சுறுசுறுப்பான காலசைவுகள், ‘டோல்’ இசைக்கருவியின் தாள ஒலிகளுடன் கூடிய விரைவான கை அசைவுகள் கொண்ட ‘பிஹூ’ நடனக்கலை, மே 25ஆம் தேதி, இந்திய மரபுடைமை நிலையத்தில் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அசாம் மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற ‘பிஹூ’ நடனப் பயிலரங்கில் பெரியோர், சிறார் என ஏறத்தாழ 50 பேர் கலந்துகொண்டனர்.
ஆனந்தா மரபுக்கலைகள் கூடம் (ஆட்டம்) தொடர்ந்து நடத்திவரும் ‘நம் மரபு’ தொடரின் நான்காவது பயிலரங்காக இந்த ‘பிஹூ’ பாரம்பரிய நடனப் பயிலரங்கு நடைபெற்றது.
இதற்கு முன்பு சக்கைக்குச்சி, தேவராட்டம், துடும்பாட்டம் ஆகிய மரபுக்கலைகளுக்கான பயிலரங்குகள் இந்தத் தொடரில் இடம்பெற்றன.
கலாசார விழிப்புணர்வை உருவாக்குவதே ஆனந்தா மரபுக்கலைகள் கூடத்தின் நோக்கம் என்றார் இத்தொடர் செவ்வனே நடப்பதற்குரிய நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கும் லையனல் ஹீரன், 29.
“உலகெங்கிலும் உள்ள பல்வேறு தனித்துவமான பாரம்பரிய இந்தியக் கலை வடிவங்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவருவதால் அவற்றின் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது,” என்றார் அவர்.
ஆனந்தா மரபுக்கலைகள் கூடத்துடன் இணைந்து சிங்கப்பூர் அசாமியர்கள் சங்கம் இந்தப் பயிலரங்கை வழிநடத்தினார்கள்.
பிரபல அசாமிய நடனக் கலைஞரும் நடன ஆசிரியருமான ஜாஸ்மின் சேத்தியா புக்கான், 38, பங்கேற்பாளர்களுக்கு நடனத்தைக் கற்பித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடைய அசைவுகளுக்குப் புகழ்பெற்ற டோல் கலைஞர் மனோப் கோகோய் பொருத்தமான தாளங்களை வழங்கினார்.
“அசாம் மாநிலத்தில் பலதரப்பட்ட பாரம்பரிய நடனங்கள் உள்ளன. ‘பிஹூ’ நடனக்கலை அவற்றில் மிகவும் புகழ்பெற்றது” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார் திருவாட்டி ஜாஸ்மின்.
வெவ்வேறு வயதினருக்கு அந்த நடனக்கலையை அவரவர் திறனுக்கேற்பக் கற்றுத் தந்தது ஒரு சிறப்பான அனுபவம் என்றார் அவர்.
சிங்கப்பூரில் வளர்ந்த அசாமியச் சிறுமி மோயிரா, 8, இந்தப் பயிலரங்கின் மூலம் தனது பாரம்பரியத்தை மேலும் புரிந்துகொண்டு, பாராட்டும் வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.
“என்னுடைய கலாசாரம் சார்ந்த ‘பிஹூ’ நடனக்கலையைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் மோயிரா.