வரலாறு, புராணக் கதைகள்மீதும் இசைமீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, கீர்த்தனைப் பாடல்களுடன், அவை குறித்த அழகிய ஆங்கில விளக்கங்களையும் அளிக்கும் மாறுபட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா ஸ்ரீகாந்த்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் (சிஃபாஸ்) தமது இசைப்பயணத்தைத் தொடங்கிய இவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கர்நாடக இசையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
திருவாட்டி ஐஸ்வர்யா வரலாற்றுத் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த இருபதாண்டுகளாக இசையில் அதிக ஈடுபாடு காட்டிவரும் இவருக்கு, எழுத்திலும் மிகுந்த ஆர்வமுண்டு. இரு புனைகதைகளை எழுதி நூலாக வெளியிட்டுள்ள இவருக்கு, இசையையும் கதைகளையும் இணைக்கும் சிந்தனை பிறந்தது.
“சிறு வயதிலிருந்தே ‘ஹரிகதா’ எனப்படும் பாடல்களுடன் சேர்த்துக் கதைகூறும் வடிவத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அதேபோல மார்கழி மாதக் கச்சேரிகளும் எனக்குப் பிடிக்கும். இவ்விரண்டையும் கலந்து நிகழ்ச்சி படைக்க முடிவுசெய்தேன்,” என்றார் ஐஸ்வர்யா.
“தமிழில் உள்ள கீர்த்தனைகளைப் பாடி, அதையொட்டிய கதைகள், விளக்கங்களை என்னால் மிகச் சரளமாகப் பேச இயலும் ஆங்கில மொழியில் படைக்கிறேன். இந்த இருமொழிக் கச்சேரிகள் மூலம் கதைகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் எழுதும் ஆழமான விளக்கங்களைச் சொல்வதில் எனக்கும் பெருமகிழ்ச்சி,” என்று இவர் சொன்னார்.
அண்மையில், தேவியைக் குறித்தும் அவரது புராணக் கதைகளையும் சொல்லும் ‘தாமரையும் பெண்சிங்கமும்’ (Lotus and the Lioness) எனும் நிகழ்ச்சியை இவர் நடத்தினார்.
சிஃபாஸ் வெளிப்புற அரங்கில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற ‘பாடல்கள், கவிதைகள் நிறைந்த மாலைப்பொழுது’ (An evening of Song and versus) எனும் நிகழ்ச்சியில் தேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி என அழைக்கப்படும் பெண்தெய்வம் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றன.
தற்செயலாக ஒருநாள் கிருஷ்ண அவதாரம் குறித்த உரையைத் தாம் கேட்க நேர்ந்ததாகவும், அதனால் ஈர்க்கப்பட்டு ஒரு வசனக் கவிதையை எழுதியதாகவும் சொன்னார் திருவாட்டி ஐஸ்வர்யா.
தொடர்புடைய செய்திகள்
அதில் சில பதிவுகள், தமது பார்வை, உணர்வுகள் அனைத்தும் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட இவர், அதனை முதன்முதலில் தமது கச்சேரியில் படைத்ததையும் சுட்டினார்.
தொடர்ந்து நவராத்திரி விழாக் காலத்தில் பெண் தெய்வம் குறித்துப் பாடிப் பேசியதையும், அடுத்தடுத்து எழுதுவதற்கான பணிகளில் ஈடுபடுவதையும் இவர் பகிர்ந்துகொண்டார்.
இந்த மாறுபட்ட நிகழ்ச்சிக்கு வரவேற்பு இருந்தாலும், தற்போது பொதுவாக நீண்ட கச்சேரிகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதாக இவர் கூறுகிறார்.
“நான் ஒரு மணி நேரம், அதிகபட்சமாக ஒன்றே கால் மணி நேரத்திற்குள் நிகழ்ச்சியை வைத்துக்கொள்வேன். சுவாரசியமான முறையில் நடத்தும்போது அதற்கென ரசிகர்கள் உருவாகிறார்கள்,” என்கிறார் இவர்.
தமது நிகழ்ச்சி முடிந்தவுடன் பலரும் புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டதாகக் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இன்னும் கூடுதலாக ஆராய்ந்து அதிகத் தகவல்களைத் திரட்ட வேண்டும் எனும் ஆர்வம் எழுவதாகவும் திருவாட்டி ஐஸ்வர்யா கூறினார்.
“இருமொழியில் நிகழ்ச்சி படைத்தால் தமிழ் பேசாத, இந்தியர் அல்லாதவர்களையும் சென்றடைய முடிகிறது. நமது இந்திய இசை குறித்த ஆர்வத்தையும் விதைக்க முடியும். எனது வசனத்தின்மூலம் பலரைச் சென்றடையும்போது, இது எனது பணி, இது எனது சொந்த படைப்பு எனும் பெருமிதம் ஏற்படுகிறது,” என நெகிழ்ச்சியுடன் கூறினார் இவர்.
தற்போது ஆண்டுக்கு ஒருமுறை கச்சேரிகளை நடத்தும் திருவாட்டி ஐஸ்வர்யா, “எனக்கான வாய்ப்புகளை நானே உருவாக்கிக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது,” என்றும் சொன்னார்.

