சிங்கப்பூர் லூர்து அன்னை ஆலயத்தின் (Church of Our Lady of Lourdes) தமிழ் சமூகத்தின் ஏற்பாட்டில், மாபெரும் ரத்ததான முகாம் வரும் 2026 ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, 50 ஓபீர் சாலையில் (50 Ophir Road) உள்ள லூர்து அன்னை ஆலய மண்டபத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வந்த இந்த ரத்ததான முகாம், தொற்றுநோய் காலகட்டத்தில் தடைபட்டிருந்தது. தற்போது இந்த நற்பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுவாக பெரிய வெள்ளிக்கிழமை வரக்கூடிய தவசுக்காலத்தில் தியாக உணர்வோடு செய்யப்படும் இந்த முன்னெடுப்பு, இம்முறை தேதிகள் கிடைக்கப்பெறாத காரணத்தால் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரத்ததான முகாமின் முக்கிய நோக்கங்கள்
இந்த முகாம் குறித்து தேவாலயத்தின் தமிழ்ச் சமூகத்தின் பொறுப்பாளர் திரு பீட்டர் ஜூலியஸ், இந்த முன்னெடுப்புக்கான முக்கிய காரணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“இவ்வாலயத்திற்கு வரும் மக்களில் பலர் வெளிநாட்டுப் பணியாளர்கள். அவர்களுக்கு ரத்ததானம் எங்கு, எப்படிச் செய்வது என்ற விவரங்கள் முழுமையாகத் தெரிவதில்லை. எனவே, அவர்கள் திருப்பலிக்கு (Mass) வரும்போதே எளிதாக ரத்ததானம் செய்துவிட்டுச் செல்ல வசதியாக இருக்கும் என்பதற்காகவே ஆலயத்திலேயே இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
அன்பின் வெளிப்பாடு
தொடர்புடைய செய்திகள்
“கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கேற்பவும், அவர் தம் உயிரைக் கொடுத்து நம்மை மீட்டது போல, நாமும் நமது ரத்தத்தைக் கொடுத்து பிறரின் உயிரைக் காக்க முடியும் என்ற கிறிஸ்தவ அன்பின் அடிப்படையிலும் இது செய்யப்படுகிறது. ஒருவர் கொடுக்கும் ரத்தம் மூன்று உயிர்களைக் காக்கிறது என்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்,” என திரு. பீட்டர் ஜூலியஸ் விளக்கினார்.
பாகுபாடற்ற சேவை
தமிழ்ச் சமூகத்தால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்லது மதத்திற்கோ மட்டுமானதல்ல என்று தேவாலயத்தினர் தெரிவித்தனர். பல்லினச் சமுதாயமான சிங்கப்பூரில் வாழும் அனைத்து இன, மத, மொழி மக்களும் எவ்வித பாகுபாடுமின்றி இதில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்யுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
ஆதரவும் சிறப்பம்சங்களும் இதுவரை கிட்டத்தட்ட 120 பேர் இந்த முகாமில் ரத்ததானம் செய்யப் பதிவு செய்துள்ளனர். இந்த நற்பணியானது, லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்தந்தை மைக்கேல் சீதாராமன், உதவிப் பங்குத் தந்தை அருட்தந்தை லியோ ஜஸ்டின் மற்றும் புதிதாக இணைந்துள்ள அருட்தந்தை சாலமோன் ஆகியோரின் வழிகாட்டுதலோடும் ஆதரவோடும் முன்னெடுக்கப்படுகிறது.
கலந்துகொள்வோருக்கான முக்கிய குறிப்புகள்:
தேதி & நேரம்: 21 ஜூன் 2026 (ஞாயிறு), காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
இடம்: லூர்து அன்னை ஆலய மண்டபம் (Lourdes Parish Hall), 50 Ophir Road, Singapore 188690.
தேவையான ஆவணங்கள்: ரத்ததானம் செய்ய வருபவர்கள் பதிவுக்காகத் தங்களது அடையாள அட்டை (Original ID) அல்லது வேலை அனுமதிச் சீட்டை (Work Permit) கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ரத்ததானம் செய்து உயிர்களைக் காக்கும் பணியில் பொதுமக்களும் வெளிநாட்டுப் பணியாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: திரு. அடோல்ப் (9387 0311), திரு. பீட்டர் (9451 5319), திரு. சுகிர்தன் (9106 9026) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

