சமூகப் பங்களிப்பை முன்னிறுத்தி தனது 15வது ஆண்டு விழாவை மே 1ஆம் தேதி கொண்டாடியது ‘கைண்ட்ஸ் ஃபேமிலி’ எனப்படும் அமைப்பு.
ஃபுட் சிங் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூகத் தலைவர்கள், 400 மேற்பட்ட இவ்வமைப்பின் உறுப்பினர்கள், மகளிர், இளையர்கள், முன்னோடிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மறைந்துவரும் நம் பெரியோரின் உணவு செய்முறைகளையும் உரிமையோடு பயன்படுத்திய உறவுமுறைகளையும் பற்றிக் குறிப்பிட்ட திரு அன்பரசு, அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நம் கடமையையும் தமது உரையில் எடுத்துரைத்தார்.
விழாவின் ஓர் அங்கமாக, சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு நன்கொடையும் வழங்கப்பட்டது.
‘அடாப்ட் அ பிளட் பேங்க்’ திட்டத்தின்வழி, வெஸ்ட் கேட் கடைத்தொகுதியில் அமைந்திருக்கும் ரத்த வங்கியைத் தத்தெடுத்துள்ளது ‘கைன்ட்ஸ் ஃபேமிலி’ அமைப்பு. சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி பிரகாஷ் மேனன் அமைப்புக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
குறுகிய காலத்தில் 150க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் வழங்கி, 450க்கும் மேற்பட்ட உயிர்களைக் காக்க உதவியுள்ளது அமைப்பு.
இதனையடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 100 முறை ரத்த தானம் வழங்க ரத்த தானம் வழங்குவோருடன் கைகோக்க இவ்வமைப்பு உறுதி எடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவ்விழாவின் முக்கிய அங்கமாக, சமூகப் பங்காற்றிய கள்ளர் குல அமைப்பின் முன்னோடிகள் 26 பேருக்கு தமிழகத்தின் ராஜராஜன் கல்வி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் துரைராஜ் கண்டியர் நினைவுப் பரிசு வழங்கினார்.
சிங்கப்பூரில் இயங்கிவரும் 300 மேற்பட்ட பல இனங்களைச் சார்ந்த குலவழிச் சங்கங்கள், தங்கள் சமூகத்திற்கு மட்டுமல்லாது, சிங்கப்பூரின் பல இனச் சமூகத்திற்கும் பெரும்பங்காற்றி வருவது பாராட்டுக்குரியது என்று இவ்வமைப்பின் தலைவர் சுந்தர் செல்வம் ஆர்சுத்தியார் குறிப்பிட்டார்.
‘கேஎஃப் கனெக்ட்’ என்ற செயலியும் இந்த விழாவில் வெளியீடு கண்டது.
சிறப்புப் பேச்சாளரான எழுத்தாளர் முனைவர் மருது மோகன், ‘இச்சமூகத்தின் உலகளாவிய பங்களிப்பு’ குறித்த ஆய்வின் அடிப்படையில் உரையாற்றினார்.


