அண்மைய ஆண்டுகளில் உலகத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலும் பதற்றநிலையும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எடுத்த சில அதிரடி முடிவுகளால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, உலக நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தன்னைப் பேணித்தனம் போன்றவற்றால் ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.
குறிப்பாக, இயற்கை வளமின்றி மனிதவளத்தைச் சார்ந்திருக்கும் நாடான சிங்கப்பூர் உலகச்சூழலால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது.
அந்த வகையில் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் மீள்திறனை அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடும் எனக் கருத்துரைத்தார் ஊடக வல்லுநர் பிமல் ராம்.
மீள்திறனை வளர்க்கத் தேவையான நம்பிக்கையை ஊட்டும் அறிவிப்புகளையும் அதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளையும் வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
அடிக்கடி மாறிவரும் வர்த்தக வரிகள், வெனிசுவேலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியால் ஏற்பட்டுள்ள பதற்றநிலை ஆகியவற்றைச் சுட்டிய அவர், ‘எங்கு எந்த விரிசல் ஏற்பட்டாலும் அது சிங்கப்பூரைப் பாதிக்கும்,” என்றார்.
சிங்கப்பூர் ஈர்ப்பு மிக்க மையமாக இருக்க வேண்டும். அப்போதுதான், முதலீடுகள் சேர்வதோடு, வேலைவாய்ப்புகளும் தொடரும், வாழ்க்கைத் தரமும் உயரும் என்று திரு பிமல் குறிப்பிட்டார்.
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சுட்டிய அவர், இன்றைய இளையர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் குழந்தை போனசுக்கும் அப்பால், பிள்ளைகளின் தொடக்க காலம் மட்டுமன்றி அதன் ஒவ்வொரு கட்டத்திலும் அரசாங்கம் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை மேம்படுத்தும் திட்டங்களை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
“எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுகளை எடுக்க முடியாது. ஆனால், சில முடிவுகளுக்கு ஏற்ப நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அதனால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மக்களிடையே நம்பிக்கையின்மையும் ஏற்படலாம்,” எனக் கூறிய திரு பிமல் சிங்கப்பூர் தொடர்ந்து வேகத்துடனும் விவேகத்துடனும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“என்ன நேரும் என்று யாராலும் சரியாக, முழுமையாகக் கணிக்கமுடியாத நிலையில் இருக்கின்றோம். ஆக, இந்தக் கொந்தளிப்பு மிக்க நிலையைச் சமாளிப்பதற்கு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படலாம். அவசர முடிவுகளை எடுத்து அமல்படுத்தக்கூடிய, பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களை உள்ளடக்கிய, ஒரு நீண்டகாலக் குழு அமைக்கப்படவேண்டும் என்பது எனது வேண்டுகோள்,” என்றார் திரு பிமல்.
இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இன்னும் கூடுதலான மானியங்களையும் பற்றுச்சீட்டுகளையும் பலர் எதிர்பார்க்கும் இந்நிலையில், அவை உடனடி நிவாரணம் அளித்தாலும் உண்மையில் நீண்டகாலத் தீர்வாக அமையுமா என்பது தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும் கவலைகளையும் ஆராய்ந்து வந்தது தமிழ் முரசு.
எதிர்பார்ப்புகளும் கவலைகளும்
குடும்பங்கள், வர்த்தகங்கள், முதியோர், கலைத்துறை, உடற்குறையுள்ளோர், மாற்றுத்திறனாளி எனப் பல தரப்பினர் மீது இந்த வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்தும்.
அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்று கருத்துரைத்தார் திரு வேல்முருகன், 34.
“பொருளியல் மலர்ந்து வருவதால் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனச் சொல்லமுடியாத காலகட்டத்தில் இருக்கிறோம். அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அவர்களால் என்ன தீர்வு கூற முடியும், எந்த வகையில் நம் பட்டதாரிகளுக்கு உதவலாம் என்பதுதான் முதல் கேள்விக்குறி,” என்றார் அவர்.
தகுதி அடிப்படையில் (meritocracy) அமைந்திருக்கும் ‘சிங்கப்பூர்க் கனவு’ காலங்காலமாக வலியுறுத்தப்படும் ஒன்று எனக் கூறிய திரு வேல்முருகன், படித்துப் பட்டம் பெற்றும்கூட பட்டதாரிகள் கிராப் விநியோகம், டாக்சி ஓட்டுவது போன்ற வேலைகளுக்குச் செல்வதால் ஒரு குறிப்பிட்ட வேலையில் சேர்வதற்கான அனுபவத்தை அவர்களால் பெறமுடியாததைச் சுட்டினார்.
“இதன் விளைவாக நிரந்தர வேலைக்குச் செல்ல முடியாமல் போகக்கூடும். ஏனென்றால் பெற்ற வேலை அனுபவத்திற்கும் விருப்பப்பட்ட வேலைக்குத் தேவையான அனுபவத்திற்கும் இடையே தொடர்பில்லாத நிலை ஏற்படுகிறது”, என்றார்.
“நாம் பயிலும் கல்வி முறை உண்மையில் நம்மை எதிர்காலத்திற்குத் தயார் செய்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. பொருளியல் ரீதியாக வளர்ச்சியடைந்தாலும் இதில் இளையர்களுக்கு என்ன உள்ளது என்பது இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் எந்த அளவிற்குக் கவனம் செலுத்துகிறது என்பது கேள்வி,” என்றார் அவர்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான திருமதி ரசுல் பீவி, 40, வரவுசெலவுத் திட்டத்தை நடைமுறை சார்ந்த சிந்தனையுடன் அணுகுகிறார்.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம் ஒரு பெரிய பாரமாக இருந்தபோதிலும் இதுவரை அரசாங்கம் வழங்கும் சமூக மேம்பாட்டு மன்ற, பொருள், சேவை வரி, யு-சேவ் போன்ற பற்றுச்சீட்டுகள் வாழ்நாள் தீர்வு அல்ல.
“அதற்கேற்ப வேறென்ன வழிகளில் நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்,” என்றார்.
தமது கணவர், மூன்று குழந்தைகள் ஆகியோருடன் ஈரறை வாடகை வீட்டில் வசித்துவரும் திருமதி ரசுல், விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பதற்கேற்ப செலவு செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதாகச் சொன்னார்.
இந்நிலையில், கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம், மத்திய சேமநிதியின் ஓய்வுக்காலக் கணக்குச் சேமிப்புத் தொகை ஆகியவற்றால் பயன்பெறுவதாகக் கூறினார் திரு சந்தர மோகன் நாராயணசாமி, 72.
பார்வைக் குறைபாட்டால் அவதியுறும் தம்மைப் போன்றோருக்கு மானியங்களைவிட இன்னும் விரிவான வசதிகள் செய்துதர அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பார்வையற்றவர்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக நடமாட உதவும் வழிகாட்டிக் கோடுகள், எச்சரிக்கைப் புள்ளிகள் போன்ற தொடு உணர்வுத் தரைத்தளம் (Tactile Tiles) போன்றவை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படலாம் என்று அவர் கருத்துரைத்தார்.
அரசாங்கம் வழங்கும் மானியங்கள் ஒரு முழுமையான தீர்வல்ல, ஓர் ஆதரவுத் திட்டம்தான். ஆனால் தம்மைப் போன்றோர் மேம்பட்ட வாழ்க்கையை வாழ இது போன்ற வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய வசதிகள் கைகொடுக்கும் எனக் குறிப்பிட்டார் திரு மோகன்.
மின்னிலக்க வர்த்தகமாகத் தொடங்கி, கடந்த ஐந்தாண்டுகளாக நேரடிக் கடையில் வர்த்தகம் புரிகிறது நவீன ஆபரணங்கள் விற்கும் ‘தேசி பை தேசி’ நிறுவனம். உயர்ந்துவரும் வாடகைச் செலவைச் சமாளிக்க, பிற வர்த்தகங்களுடன் பங்காளித்துவ உறவுகளை ஏற்படுத்திக் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் சுப்பிரமணியன், 39. வாடகை குறித்துக் கருத்துரைத்த அவர், “தற்போது மறுஒப்பந்தம் கையெழுத்தாகும்போது வாடகை ஏற்றத்தை நிர்வகிக்க எவ்விதத் திட்டமோ சட்டமோ இல்லை,” என்றார். அரசாங்கம் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். கொவிட்-19 காலகட்டத்தில் வாடகை, வருமான வரித் தள்ளுபடிகள் போன்ற அரசாங்கம் வழங்கிய மானியங்கள் பெரிதும் கைகொடுத்தன என்று குறிப்பிட்ட திரு ஆனந்த், “இருந்தபோதும், மூத்த தலைமுறையைச் சேர்ந்த கடைக்காரர்களுக்கும் சிறு கடை உரிமையாளர்களுக்கும் இத்திட்டங்கள் சென்றுசேர உதவியாக உதவிக் குழுக்கள் இல்லை. இதனால், இதுபோன்ற திட்டங்களின் நோக்கம் நிறைவேற முடியாமல் போகிறது,” என்றார். இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் வேலை தேடச் சிரமப்படுவோர் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு ஆனந்த், “வேலைவாய்ப்பு விகிதம் உயர்ந்தால், வணிக வருவாய் செழிக்கும்,” என்றார்.

