நாட்டின் 61வது பிறந்தநாளைச் சமூகத்துடன் கொண்டாடும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

நாட்டின் 61வது பிறந்தநாளைச் சமூகத்துடன் கொண்டாடும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

08 Aug 2026 - 10:24 pm

2 mins read

மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ள ‘ஓ’ஜாய் லிமிடெட்டின் (‘O’Joy Limited) ‘எஸ்ஜி61க்கு $61 நன்கொடை’ (Donate $61 for SG61) என்ற இயக்கம், இந்த ஆண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ஒரு புதிய, ஆழமான அர்த்தத்தைக் கொடுத்துள்ளது.

தனிமை, மறதிநோய், மனநலச் சவால்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் முதியோர்க்குத் தேவையான முறையான ஆலோசனைகளையும் பராமரிப்புச் சேவைகளையும் வழங்க இந்த நிதி நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக, தேசிய தினம் என்றாலே குடும்பங்களும் நண்பர்களும் அக்கம்பக்கத்தினரும் ஒன்றுகூடி கொண்டாடுவதுதான் வழக்கம்.

ஆனால், அவற்றுடன் இவ்வாண்டு சிங்கப்பூரின் வர்த்தக நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் தங்களின் தனித்துவ முறையில் நாட்டின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றன.

‘ஒன்றிணைந்து சிங்கப்பூரை உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளையொட்டி சமூகப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘சாஃப்ரா சிங்கப்பூர்’ மாபெரும் சமூகச் சுவரோவியங்களைத் தீட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

வெறும் கேளிக்கைக்காகவும் வியாபாரத்திற்காகவும் மட்டுமன்றி, குடும்பங்கள் ஒன்றாக இணைந்து வண்ணம் தீட்டும் சமூக இடமாகவும் தங்களின் மன்ற வளாகங்களை மாற்றியுள்ளது, சாஃப்ரா.

அத்துடன், அது தேசிய தினத்தன்று நடைபெறவிருக்கும் 6.1 நொடிச் சவால்கள் மூலம் பிரத்தியேக எஸ்ஜி61 நினைவுப் பரிசுகளை வழங்கி, பாரம்பரியமிக்க ‘கம்போங்’ உணர்வை மக்களிடையில் மீண்டும் நிலவச் செய்கிறது.

சமூகத்தை ஒன்றிணைக்கும் இம்முயற்சிகள், சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்வோடு கலந்த உணவு, பான நிறுவனங்களின் தளத்திலும் அழகாகப் பிரதிபலிக்கின்றன.

அவ்வாறு நாட்டின் 61வது பிறந்தநாளை மக்களுடன் கொண்டாடும் நிறுவனங்களில் ஒன்று, பிரபல ‘பபுள் டீ’ (bubble tea) நிறுவனமான ‘பிளேமேட் (PlayMade).

வெறும் வியாபார உத்தியாக இல்லாமல், ‘61’ என்ற எண்ணை மையப்படுத்தி தங்களின் முன்னெடுப்புகளை வடிவமைத்துள்ளது அந்நிறுவனம்.

தங்களின் உணவுப் பண்டங்கள், பானங்கள் ஆகியவற்றின் விலைகளை $0.61, $6.10 என அது நிர்ணயித்திருக்கிறது.

மேலும், ‘61 ஆண்டுகள், 61 கோப்பைகள்’ என்ற கருப்பொருளுடன் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 61 பானங்களை இலவசமாக வழங்கும் பரிசளிப்புத் திட்டத்தின் மூலம் அது மக்களை ஈர்க்கிறது.

அதேபோல, சிங்கப்பூரர்களின் அபிமான ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா பிளேஸ்’ (Springleaf Prata Place) உணவகம், ‘எஸ்ஜி61’ஐ முன்னிட்டு ஜூலை 1 முதல் 61 நாள்களுக்குச் சலுகைகளை வழங்குகிறது.

$0.61 பிளெய்ன் பரோட்டா, $0.99 முட்டை பரோட்டா, $6.10 ‘மினி அல்டிமேட் முர்தபாக்’ (Mini Ultimate Murtabak) போன்ற உணவுகளோடு, தேசிய தினத்தன்று ஒரே ரசீதில் $61க்கு மேல் செலவழித்தால் $6.10 உடனடித் தள்ளுபடியையும் அந்த உணவகம் வழங்குகிறது.

வர்த்தக நிறுவனங்கள் வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமன்றி, சமூக நல்லெண்ணங்களுடன் செயல்படுவது, சிங்கப்பூரின் 61வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ஒரு தனித்துவமான அழகையும் பெருமையையும் சேர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.

குறிப்புச் சொற்கள்