உடல் அல்லது மனம் சார்ந்த சவால்களை எதிர்நோக்கும் ஒருவருக்குத் தேவைப்படுவது இரக்கமன்று.
மாறாக, அவர்களின் திறமையை நிரூபிக்கச் சரியான வேலையும் மற்றவர்களைப் போல் சமமானதொரு வாய்ப்பும் கிடைக்க வழிகாட்ட வேண்டும் என்கிறார் ‘எஸ்பிடி’ (செர்விங் பீப்பள் வித் டிஸ்எபிலிட்டிஸ்) எனும் உள்ளூர் தொண்டூழிய அமைப்பின் வேலைவாய்ப்பு ஆதரவு நிபுணர் ஆண்ட்ரியா நந்தினி, 41.
உடற்குறையுள்ளோர் தடைகளைத் தகர்த்து, நம்பிக்கையுடன் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு வழிகாட்டி வருகிறார் இவர்.
வேலை வழிகாட்டி என்ற முறையில், மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவதோடு இவரைப் போன்ற வழிகாட்டிகளின் பணி முடிந்துவிடுவதில்லை.
வேலை தேடுவோரின் தனிப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்ந்து, ‘எஸ்பிடி’ அமைப்பில் உள்ள உடலியக்கச் சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து அவர்களின் வேலைத்திறனைப் பற்றி வழிகாட்டிகள் புரிந்துகொள்கின்றனர்.
பின்னர் அவர்களுக்குத் தகுந்த திறன் பயிற்சிகளை வழங்கி, நேர்காணல்களுக்குத் தயார்செய்து, வேலைக்குச் சேர்ந்த பின்னரும் குறைந்தது ஓராண்டுகாலம்வரை பணியிடத்தில் அவர்களைக் கண்காணித்து அத்தகைய வழிகாட்டிகள் ஆதரவு வழங்குகின்றனர்.
வேலை வழிகாட்டியின் அவசியத்தை உணர்த்தும் இரண்டு முக்கிய நிகழ்வுகளைத் திருவாட்டி ஆண்ட்ரியா தமது அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொண்டார்.
பணியிடத்தை எளிமையாக்குதல்
சிறப்புத் தேவைகளைக் கொண்ட இளையர் ஒருவர், கூட்டுரிமை வீடொன்றில் தூய்மைப் பணியாளராகச் சேர்ந்தபோது வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டதாகத் திருவாட்டி ஆண்ட்ரியா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘‘காற்று பலமாக வீசும் திறந்தவெளிச் சூழலில் எவ்வாறு துப்புரவுப் பணியை மேற்கொள்வது என அவருக்குப் புரியவில்லை. அது எளிமையாகத் தோன்றலாம். ஆயினும், அவரது பணிக்கு அது மிகவும் தேவையானது. எனவே, அதைச் சமாளிக்க அவருக்கு உதவி செய்வது மிகவும் முக்கியம்,’’ என்றார் இவர்.
ஆகையால், இவரே நேரில் சென்று தூய்மை செய்யும் முறையைக் காணொளியாக எடுக்கச் சொல்லி, அதை எளிய படிநிலைகளாக மாற்றி உடற்குறையுள்ளோருக்குக் கற்றுக்கொடுத்தார்.
அத்துடன், வேலை செய்யவேண்டிய தளங்கள் குறித்த விவரங்களை ஒரு கோப்பில் தெளிவாக இவர் எழுதிக் கொடுத்தார்.
அதன்மூலம் உதவி பெற்றவர் இன்று அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்து வருவதாகவும் வேலையைத் தக்கவைத்துக் கொண்டதாகவும் சொன்னார் திருவாட்டி ஆண்ட்ரியா.
அதேபோல, பார்வைத்திறன் சார்ந்த சவால்களுடன் கூடிய முதியவர் ஒருவர், வண்ணங்களைப் பகுத்துப் பார்க்க முடியாமல் கணினி சம்பந்தப்பட்ட வேலைகளில் திணறினார்.
ஆண்ட்ரியாவும் அவரது குழுவினரும் நிறுவன மேலாளர்களுடன் பேசி, அவரது கணினித் திரையின் வண்ண அமைப்புகளை மாற்றி, சிறப்பு மென்பொருள்களை நிறுவித் தந்தனர்.
அதன்மூலம் அவரால் பணியில் தடையின்றி நீடிக்க முடிந்தது.
அத்தகைய செயல்களால் தேவையுள்ளோரின் வாழ்வில், வேலை வழிகாட்டியாக ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்த முடிவது நிறைவாக உள்ளது என்றார் திருவாட்டி ஆண்ட்ரியா.
வழிகாட்டிகளின் உன்னத நோக்கம்
“வேலை தேடுபவர்கள் பலமுறை நிராகரிக்கப்படும்போது சோர்வடையக்கூடும். அதுபோன்ற நேரங்களில், எங்களின் சமூக ஊழியர்கள்மூலம் அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையும் வேலைச் சந்தை குறித்த விழிப்புணர்வையும் வழங்குகிறோம்,” என்று திருவாட்டி ஆண்ட்ரியா கூறினார்.
சவால்கள் அதிகம் என்றாலும் தொடர் முயற்சிகள் தேவைப்பட்டாலும் வழிகாட்டியாகப் பணியாற்றுவதன் வாயிலாக கிடைக்கும் அர்த்தமிகு ஆனந்தம் என்னவென்பதையும் இவர் பகிர்ந்துகொண்டார்.
‘‘உடற்குறையுள்ள ஒருவர் தன்னிறைவை எட்டி, சொந்தக் காலில் நின்று தமது குடும்பத்தைக் காப்பாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே எங்கள் பணியில் கிடைக்கும் மனநிறைவு,’’ என்கிறார் இவர்.
அண்மைத் தரவுகளின்படி, சிங்கப்பூரில் 15 முதல் 64 வயது வரையிலான உடற்குறையுள்ளோரின் வேலைவாய்ப்பு விகிதம் சீரான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அது 2024ஆம் ஆண்டில் 33.6 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு அது 34.7 விழுக்காட்டிற்கு உயர்ந்தது.

