லசால் கலைக் கல்லூரியில் குறும்பாடத்திட்டமாக பரதநாட்டியம் அறிமுகம்

2 mins read
88ce9588-bc89-498c-91dd-cc41aa903e5e
சிங்கப்பூரின் லசால் கலைக் கல்லூரி பரதநாட்டியத்தைக் குறும்பாடத்திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. - படம்: லசால் கலைக் கல்லூரி

சிங்கப்பூரின் லசால் கலைக் கல்லூரி, பரதநாட்டியத்தைக் குறும்பாடத்திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.

லசால் வழங்கும் பொதுமக்களுக்கான தொடர்கல்வித் திட்டத்தில் பரதநாட்டியம் இணைக்கப்படுகிறது. இதுவரை பேலே (ballet), நடன அசைவு சிகிச்சை, சமகால நடனம் போன்றவைதான் நடனப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன.

இந்திய அறிவுசார்க் கட்டமைப்புகளில் பரதநாட்டியத்தின் வரலாறு, அதன் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றோடு புலம்பெயர்ந்த இந்தியர்களுக்குப் பரதநாட்டியம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகியன புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறும்.

அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பரதநாட்டியம் கற்பிக்கப்படும்.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பரதநாட்டியம் கற்பிக்கப்படும். - படம்: பின்டிரஸ்ட்

பரதநாட்டியத்தைப் புதிதாகக் கற்க விரும்புவோருக்கும் அதைக் கற்றுவருவோருக்கும் இப்பாடத்திட்டம் அடிப்படைகளை வலியுறுத்தும் வகையில் அமையும்.

பரதநாட்டியத்தின் அடிப்படை அசைவுமுறையான ‘அடவு’, கை அசைவுகளான ‘ஹஸ்த பேதா/விநியோகா’, முக்கிய உடல் உறுப்புவகைகளின் அசைவுகளான ‘அங்கலக்‌‌ஷனா’, கால், பாத அசைவுகளான ‘பாத/மண்டல பேதா’, இசைத் தாளம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ‘அபிநயா’, ‘ரசானுபவா’ ஆகியவற்றை இப்பாடம் விளக்கும்.

லசால் கலைக் கல்லூரியின் துணை விரிவுரையாளரும் ‘திரிபடாக்கா’ நடன நிறுவன தோற்றுவிப்பாளருமான திருவாட்டி துர்கா மணிமாறன் இப்பாடத்தை வழிநடத்துவார்.

“பலதரப்பட்ட சமூகத்தினரையும் பெரியவர்களையும் மனத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பரதநாட்டிய வகுப்புகளில் கடுமையான பயிற்சிகளைச் செய்யவேண்டிய சூழல் ஏற்படலாம் என எண்ணி பெரியவர்கள் அவற்றில் சேரத் தயங்கக்கூடும். அவர்களுக்கும் ஏற்ற விதத்தில் பரதநாட்டியப் பாடம் கற்பிக்கப்படும்,” என்றார் திருவாட்டி துர்கா.

எட்டு வாரங்கள் நீடிக்கும் இப்பாடத்திட்டம், ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 22 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 7 முதல் 9 மணி வரை நடைபெறும். 18 வயதுக்கு மேற்பட்ட பத்து மாணவர்களே ஒவ்வொரு வகுப்பிலும் சேர்த்துக்கொள்ளப்படுவர். தற்போது ஒரு வகுப்புக்கே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலும் அதிக வரவேற்பு இருந்தால் கூடுதல் வகுப்புகள் வழங்கப்படலாம்.

பாடத்தில் இணைவதற்கான கட்டணம் $500. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதி மூலம் கட்டணம் செலுத்தலாம். வகுப்பில் இடம் இருக்கும்வரை புதிய மாணவர்கள் சேர்க்கப்படுவர். பாடம் தொடங்குவதற்கு ஐந்து நாள்கள் முன் வரை விண்ணப்பிக்கலாம்.

மேல்விவரங்களுக்கு https://www.lasalle.edu.sg/continuing-education/short-courses/new-bharatanatyam-adults-i-beginners இணையத்தளத்தை நாடலாம்.

பரதநாட்டிய வகுப்புகளில் கடுமையான பயிற்சிகளைச் செய்யவேண்டிய சூழல் வரலாம் என எண்ணி, பெரியவர்கள் அவற்றில் சேரத் தயங்குகின்றனர். அவர்களுக்கும் ஏற்ற விதத்தில் பரதநாட்டியப் பாடம் கற்பிக்கப்படும்.
லசால் கலைக் கல்லூரியின் துணை விரிவுரையாளர் துர்கா மணிமாறன் 

லசால் கலைக் கல்லூரியின் மேடைக்கலைகள் சார்ந்த பட்டயம், பட்டப்படிப்புத் திட்டங்களிலும் கதக், பரதநாட்டியம் போன்ற இந்திய நடனமுறைகள் கற்பிக்கப்பட்டுள்ளன. லசால் வழங்கும் அனைத்துலக சமகால நடனமுறைகள் பட்டப்படிப்பு (BA (Hons)) பாரம்பரிய இந்திய நடனமுறைகளை உள்ளடக்குகிறது.

ஏப்ரல் 4, 5ஆம் தேதிகளில் லசால் நடனப் பட்டயப் படிப்பு மாணவர்களின் ‘வேர்கள்/பாதைகள்’ நடன நிகழ்ச்சியிலும் பரதநாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட நடனம் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்