மலரும் அஞ்சலி: முதியோருக்கான மதிய நன்கொடை விருந்து

மலரும் அஞ்சலி: முதியோருக்கான மதிய நன்கொடை விருந்து

2 mins read
துடிப்புடன் முதுமையடைதல்: சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி
394eee04-ff75-4dd5-b84b-745224ae9dc0
கணவருடன் திருமதி வசந்தா கிருஷ்ணன். - படம்: காமினி ஹஷ்வின்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் முதுகுப் பிரச்சினையால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியையும் ஊன்றுகோலையும் நாடுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் 72 வயது திருமதி வசந்தா கிருஷ்ணன்.

ஆரம்பக்கட்ட மருத்துவமனைச் சிகிச்சைகளுக்குப் பிறகு, உடல் இயக்கச் சிகிச்சை நிபுணர் தந்த ஆலோசனையின் பேரில் ‘பிளாசம் சீட்ஸ்’ எனும் முதியோர்நல நிலையத்தில் இணைந்தார். 

அங்குள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன்கூடிய உடற்பயிற்சி உபகரணங்கள், அவரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்ததால் ஓராண்டுத் தீவிரப் பயிற்சியில் வியத்தகு முன்னேற்றம் கண்டார்.

தற்போது வாரத்தில் மூன்று நாள் அந்த நிலையத்திற்கும் இரண்டு நாள் உடற்பயிற்சிக் கூடத்திற்கும் செல்லும் அவர், ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்.

“முதியவர்கள் இதுபோன்ற சமூக நிலையங்களில் இணைந்து தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்,” என்று கூறிய அவர், மற்றவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

“பிளாசம் சீட்ஸ் நிலையத்தில் சேர்ந்த பிறகு என் வாழ்வே மாறியது,” என்கிறார் திருமதி வசந்தா கிருஷ்ணன்.

அங்குள்ள நவீன உபகரணங்களாலும் தன்னார்வலர்களின் உதவியாலும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அவர், இப்போது யாருடைய துணையுமின்றித் தனியாக நடக்கிறார்.

“முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல், இது போன்ற நிலையங்களில் இணைந்து ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்,” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

மூத்த நடனமணிகளுடன் சிறுவர்கள் இணைந்து வழங்கிய நடனம்.
மூத்த நடனமணிகளுடன் சிறுவர்கள் இணைந்து வழங்கிய நடனம். - படம்: காமினி ஹஷ்வின்

சிங்கப்பூர்ச் சமூகத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் ‘மலரும் அஞ்சலி’ என்ற தலைப்பில் ஆறாவது  நன்கொடை விருந்து நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்றது.

பல இனத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட முதியோரும் தன்னார்வலர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 

“ஒவ்வொருவரையும் தங்களின் கடைசி நாள் வரை ஆரோக்கியமாகவும், மனத்தளவில் இளமையுடனும் இருக்க உதவி செய்வதே எங்களின் லட்சியம்,” என்றார் திரு ஓங்.

“70 முதல் 98 வயது வரையிலான அனைத்து முதியவர்களும் கண்ணியத்துடனும் நலத்துடனும் முதுமையடைவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம்,” என அவர் குறிப்பிட்டார்.

‘பிளாசம் சீட்ஸ்’ தன்னார்வலர்கள் இணைந்து வழங்கிய நடனம்.
‘பிளாசம் சீட்ஸ்’ தன்னார்வலர்கள் இணைந்து வழங்கிய நடனம். - படம்: காமினி ஹஷ்வின்

பல்லின இசைக்கருவிகளின் முழக்கத்துடன் பன்முகக் கலாசாரக் காட்சி அரங்கேறியது. 

மேலும் நிலையத்தின் எதிர்காலத் திட்டங்களை விளக்கும் முப்பரிமாணக் காட்சி, சுறுசுறுப்பான முதுமையை வலியுறுத்தும் ஒளிக்கற்றைக் காட்சி ஆகியவை அனைவரையும் கவர்ந்தன.

உடல் ரீதியாகப் பல சவால்கள் இருந்தாலும் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதற்கு வயது ஒரு தடையன்று என்பதை முதியவர்களின் ஆர்வம் தெளிவாகப் புலப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்