர்களை ஒரே மேசையில் ஒன்றுசேர்த்ததே இந்நிகழ்ச்சியின் உண்மையான வெற்றியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சூலியா சமூகத்தின் இவ்விருந்து அனுபவத்தின் அடுத்த பதிப்பான ‘சூலியா அனுபவம் 3.0’ (Chulia Experience 3.0) அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு இன்ஸ்டகிராமில் @shaabazkitchen பக்கத்தைப் பின்தொடரலாம்.

குறிப்புச் சொற்கள்
உணவுபாரம்பரியம்கொண்டாட்டம்விருந்து