மகாகவி பாரதியைக் கொண்டாடும் வகையிலும் அவரது சமூக நீதிக் கருத்துகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நோக்கிலும் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பாரதியார் விழாவை நடத்தி வருகிறது.
இவ்வாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற அந்த விழாவில் ஜூரோங் வெஸ்ட் - வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பாலர் பள்ளிப் பிள்ளைகள் முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போட்டிகளில் வென்ற 206 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. செப்டம்பர் 20ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் அந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழ் வளர்க்க குடும்பங்களுக்கு அமைப்புகள் உதவலாம்
தமிழ்மொழி பள்ளியில் பாடமாக இருப்பது மட்டுமே போதாது என்ற டாக்டர் ரசாக், அது உயிரோட்டமான மொழியாக இருப்பதற்கு வீட்டிலும் சமூகத்திலும் பிள்ளைகளுக்குத் தமிழ் பேசும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“அந்த வகையில், தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் சிறப்பாகச் செயல்பட்டு, பல போட்டிகளை நடத்தி, மாணவச் செல்வங்களுக்கு அந்த வாய்ப்பினை அளிக்கிறது,” என்று அவர் பாராட்டினார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் பற்றையும் வளர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பெற்றோரது அத்தகைய முயற்சிகளுக்கு அமைப்புகளும் கைகொடுக்கலாம் என்றார் அவர்.
“பல அமைப்புகள் இருக்கின்றன. அவை தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் தமிழ் பேசும் கருவித்தொகுப்பை வழங்கலாம். அது ஓர் அட்டை விளையாட்டாகவோ, போட்டிப் புத்தகமாகவோ, குறுக்கெழுத்துப் புதிராகவோ இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
ஷாநவாசுக்குப் பாரதியார் விருது
உணவுக்கடை நடத்துநரும் எழுத்தாளருமான ஷாநவாஸ், இவ்வாண்டுக்கான பாரதியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் விருதைப் பெறுவதில் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறிய திரு ஷாநவாஸ், படைப்பாளிகளுக்கும் கதைசொல்லிகளுக்கும் இதுபோன்ற விருதுகள் ஆர்வமும் ஊக்கமும் அளிப்பதாகக் கூறினார்.
பிள்ளைப்பருவம் முதல் வணிகராகச் செயல்படும் காலகட்டம் வரையில் எழுத்து உலகில் தாம் ஈடுபட்டுவருவது குறித்து குடும்பத்தினர், சுற்றத்தார் சிலரும் விமர்சித்ததாகச் சிராங்கூன் டைம்ஸ் இதழாசிரியராகவும் செயல்படும் திரு ஷாநவாஸ் குறிப்பிட்டார்.
கம்பன் கழகம் உருவாக்கப்படும் என அறிவிப்பு
பின்னர், சிங்கப்பூரைச் சேர்ந்த பேச்சாளர் உமாசங்கர், நிகழ்ச்சிக்காகத் திரண்ட அனைவருமே பாரதிகளே எனப் புகழ்ந்தார். தமிழர்கள் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவரும் தமிழ் மக்களே என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
“பாரதியார் தன் வாழ்நாளில் எந்த விருதையும் பெற்றதில்லை. ஆனால், அவர் பெயரில் பல ஆண்டுகளாக நாம் விருதுகளை வழங்கி வருகிறோம். அப்படி விருது வாங்கிய பலரில், இந்த அரங்கிலிருக்கும் ஒவ்வொருவரும் பாரதியார்தான்,” என்று அவர் கூறினார்.
அதன்பின்னர் உரையாற்றிய தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா, பாரதியாரின் கவிதைகளிலுள்ள புதுமைக் கருத்துகளைப் பற்றி விவரித்தார்.
‘உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை’ என்று பாடிய பாரதி ஒரு தேசக்கவி அல்லது தெய்வக் கவி என்பதைத் தாண்டி, இப்பேரண்டத்தோடு தம்மை இணைத்துக்கொண்ட ‘பிரபஞ்சக் கவி’ என்று அவர் வருணித்தார்.
கம்பன் கழகம் சிங்கப்பூரில் அமைக்கப்படவேண்டும் எனத் திருவாட்டி பர்வீன் தம் உரையில் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, திரு ஹரிகிருஷ்ணன், செல்லகிருஷ்ணன்-சரோஜினி இணையரை மேடைக்கு அழைத்து, கம்பன் கழகம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
