வரவுசெலவுத் திட்டம் 2025: தமிழ் முரசு சிறப்பு வலையொளி

3 mins read
503249b5-6ce1-4d43-b7af-92d0330a8472
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் நடத்தப்பட்ட சிறப்பு வலையொளிக் கலந்துரையாடல். - படம்: த.கவி

சுதந்திர நாடாக சிங்கப்பூரின் 60வது நிறைவு ஆண்டைக் கொண்டாடுவதற்கான எஸ்ஜி60 சலுகைகள், பெரும் குடும்பங்களுக்கான ஆதரவு என அனைத்துவித மக்களுக்கும் அனுகூலங்களைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி 18ஆம் தேதி அறிவித்த வரவு செலவுத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தில் மக்களைக் கவர்ந்த அம்சங்கள், திட்டம் நல்கும் அனுகூலங்கள் குறித்த கருத்தாடலை தமிழ் முரசு, பிப்ரவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) எஸ்பிஎச் மீடியா அலுவலகத்தில் நடத்தியது.

மூத்த இசைக்கலைஞரும் சிஃபாஸ் எனப்படும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருமான சங்கர் ராஜன், பாலர் பள்ளி ஆசிரியையும் தொண்டூழியருமான துர்கா மைக்கல், மதியிறுக்கம் கொண்டுள்ள பிள்ளையைப் பராமரிக்கும் கே. ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கருத்தாடலை தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி வழிநடத்தினார்.

60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், வரும் ஜூலையிலேயே 800 வெள்ளி மதிப்பிலான எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய 75 வயது திரு சங்கர், மாதாந்தர வருமானத்தைப் பெறாத முதியோருக்கு அரசாங்கம் இம்முறை கூடுதல் முக்கியத்துவம் அளித்ததைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.

“என்னைப் போன்ற முதியவர்கள் சிலர், தனியார் வீடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில் உள்ள எங்களுக்குச் செலவுகளும் அதிகமாகின்றன,” என்று அவர் கூறினார்.

உடற்குறையுள்ளோருக்கான வேலை நியமன உதவித்தொகை, 2028ஆம் ஆண்டு இறுதிக்கு நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக திரு ஆறுமுகம் தெரிவித்தார்.

“அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளும் அதிக அளவில் உருவாக்கப்படவேண்டும். சிறப்புத் தேவைத் தொழிலாளிகளுக்கென ஒருசில வேலை இடங்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பெரிய குடும்பங்களுக்கான LifeSG சிறப்புத் தொகையும் தம் குடும்பத்திற்குக் கிடைக்கப்போவதை எண்ணி மகிழ்வதாகக் கூறினார் திருவாட்டி துர்கா, 35.

“எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். என் அன்றாட செலவுகள், வீட்டு மளிகைப் பொருள் செலவு, போக்குவரத்துச் செலவு என்று பல்வேறு செலவுகளுக்கு இந்தத் தொகை உதவும்,” என்று அவர் கூறினார்.

பிள்ளைகள் இளம் வயதாக இருக்கும்போதே அவர்களைத் திறன் வகுப்புகள் பலவற்றில் சேர்க்க விரும்புவதாக திருவாட்டி துர்கா கூறினார்.

“நீச்சல் வகுப்புக்கு மட்டும் என் மூன்று பிள்ளைகளை அனுப்பினாலே கிட்டத்தட்ட 1,000 வெள்ளி செலவாகிறது. ஏராளமாக வகுப்புகளுக்குச் சென்று என் பிள்ளைகள் இளமையிலேயே தங்களின் திறன்களை அடையாளம் காண வேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இசை, கலைக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர் என்ற முறையில் வரவு செலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட எஸ்ஜி கலாசாரத் திட்டம் குறித்த தம் பாராட்டைத் தெரிவித்தார் திரு சங்கர்.

“வெளிநாட்டுக் கலைஞர்களை வரவழைத்து நிகழ்ச்சிகளையும் வகுப்புகளையும் நடத்தி இருக்கிறேன். இதற்காக 40, 50 வெள்ளி கட்டணங்களை விதிக்கும்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயங்குகின்றனர். மிகத் தரமான கலைப்படைப்புகளைக் காண்பதற்கு மாணவர்களை ஊக்குவிக்க உயர்தரமான வழியை அரசாங்கம் கையாண்டுள்ளது,” என்று திரு சங்கர் கூறினார்.

வலையொளிப் பதிவை https://youtu.be/mhN6k_1Ue9A இணைப்பில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்
எஸ்ஜி60லாரன்ஸ் வோங்பட்ஜெட் 2025வரவுசெலவுத் திட்டம்