மலர்ந்த நினைவுகள், புத்தாண்டு கனவுகள்

8 mins read
6b81aa2e-188d-44f4-a2ae-592ace5b0971
நாட்டின் 60வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய வேளையில், பொதுத் தேர்தல் மற்றும் உலகளாவிய பொருளியல் மாற்றங்கள் எனப் பல திருப்பங்களையும் சவால்களையும் நாம் எதிர்கொண்டோம். - படம்: பிக்சாபே

சிங்கப்பூருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக 2025 அமைந்தது என்றால் அது மிகையாகாது. நாட்டின் 60வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய வேளையில், பொதுத் தேர்தல் மற்றும் உலகளாவிய பொருளியல் மாற்றங்கள் எனப் பல திருப்பங்களையும் சவால்களையும் நாம் எதிர்கொண்டோம். இத்தகைய பெரிய மாற்றங்களுக்கு இடையே, சாமானிய மக்களின் வாழ்க்கை எவ்வாறு நகர்கிறது என்பதை அறிய தமிழ் முரசு லிட்டில் இந்தியா வீதிகளில் இறங்கியது.

நாங்கள் சந்தித்த பல முகங்கள் தங்களின் 2025ஆம் ஆண்டு அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துகொண்டனர். சவால்கள் நிறைந்த இந்த ஆண்டில் அவர்கள் கண்ட வெற்றிகள் என்ன? வரும் 2026ஆம் ஆண்டிற்கான அவர்கள் சுமந்து நிற்கும் புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கைகள் யாவை? இனம், உழைப்பு மற்றும் பிணைப்பால் உருவான இவர்களின் கதைகள், இன்றைய சிங்கப்பூரின் உண்மையான பிம்பத்தைத் தாங்கி நிற்கின்றன.

உயர்நிலைப்பள்ளி அறிவியல் கூடத்தில் உதவியாளராக பணிபுரியும் புஷ்பலதா, 73 (வலது).
உயர்நிலைப்பள்ளி அறிவியல் கூடத்தில் உதவியாளராக பணிபுரியும் புஷ்பலதா, 73 (வலது). - படங்கள்: த. கவி

எஸ்ஜி60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்ட பல பற்றுச்சீட்டுகள், சுவாரசியமான சலுகைகள் அனைத்தும் பேருதவியாக இருந்தது என்று தெரிவித்தார் புஷ்பலதா, 73.

“அரசாங்கத்திடமிருந்து கிடைத்த அனைத்து நிதி உதவிகளாலும் இவ்வாண்டு எனது செலவுகளை நன்றாகக் கையாள முடிந்தது,” என்றார்.

உயர்நிலைப்பள்ளி அறிவியல் கூடத்தில் உதவியாளராக பணிபுரியும் அவருக்கு 2025ஆம் ஆண்டு மிக மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது என்று தெரிவித்தார்.

“இந்த ஆண்டு என் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த தீர்மானம் எடுத்தேன்,” என்று சிரித்துக்கொண்டே நினைவுகூர்ந்தார்.

வரும் ஆண்டும் அதையே தொடர வேண்டும் என்று அவர் நம்புகிறார்.

தாயார், கணக்காளர் ஸஹீரா பானு, 35.
தாயார், கணக்காளர் ஸஹீரா பானு, 35. - படங்கள்: த. கவி

பற்றுச்சீட்டுகள், ஊக்கத்தொகைகள் போக, எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்புத் திட்டம் பெற்றோர்க்கு ஆதரவாக இருந்தது என்று தெரிவித்தார் கணக்காளர் ஸஹீரா பானு, 35.

“கடந்த மார்ச் மாதம் என் குழந்தை பிறந்ததால் இது எனக்கு ஒரு சிறப்பு ஆண்டாக அமைந்தது,” என்றார்.

இருப்பினும், தமது குடும்பத்தில் சிலரை இவ்வாண்டு இழந்தது கவலை அளித்ததாகவும் தெரிவித்தார் ஸஹீரா.

அடுத்த ஆண்டு தமது தொழிலில் மேம்பட விரும்புவதாக ஸஹீரா கூறினார்.

“எனது எடையைக் குறைக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை,” என்று சிரித்தார்.

இல்லப் பணிப்பெண் ரத்தினா ராஜூ, 47.
இல்லப் பணிப்பெண் ரத்தினா ராஜூ, 47. - படங்கள்: த. கவி

2012ல் சிங்கப்பூருக்கு வந்தார் ரத்தினா ராஜூ, 47. தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஒரே வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாக இருப்பது தமது தனிச்சிறப்பு என்றார் ரத்தினா.

“வந்த புதிதில் எனக்கென்று ஒன்றும் இல்லாமல், ஒன்றும் தெரியாமல் வந்தேன். இப்போது இங்கிருப்பதால் எனக்கும் ஒரு மதிப்பு உள்ளது என்று உணர்கிறேன்,” என்றார் அவர்.

பெங்களூரில் திருமணமாகிய ஒரு மகள், தன்னுடன் இருக்கும் ஒரு மகனுக்கு மகனுக்குத் தாயாரான தம்மை தம் முதலாளிகள் மிகச் சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.

“அடுத்த ஆண்டு என் மகனுக்கு ஒரு நல்ல வரன் அமையவேண்டும்,” என்று கூறினார்.

இருப்பினும், குறிப்பாக இவ்வாண்டு தன் செலவுகள் அதிகரித்ததை உணர்ந்ததாக தெரிவித்தார் ரத்தினா.

“சிங்கப்பூர், வீடு, இரண்டு இடங்களிலும் செலவுகள் அதிகமாகியுள்ளன. இங்கு கிட்டத்தட்ட பாதிச் செலவுகளை முதலாளிகள் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால் என் வீட்டில் நான் முழுமையாக ஈடுகட்ட வேண்டும்,” என்றார்.

சிங்கப்பூரின் சட்ட திட்டங்களை மதித்து நடந்து, செய்யக்கூடிய கடமைகளைச் சரிவர செய்து வீடு திரும்புவதே அடுத்த ஆண்டு மட்டுமின்றி, வரும் எல்லா புத்தாண்டுகளிலும் தனது கொள்கை என திடமாகக் கூறினார் ரத்தினா.

கட்டுமானத் துறையில் ஓட்டுனராகப் பணிபுரியும் ராஜேந்திர சுப்ரமணியன், 51.
கட்டுமானத் துறையில் ஓட்டுனராகப் பணிபுரியும் ராஜேந்திர சுப்ரமணியன், 51. - படங்கள்: த. கவி

சிங்கப்பூரை தனது தாய்நாடுபோல கருதுகிறார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர சுப்ரமணியன், 51.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் கட்டுமானத் துறையில் ஓட்டுராகப் பணிபுரியும் அவர், பொதுவான அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் விலை ஏற்றம் கண்டதாக தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் விலை ஏற்றம் சற்று சவாலான ஒன்று என்றார்.

“அடுத்த ஆண்டு அத்தியாவசியப் பொருள்களுக்கான செலவுகள் மேம்படும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இறைச்சி கடை வியாபாரி சீனி முகமது, 53.
இறைச்சி கடை வியாபாரி சீனி முகமது, 53. - படங்கள்: த. கவி

இவ்வாண்டு அதிகரித்து வரும் செலவுகளைத் தாங்கிக்கொள்வது வாடிக்கையாளர்களுக்கு கடினமாக இருந்தாலும், வணிகங்களும் அதே சவாலை எதிர்கொண்டன.

50 ஆண்டுகளுக்கும் மேலாக லிட்டில் இந்தியா ஈரச்சந்தையில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார் சீனி முகமது, 53.

“இப்போதெல்லாம் இறைச்சி வாங்க நிறைய பேர் நேரடியாகச் சந்தைக்கு வருவதில்லை. அதனால், வியாபாரத்தைப் பார்ப்பது கடினமாக இருந்தது,” என்றார் அவர்.

இணைய வணிகத்தின் காரணமாகவும் இந்தச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

இறைச்சி, மீன், கோழி போன்றவற்றை மக்கள் நேரடியாக வந்து வாங்குவது மிகச் சிறப்பு என்றார்.

“பழையபடி அடுத்த ஆண்டு வியாபாரம் மேலோங்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

கோழி இறைச்சி வியாபாரி ஜனத்துகன்னி அபுபக்கர், 45.
கோழி இறைச்சி வியாபாரி ஜனத்துகன்னி அபுபக்கர், 45. - படங்கள்: த. கவி

2024ஆம் ஆண்டு சந்தையில் வியாபாரம் நன்றாக இருந்தது. ஆனால் இவ்வாண்டில் அது சற்று மெதுவடைந்ததாக தெரிவித்தார் அதே ஈரச்சந்தையில் கோழி இறைச்சி வியாபாரி ஜனத்துகன்னி அபுபக்கர், 45.

“இது குறிப்பாக பொருள், சேவை வரியின் அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார் ஜனத்துகன்னி.

சிடிசி பற்றுச்சீட்டுகள் உதவிக்கரமாக இருந்தபோதிலும், சில பழைய வணிகங்கள் இன்னும் பணத்தை நம்பியுள்ளன என்று அவர் கூறினார்.

கூடிவரும் விலைகள், தேங்கி நிற்கும் சம்பளங்களினால் இவ்வாண்டு அதிகமான வியாபாரிகள் மனவுளைச்சலுக்கும் ஆளாகியதைக் கவனித்தார் அவர்.

“2026ல் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்குக் கூடுதலான அரசாங்க உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்,” என்று ஜனத்துகன்னி கோரினார்.

‘ஐயா’ உணவுக்கடை உரிமையாளர் செல்லப்பன் பெரியசாமி, 63.
‘ஐயா’ உணவுக்கடை உரிமையாளர் செல்லப்பன் பெரியசாமி, 63. - படங்கள்: த. கவி

மக்களை அரவணைத்த நவீன தொழில்நுட்பம் உணவுக் கடைக்கார்களையும் விட்டுவைக்கவில்லை. இருப்பினும், ஆள் பற்றாக்குறையால் இணையம்வழி உணவு வியாபாரம் சாத்தியமல்ல என்று தெரிவித்தார் ‘ஐயா’ உணவுக்கடை உரிமையாளர்கள் செல்லப்பன் பெரியசாமி, 63, செந்தில்குமாரி செல்லப்பன், 53, தம்பதியர்.

கடந்த 11 ஆண்டுகள் தேக்கா நிலையத்தில் கடை நடத்திவரும் இருவருக்கும் இவ்வாண்டு வியாபாரம் விறுவிறுப்பாக அமையவில்லை.

“அதற்கான காரணத்தையும் எங்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை,” என்று தெரிவித்தார் செல்லப்பன்.

தம்பதியினருக்கு உதவ அவர்களின் மகன் அவ்வப்போது கடைக்கு வருவார் என்று தெரிவித்தார்.

“இணையம்வழி தற்போது வியாபாரம் செயல்பட முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் இந்தக் கடை எங்களுக்குப் பிறகு வரும் தலைமுறைகளிலும் தொடரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

‘ஜி.வி. இறைச்சி விநியோகஸ்தர்கள்’ கடையின் உரிமையாளர் ப. விஜயராகவன், 36.
‘ஜி.வி. இறைச்சி விநியோகஸ்தர்கள்’ கடையின் உரிமையாளர் ப. விஜயராகவன், 36. - படங்கள்: த. கவி

மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது ‘ஜி.வி. இறைச்சி விநியோகிப்பாளர்கள்’ வியாபாரம்.

வணிகம் மெதுவடைந்தாலும், இவ்வாண்டு அளிக்கப்பட்ட சிடிசி, எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் வாடிக்கையாளர்களுக்குப் பெரிதும் உதவின என்று தெரிவித்தார் கடையின் உரிமையாளர் ப. விஜயராகவன், 36.

“இது ஒரு ‘டோமினோ’ விளைவு. பொருளியல் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகும் போதெல்லாம் வணிகங்களும் அதன்வழி செல்கின்றன,” என்றார்.

2026ல் பொருளியல் நிலையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன், தொடர்ந்து அரசாங்கம் பற்றுச்சீட்டுகள் போன்ற உதவிகள் அளிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“வணிகங்களுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கும்,” என்று கூறினார்.

கட்டுமானத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் வேல், 38.
கட்டுமானத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் வேல், 38. - படங்கள்: த. கவி

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார் வேல், 38.

மற்ற ஆண்டுகளைவிட 2025ல் தமக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள பல நண்பர்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், குடும்பத்தைக் காண வேண்டும் என்ற தவிப்பு இருக்கிறது என்றும் கூறினார்.

“அடுத்த ஆண்டு என் குடும்பத்தை சிங்கப்பூருக்கு அழைத்துவர வேண்டும் என்பது என் ஆசை,” என்றார் வேல்.

பட்டயக்கல்வி முடித்த ஆயிஷா சித்திக், 22.
பட்டயக்கல்வி முடித்த ஆயிஷா சித்திக், 22. - படங்கள்: த. கவி

இவ்வாண்டு தாதிமையில் பட்டயக்கல்வி முடித்தது ஒரு மாபெரும் சாதனை என்றார் ஆயிஷா சித்திக், 22.

“நான் பட்டயக்கல்வியில் பட்டம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை,” என்றார் ஆயிஷா.

ஆடைகள் மற்றும் அணிகலன்கள் கடையில் பகுதி நேர ஊழியராகப் பணிப்புரியும் அவர் தற்போது தமது விருப்பங்களை ஆராய்வதாக தெரிவித்தார்.

“2026ல் நான் உளவியலில் பட்டம்பெற திட்டமிட்டுள்ளேன்,” என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவதாகவும் ஆயிஷா புன்னகையுடன் குறிப்பிட்டார்.

கலைஞர் லக்ஷ்மி கணபதி, 63.
கலைஞர் லக்ஷ்மி கணபதி, 63. - படங்கள்: த. கவி

தனது ஓய்வு நாள்களைக் கலைக்கு அர்பணித்துள்ளார் கலைஞர் லக்ஷ்மி கணபதி, 63.

கலைகள் மீதான அவரது ஆர்வம் இப்போது ‘தேக்கா பிளேஸ்’ வளாகத்தில் ‘சோல் ஆர்ட் பை லட்சுமி கணபதி’ என்று அழைக்கப்படும் ஒரு கடையாக உருவெடுத்துள்ளது. ஒரு கலைக்கூடமாகவும், பட்டறைகளுக்கான இடமாகவும், கலைப்பொருள்களை விற்கும் வணிகமாகவும் ‘சோல் ஆர்ட் பை லக்‌ஷ்மி கணபதி’ செயல்படுகிறது.

“இந்த வயதிலும் என்னால் ஒரு வணிகத்தைத் தொடங்கி நடத்த முடியும் என்பதை ஒரு சாதனையாக கருதுகிறேன்,” என்று தெரிவித்தார் அவர்.

இந்த ஆண்டு தனது கலை வணிகத்தின்வழி அதிக லாபம் கிடைக்கும் என்று லட்சுமி எதிர்பார்க்கிறார்.

“தனிப்பட்ட முறையில், எனக்கென அதிக நேரம் கிடைக்கும்,” என்று கூறினார் லட்சுமி.

தன்னுரிமைத் தொழில் புரியும் நளினி ராஜாகிருஷ்ணன், 57.
தன்னுரிமைத் தொழில் புரியும் நளினி ராஜாகிருஷ்ணன், 57. - படங்கள்: த. கவி

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பது மறக்க முடியாதது என்று தெரிவித்தார் தன்னுரிமைத் தொழில் புரியும் நளினி ராஜாகிருஷ்ணன், 57.

“என் அண்ணனுக்கும் இந்த ஆண்டு 60 வயது,” என்று புன்னகைத்தார் நளினி.

இந்த ஆண்டு நளினிக்கு பல பணித்திட்டங்கள் அமைந்ததால் இது ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றார்.

“அடுத்த ஆண்டு என் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி, தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

அனைத்துலகப் பள்ளியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் விஜயலட்சுமி, 65.
அனைத்துலகப் பள்ளியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் விஜயலட்சுமி, 65. - படங்கள்: த. கவி

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு 2025ல் சென்றுள்ளார் விஜயலட்சுமி, 65.

“பல நாடுகளுக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். சுவிட்சர்லாந்து எனக்கு மிகவும் பிடித்தமான இடம்,” என்றார்.

பயணத்தின் மூலம், விஜயலட்சுமி மகிழ்ச்சியையும் நிறைய புதிய நண்பர்களையும் கண்டார்.

ஓய்வுபெறும் வயதை அடைந்தாலும் தொடர்ந்து அனைத்துலகப் பள்ளியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் விஜயலட்சுமி.

இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதாக கூறினார் விஜயலட்சுமி.

“அடுத்த ஆண்டு நான் இத்தாலிக்குச் செல்ல ஆவலாக உள்ளேன்,” என்று தெரிவித்தார்.

தாயார், பொறியாளர் லாவண்யா, 29.
தாயார், பொறியாளர் லாவண்யா, 29. - படங்கள்: த. கவி

இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வு ஒரு சவாலாக இருந்தது என்றார் பொறியாளர் லாவண்யா, 29.

“எனக்கு சிறு வயதில் ஒரு மகள் இருப்பதால் அவளுக்காக தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறேன்,” என்று பகிர்ந்தார்.

அதுமட்டுமின்றி, இவ்வாண்டு தன் உடல்நலம் சற்று பாதிப்படைந்ததாகவும் தெரிவித்தார் லாவண்யா.

“அடுத்த ஆண்டு என் உடல்நிலை சீராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றார்.

உற்பத்தி துறையில் பணிபுரியும் கதிர்வேல் செல்லக்கண்ணு, 35.
உற்பத்தி துறையில் பணிபுரியும் கதிர்வேல் செல்லக்கண்ணு, 35. - படங்கள்: த. கவி

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சிங்கப்பூரில் பணிபுரிந்து இவ்வாண்டு தன் மகனின் முதல் பிறந்தநாளை சிங்கப்பூரில் கொண்டாடிய நினைவுகளைப் பகிர்ந்தார் கதிர்வேல் செல்லக்கண்ணு, 35.

அதுமட்டுமின்றி, தான் பணிபுரியும் உற்பத்தி துறையில் இவ்வாண்டு சம்பள உயர்வு பெற்ற மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

“அடுத்த வருடம் என் குடும்பத்துடன் இணைய போதுமான அளவு சம்பாதிக்க வேண்டும்,” என்று தீர்மானித்தார்.

சிங்கப்பூர் ஒரு பாதுகாப்பான நாடு என்றும் புகழ்ந்தார்.

“நான் விரைவில் என் குடும்பத்தை இங்கு அழைத்து வர விரும்புகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்