தனது ஒன்பதாம் ஆண்டு விழாவுடன் புதிய பரிணாமம் காணும் பிஸ்மி வானொலி

தனது ஒன்பதாம் ஆண்டு விழாவுடன் புதிய பரிணாமம் காணும் பிஸ்மி வானொலி

2 mins read
பிஸ்மி வானொலியின் ஒன்பதாம் ஆண்டு விழா: ஒரு மைல்கல்
897cfbf6-1c67-45e2-9682-8b60e27105fe
பிஸ்மி வானொலியின் நிறுவனரும் தலைவருமான சீனி ஜாஃபர் கனி. - படம்: பிஸ்மி வானொலி 

பிஸ்மி வானொலி தனது ஒன்பதாம் ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், ஒரு மிக முக்கியமான மைல்கல்லைக் கொண்டாடியது.

தனது சேவையை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கில், ஒரு லாப நோக்கற்ற அமைப்பாக பிஸ்மி வானொலி உருவெடுக்கிறது.

இந்த மாற்றம் வானொலியின் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதோடு, சமூகத்திற்குத் தொடர்ச்சியான சேவையாற்றவும் வழிவகுக்கும்.

மஸ்ஜித் சுல்தான் அரங்கில், சனிக்கிழமை (ஏப்ரல் 18) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மக்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். - படம்: பிஸ்மி வானொலி 

இந்நிகழ்வில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர், உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம்  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பிஸ்மி வானொலியின் செல்வாக்கு இன்று எல்லைகளைத் தாண்டி ஜப்பான், கொரியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பரவியுள்ளதுடன், அந்தந்த மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்க அந்நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

பிஸ்மி வானொலியின் நிறுவனரும் தலைவருமான சீனி ஜாஃபர் கனி, “இந்த ஒன்பதாம் ஆண்டு விழா என்பது ஒரு முக்கியமான மைல்கல். இதுவரை கடந்து வந்த பயணத்தை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதோடு, இது லாப நோக்கமில்லாத அமைப்பாக மாறுவது பொதுமக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்” என்று குறிப்பிட்டார்.

அவர் நிகழ்ச்சியில் ஆற்றிய தனது உரையில், பிஸ்மி வானொலி என்பது மதங்களைக் கடந்து மனிதநேயத்தையும் அன்பையும் மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இயங்குவதாகத் தெளிவுபடுத்தினார்.

உலகில் நிலவும் பல சிக்கல்களுக்கு அன்பின் குறைபாடே காரணம் என்று கருதும் அவர், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கவே வானொலி பாடுபடுவதாகக் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “நாங்கள் மதம் என்பதைத் தாண்டி, மனிதநேயத்தையும் அன்பையும் வலியுறுத்தித்தான் செயல்படுகிறோம்; உலகத்தை ஆட்டிப்படைக்கக்கூடிய ஒரே விஷயம் அன்பு மட்டும்தான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது 8,43,000 நேயர்களைக் கொண்டுள்ள பிஸ்மி வானொலி, சுகி சிவம் போன்ற அறிஞர்களின் கருத்துக்களையும் 24 மணிநேரமும் ஒலிபரப்பி வருகிறது.

நிகழ்ச்சியின்போது 6 சமூக அமைப்புகளுடன்  கையெழுதிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மற்ற அமைப்புகளின் நற்செயல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, சமூக வளர்ச்சிக்கு ஒரு பாலமாகத் திகழ பிஸ்மி வானொலி திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு விழா, அடுத்த ஆண்டு வரவிருக்கும் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்