பிடோக் உணவு நிலையத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது: அமைச்சர் ஓங்

காசநோய் குறித்த அச்சம்

பிடோக் உணவு நிலையத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது: அமைச்சர் ஓங்

2 mins read
803a8e56-b922-4390-855d-17d7097a8e8a
திரு ஷாஹுல் ஹமீட்டுடன் கைகொடுத்து அவரது கவலைகளைக் கேட்ட அமைச்சர் ஓங். - படம்: காமினி ஹஷ்வின்

புளோக் 216 பிடோக் உணவு நிலைய, சந்தையில் உணவருந்தச் செல்வது பாதுகாப்பானது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பொதுமக்களுக்கு உறுதிகூறியுள்ளார்.

பிடோக் சென்ட்ரலில் காசு நோய்ச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று இடங்களில் அதுவும் ஒன்று. 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இவ்வாண்டு பிப்ரவரிக்கும் இடையில் அந்த இடங்களில் 13 சம்பங்கள் கண்டறியப்பட்டன.

பிடோக் உணவங்காடியையும் பரிசோதனை நிலையத்தையும் செவ்வாய்க்கிழமை (மே 5) பார்வையிட்ட அமைச்சர் ஓங், அந்த வட்டாரத்தைத் தவிர்க்க வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் ஓங்.
மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் ஓங். - படம்: காமினி ஹஷ்வின்

காசநோய் ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறை சந்திப்பதாலோ, தட்டுகளைப் பகிர்ந்து கொள்வதாலோ, கை குலுக்குவதாலோ சாதாரணமாகப் பரவாது.

“ஏற்கெனவே பாதிக்கப்பட்டவருடன் நீண்ட கால, நெருக்கமான தொடர்பு இருந்தால் காசநோய் வரக்கூடும். எனவே, உணவங்காடி நிலையத்திற்கு வந்து சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது. உணவங்காடியில் கடை வைத்திருப்போருக்குத் தொடர்ந்து ஆதரவளியுங்கள்,” என்று திரு ஓங் வலியுறுத்தினார்.

காசநோய்ப் பரிசோதனையைச் செய்துகொள்ளச் சென்றவர்களோடு அமைச்சர் ஓங் உரையாடினார்.
காசநோய்ப் பரிசோதனையைச் செய்துகொள்ளச் சென்றவர்களோடு அமைச்சர் ஓங் உரையாடினார். - படம்: காமினி ஹஷ்வின்

அமைச்சர் ஓங் பொதுமக்களோடு இணைந்து உணவருந்தி, மக்களின் ஐயங்களைக் கேட்டறிந்தார்.

உணவு நிலையத்தில் ஒருசிலருடன் சேர்ந்து உணவிருந்தனார் அமைச்சர் ஓங்.
உணவு நிலையத்தில் ஒருசிலருடன் சேர்ந்து உணவிருந்தனார் அமைச்சர் ஓங். - படம்: காமினி ஹஷ்வின்

“மக்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளில் வரும்போது மக்கள் அதைக் கேள்விப்பட்டுப் பரிசோதனை செய்துகொள்ள முன்வருகிறார்கள், அதுவே முக்கியமானது,” என்றார் அமைச்சர் ஓங்.

தேசியத் தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் இருவர் ரத்தப் பரிசோதனை குறித்த விவரங்களைப் பகிர்ந்தனர்.

வந்திருந்தோரிடமிருந்து பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கும் பணியில் ஈடுபட்டார் முதுநிலைத் தாதி ஆதிவேதலஷ்மி சுப்ரமணியம்.
வந்திருந்தோரிடமிருந்து பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கும் பணியில் ஈடுபட்டார் முதுநிலைத் தாதி ஆதிவேதலஷ்மி சுப்ரமணியம். - படம்: காமினி ஹஷ்வின்

ரத்தப் பரிசோதனைக்கு வயது வரம்பு இல்லை என்று கூறினார், தேசியத் தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் முதுநிலைத் தாதியான 52 வயது ஆதிவேதலஷ்மி சுப்ரமணியம்.

தற்போது பெரும்பாலும் முதியவர்களே அதிகம் வருவதாகக் குறிப்பிட்ட அவர், அங்கு வேலை செய்பவர்களும், நோய்த் தொற்றுப் பற்றிக் கேள்விப்படுபவர்களும் பரிசோதனை செய்துகொள்கிறார்கள் என்றார்.

பெரும்பாலும் உணவு இடைவேளையின்போது பரிசோதனைக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஓங்குடன் பரிசோதனையைப் பற்றி உரையாடிய தேசியத் தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் முதுநிலை ரத்தப் பரிசோதனை நிபுணர் சங்கீதா மோகன்.
அமைச்சர் ஓங்குடன் பரிசோதனையைப் பற்றி உரையாடிய தேசியத் தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் முதுநிலை ரத்தப் பரிசோதனை நிபுணர் சங்கீதா மோகன். - படம்: காமினி ஹஷ்வின்

“11 வயதுச் சிறுவன் முதல் 87 வயது முதியவர்வரை அனைத்து வயதினரும் இந்தப் பரிசோதனைக்கு வருகிறார்கள்,” என்ற முதுநிலை ரத்தப் பரிசோதனை நிபுணரான 44 வயது சங்கீதா மோகன், தாம் ஒருநாளில் ஏறக்குறைய 80 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்வதாகப் பகிர்ந்தார்.  

இந்நிலையில், பெரும்பாலான உணவுக் கடைக்காரர்களின் வணிகம் ஏறக்குறைய 50 விழுக்காடுவரை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.  

“வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான வாடிக்கையாளர்களில் 5 விழுக்காட்டினர் மட்டும்தான் வருகிறார்கள்,” என்று பிடோக் உணவு நிலையத்தில் கடை வைத்திருக்கும் 45 வயது ஷாஹுல் ஹமிட் அப்துல் மாலிக் கூறினார்.

வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள்கள் கடையை மூடிவிடுவதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

“மக்கள் அச்சத்தின் காரணமாக உணவு வாங்க வருவதில்லை. எனவேதான் இது குறித்து நாங்கள் அமைச்சரிடம் பேசியுள்ளோம். கடை வாடகையைக் குறைப்பது குறித்து அவரிடம் ஆலோசித்துள்ளோம். அவர்கள் முயற்சி செய்வதாகக் கூறியிருக்கிறார்கள்,” என்றார் திரு ஷாஹுல் ஹமிட்.

குறிப்புச் சொற்கள்