யூனோஸ் வட்டாரத்தைச் சேர்ந்த ஓரறை, ஈறை வீடுகளில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு பிரியாணிப் பொட்டலங்களும் மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.
யூனோஸ் கலாசார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற உணவு விநியோகத்தில் வட்டாரவாசிகள் ஆவலுடன் வரிசையில் நின்று சுடச்சுடப் பரிமாறப்பட்ட பிரியாணிப் பொட்டலங்களைப் பெற்று மகிழ்ந்தனர்.
உணவு விநியோக இடத்திலேயே காலையிலிருந்து மொத்தம் எட்டுப் பானைகளில் சமைக்கப்பட்ட பிரியாணிச் சோறு, கோழிக்குழம்பு ஆகியவற்றின் நறுமணம், சுற்றியுள்ளோரைச் சுண்டியிழுத்தது.
பிரியாணிப் பொட்டலத்துடன் ‘ஃபேர்பிரைஸ் ஃபவுண்டேஷன்’ வழங்கிய மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளும் சேர்த்து வழங்கப்பட்டன.
உணவு விநியோகத் திட்டத்தால் அக்கம்பக்கத்தினர் மகிழ்ச்சி அடைவதாக அல்ஜூனிட் வட்டாரத்தில் நெடுநாள் வசிக்கும் 85 வயது எலிசபெத் இசிக்கில் தெரிவித்தார். தற்போது விலைவாசி ஏறியுள்ள நிலையில் இத்தகைய விநியோகம் ஆறுதலும் ஊக்கம் தரும் வகையிலும் இருப்பதாக 61 வயது வட்டாரவாசி ஃபாத்திமா பீவீ கூறினார்.
உணவு விநியோகத்திற்காகத் தொண்டாற்றிய இந்திய முஸ்லிம் சமூகச் சேவைச் சங்கம், சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவருவதாக அந்த அமைப்பைச் சேர்ந்த உஸ்தாஸ் அலி தெரிவித்தார்.
“ஓரறை, ஈரறை வீடுகள் இருப்பதால் முதலில் அவர்களிடமிருந்து தொடங்கினோம்,” என்று அவர் கூறினார்.
1998ல் தொடங்கிய இந்தச் சங்கம், போதைப்பொருள், குண்டர் கும்பல் போன்ற தீய விவகாரங்களில் இளையர் ஈடுபடுவதைத் தடுப்பதை அமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாக உஸ்தாஸ் அலி தெரிவித்தார்.
இந்திய முஸ்லிம் சமூகச் சேவைச் சங்கம் தற்போது 6,000 குடும்பங்களுக்குச் சேவையாற்றுவதாகக் கூறும் இச்சங்கத்தினர் இளையரைப் பிள்ளைப் பருவம் முதல் ஈடுபடுத்தி அவர்களைத் தலைவர்களாக உருவாக்கிச் சமூகத் திட்டங்களை வழிநடத்துவதாகச் சங்கத்தின் துணைத் தலைவர் இர்ஃபானா பானு கூறினார்.
1,000 பேருக்குச் சமைப்பது என்பது எளிதான காரியமன்று எனத் தெரிவித்த இளம் தொண்டூழியரான முஹம்மது இம்ரான் கான், 23, இதற்குப் பின்னால் மிகப் பெரிய திட்டமிடல் உள்ளதாகக் கூறினார்.
“முந்தைய நாளே வந்து வெங்காயம் நறுக்குவது, இஞ்சி-பூண்டு விழுது அரைப்பது போன்ற ஆயத்தப் பணிகளை முடித்துவிடுவோம். அடுத்த நாள் அதிகாலை 5:30 மணிக்கே சமையல் தொடங்கிவிடும். இங்குள்ள பெரும்பாலானோர் தொண்டூழியர்கள்தாம்,” என்று அவர் கூறினார். இந்திய முஸ்லிம் சமூகச் சேவைச் சங்கமும் ‘என்டியுசி ஃபேர்பிரைஸ்’ அமைப்பும் ஆதரவளிக்கும் இந்த ஏற்பாட்டைத் தொடர விரும்புவதாக அல்ஜுனிட் அடித்தள ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு கூறினார்.
அரசாங்கத்திற்கு அப்பால் செய்யப்படும் சமூக உதவியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இளையர் திரளாக நிகழ்ச்சிக்கு வந்து உதவியது சிறப்புச் சேர்த்ததாக அவர் குறிப்பிட்டார்.
“இத்தகைய நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் இளையருக்குத் தேவையான ஆதரவையும் வேலைகளைச் செய்வதற்கான நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்கும்போது, சமூகத்தில் நல்ல ஒற்றுமை உருவாகிறது,” என்றும் திரு.ஜெகதீஸ்வரன் கூறினார்.
