சமூகங்களை ஒன்றிணைத்த ரத்த தான முயற்சி

சமூகங்களை ஒன்றிணைத்த ரத்த தான முயற்சி

3 mins read
de6afeb8-81e8-4764-a9b6-ea2150318da4
தொண்டூழியர்களாகப் பணியாற்றிய 24ஆசியா குழுவினர். - படம்: 24ஆசியா

சிங்கப்பூர் தேசிய ரத்தத் திட்டத்திற்கு ஆதரவாக, 24ஆசியா அமைப்பு அண்மையில் ரத்த தான நிகழ்ச்சியை நடத்தியது. 

சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) இவ்வாண்டுக்கான ரத்த தான முகாம், சுகாதார அறிவியல் ஆணையம், வெஸ்ட்கேட் கடைத்தொகுதி என இரு வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம், சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம் ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்போடும், தெமாசெக் அறக்கட்டளையின் ஆதரவோடும் இந்த ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக ஒற்றுமை, பன்முகத்தன்மை, மனிதாபிமானம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த முகாமில், 100 ரத்தப் பைகளை நிரப்புமளவு ரத்தத்தைச் சேகரிப்பது இலக்காக இருந்தது.

இறுதியில், இலக்கை மிக நெருங்கி, 90க்கும் மேற்பட்ட ரத்தப் பைகளை நிரப்புமளவு ரத்தம் சேகரிக்கப்பட்டு ஒரு முக்கிய மைல்கல்லை இந்த நிகழ்ச்சி எட்டியுள்ளது. இந்த முகாமில் 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இரு ரத்த வங்கிகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

ரத்ததானம் வழங்கிய கொடையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் 24ஆசியா அமைப்பின் சட்டைகளும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. வெளிநாட்டு ஊழியர்கள், பல்வேறு கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட உள்ளூர்வாசிகள் என அனைவரும் தோளோடு தோள் நின்று இந்த ரத்த தானத்தில் பங்கேற்றனர்.

ரத்த தானம் செய்த வெளிநாட்டு ஊழியர்.
ரத்த தானம் செய்த வெளிநாட்டு ஊழியர். - படம்: 24ஆசியா

“இன்றைய அனுபவங்கள், மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைவரும் தாங்கள் கவனிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்று விரும்புவதை எனக்குப் புரிய வைத்தது,” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் 18 வயது மிலெனியா கல்விக் கழக மாணவி செ.ம.பாரதி.

அவரைத் தொடர்ந்து, ரத்த தானம் செய்த பைனியர் கட்டுமானத் துறையில் பணியாற்றும் 30 வயது ஹாசன் முகமதுல், “மனித ரத்தத்தை நம்மால் தயாரிக்க முடியாது அல்லவா? எனவே, மனிதர்கள் கண்டிப்பாக ரத்த தானம் செய்ய வேண்டும்,” என்று ரத்த தானத்தின் அவசியத்தை எளிமையாக விளக்கினார்.

இந்த முகாமின் முக்கிய ஒருங்கிணைப்பாளரும், 24ஆசியா அமைப்பின் துணைத் தலைவருமான 28 வயது தஸ்ரிஃப் அகமது, “இருவேறு இடங்களில் இந்த முகாமை நடத்தியதற்குக் காரணம், ரத்த தான ஆதரவாளர்களில் பெரும்பாலோர் மேற்குப் பகுதியில் வசித்துவருவதுதான். மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் முகாமுக்கு ஏற்பாடு செய்தால், அது மிகத் தொலைவில் இருப்பதால் அவர்களால் கலந்துகொள்ள முடிவதில்லை,” என்று குறிப்பிட்டார்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவியான 19 வயது மு.நிவேதா, “முதலில் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஆனால் நீங்கள் என்னை ஊக்குவித்ததால், இப்போது மற்றொருவரின் வாழ்க்கையில் ஒரு நல்ல பங்கை ஆற்றியுள்ளேன்,” என்று பயம் தெளிந்த கொடையாளர் ஒருவர் கூறியதை நினைவுகூர்ந்தார்.

முதன்முறையாக இதில் கலந்துகொண்ட என்டியு மாணவரான 22 வயது லீ ஜுன் சியான், “நம்முடைய அன்றாட வாழ்க்கையில் என்னைப் போன்ற இளையர்களுக்கு, புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் பழகுவதற்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கின்றன,” என்று கூறியதுடன், இந்த முகாம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, பிறர் உயிரைக் காக்க ரத்தத்தை நன்கொடையாக வழங்கிய இந்த உன்னத நிகழ்ச்சி, சிங்கப்பூர்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கும் மனிதநேயத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்