சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டு, 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான லைஃப்எஸ்ஜி சிறப்புத் தொகை போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறார் தனியார்ப் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் சரஸ்வதி தேவி.
தொடக்கப் பள்ளியில் பயிலும் இரு பிள்ளைகளின் தாயான இவர், ஒவ்வொரு பிள்ளைக்கும் வழங்கப்படவுள்ள 500 வெள்ளி ரொக்க உதவி பெற்றோரின் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்றார்.
“எழுதுபொருள்கள், சீருடைகள், பாடப்புத்தகங்கள் எனச் செலவுகள் ஏராளம் இருக்கும். எனவே, என் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை ஈடுகட்ட இந்தத் தொகையைப் பயன்படுத்துவேன்,” என்றார் திருவாட்டி சரஸ்வதி.
மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புத் தொகை வரவேற்கத்தக்கது என்று அஷ்டலட்சுமி தினகரன் எனும் 39 வயதுத் தாயாரும் கூறினார்.
செயின்ட் ஸ்டீஃபன்ஸ் தொடக்கப் பள்ளியில் பயிலும் தம் 7 வயது மகனுக்காக எவ்வாறு செலவிடவேண்டும் என்று இன்னும் திட்டமிடவில்லை என்றார் அவர். ஆனால், குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இது உறுதியாக நன்மையளிக்கும் என்றும், கூடுதல் வகுப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் இதனைச் செலவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
இளம் குடும்பங்களின் எதிர்பார்ப்புகள்
இளம் பெற்றோர், வசதி குறைந்தோர், மாணவர்கள் எனப் பலருக்கும் அறிவிக்கப்பட்ட நிதித் திட்டங்களை வரவேற்பதாகச் சொன்ன ஐஸ்வர்யா சுப்பு, தாம் மேலும் சிலவற்றை எதிர்பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.
ஐந்து மாதக் குழந்தைக்குத் தாயான அவர், “குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்குச் செலவுகள் அதிகம். ஒருமுறை வழங்கப்படும் ரொக்க உதவி பால் மாவு, அணையாடை (diaper) போன்ற உடனடித் தேவைகளுக்குப் பயன்படும். அது நல்லது என்றாலும் நீண்டகாலத்தில் நன்மையளிக்கும் திட்டங்களை எதிர்பார்த்தேன்,” என்று சொன்னார்.
“இளம் பெற்றோர், குறிப்பாக இருவரும் பணிக்குச் செல்லும்போது, இல்லப் பணிப்பெண்களை அமர்த்துவது அவசியமாக உள்ளது. அதற்கான தீர்வைக் குறைப்பை எதிர்பார்த்தேன். அது மாதாந்தரச் செலவைக் குறைப்பதாக அமைந்திருக்கும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
‘பிடிஓ’ வீடுகள் தொடர்பான அறிவிப்புகளையும் எதிர்பார்த்ததாகச் சொன்ன அவர், தற்போதைய விலை நிலவரம் ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்குச் சவாலாக இருப்பதைச் சுட்டினார்.
பெரிய குடும்பங்களுக்கான ஆதரவு தேவை
சிங்கப்பூரில் பெரிய குடும்பத்தைச் சமாளிப்பதன் அழுத்தம் அதிகம் என்று கருத்துரைத்தார் ரசூல் பீவி. தமக்கு15, 11 மற்றும் 10 வயதுகளில் பிள்ளைகள் இருப்பதாகக் கூறிய அவர், “என்னால் ஓரளவு சமாளிக்க முடிந்தாலும், மாதாந்தரக் கட்டணங்கள், வீட்டுச் செலவுகள் என அழுத்தம் இருக்கிறது. வசதி குறைந்த குடும்பங்களுக்கு இந்த அழுத்தம் இன்னும் அதிகம் இருக்கக்கூடும்,” என்றார் திருவாட்டி ரசூல்.
ஒருமுறை பயனளிக்கும் நிதித் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும் அவை கிடைக்கும் நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. மாதாந்தரச் செலவுகளைச் சமாளிக்கும் திட்டங்கள் தேவை என்றார் அவர்.
தம் பிள்ளைகள் இருவருக்கும் வரும் ஜூலையில் ஆளும் $500 கிடைக்கப்போவது மகிழ்ச்சி அளித்தாலும், நீண்டகால ஆதரவுகளை எதிர்பார்த்ததாக அவர் கூறினார்.
“சிடிசி பற்றுச்சீட்டு, யு-சேவ் தள்ளுபடிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், ஆண்டு முழுமைக்குமான தேவைக்குக் கூடுதல் ஆதரவு அவசியம். யு-சேவ் ஆதரவு ஒவ்வொரு மாதமும் கிடைத்தால்கூட மகிழ்ச்சிதான்,” என்றும் திருவாட்டி ரசூல் கருத்து தெரிவித்தார்.

