தாயின் நினைவாக, சின்னம்மாவின் துணையோடு
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் காலமானதை நினைவுகூர்ந்தார் ஜே.கே.சரவணா, 44. அப்போது அவருக்கு 21 வயது மட்டும்தான்.
“அம்மாவை இழந்த நாளிலிருந்து அவருடைய தங்கைதான் என்னை தாய்ப் போல வளர்த்தார்,” என்று அவர் தெரிவித்தார்.
திரு சரவணாவையும் அவரது சின்னமாவையும் ஒன்றிணைத்த ஒரு பொதுவான காரணி உணவு. இருவரும் அதீத உணவுப் பிரியர்கள்.
விருந்தோம்பல் துறையில் சின்னம்மா ஷாமினி சுப்பையா, ஊடகத் துறையில் இருக்கும் திரு சரவணா மற்றும் உணவு மீதான காதலும் இணைந்து பிறந்தது ‘அம்மகாசே’ உயர்தர இந்திய உணவகம்.
‘நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்’ என்று பொருள்படும் ‘ஒமகாசே’ என்ற ஒரு ஜப்பானிய உணவு உண்ணும் பாணியைத் தழுவி இந்தியா, இலங்கையின் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த, ஒரு தாயின் கைப்பக்குவம் கொண்ட உணவு அனுபவங்களை அளிக்கிறது ‘அம்மகாசே’.
“ஒவ்வோர் ஆண்டும் ‘அம்மகாசே’ அன்னையர் தினத்தன்று தனது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது,” என்று அதன் மற்றொரு சிறப்பம்சத்தைக் குறிப்பிட்டார் அவர்.
‘அம்மகாசே’ உணவகத்தின் தூதராகவும் பணிபுரியும் திருவாட்டி ஷாமினி, உணவுபானத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிகுந்தவர். அவர் உணவகத்தை நடத்தும் நுணுக்கங்களைத் தலைமைச் செயல் அதிகாரியான திரு சரவணாவுக்குக் கற்றுக் கொடுத்தார்.
“தொழில்ரீதியாக மக்களுடன் பழகும் திறனை சின்னம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் வழி, நான் மக்களிடத்தில் உருவாகும் பிணைப்புகள், அவர்களுடன் பழகும் திறனைப் பற்றி நன்கு அறிந்துகொண்டேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டின் இரண்டாம் பாதியில் ‘அம்மகாசே’ நிறுவனம் சென்னை மற்றும் துபாய்க்கு விரிவடைகிறது. இதுபோன்ற தொழில் சார்ந்த முடிவுகளுக்குத் தேவைப்படும் கலந்துரையாடல்கள் அவருக்கும் சின்னமாவுக்கும் இடையே மிக ஆரோக்கியமானவை என்று திரு சரவணா பகிர்ந்தார்.
“செய்யும் தவறுகள், அவற்றிலிருந்து பிறக்கும் கற்றலுக்கு சின்னம்மா தொடர்ந்து எனக்கு இடமளித்தார். தாயும் மகனுமாக இருப்பதைவிட, எங்கள் உறவு உயிர் தோழர்கள் போன்றது,” என்று மனம் நெகிழத் தெரிவித்தார் திரு சரவணா.
தலைமுறை இடைவெளியைத் தகர்த்திய தாயும் மகளும்
சிறு வயதிலிருந்து தையல் கலையில் ஆர்வம் கொண்டிருந்த பிரேமா கேலு, 69, பெருந்தொற்றுக் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முகக் கவசங்களைத் தைத்து வந்தார்.
அம்மாவின் அந்தச் செயலைக் கூர்ந்து கவனித்த மகள் ஐஸ்வரியா வடிவேலு, 27, இதை ஏன் ஒரு தொழிலாக மாற்றக்கூடாது என்று யோசித்தார்.
அந்த யோசனையிலிருந்து 2021ஆம் ஆண்டு பிறந்தது ‘பாப்ஸ் டெய்லரிங்’ எனும் தையல் சிறுவணிகம்.
தையல் கலையில் அம்மா புதிய நுட்பங்களைக் கற்று எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாகச் செயல்படுவதைக் கவனித்துள்ளதாகத் தெரிவித்தார் ஐஸ்வரியா.
“அவருக்குச் சமூக ஊடகங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாததால் நான் உதவ முன்வந்தேன்,” என்று தன் பங்கைப் பற்றி அவர் விவரித்தார்.
பாரம்பரிய பரதநாட்டிய கலைஞருமான ஐஸ்வரியாவுக்கு ஆடைகளையும் தயாரித்துள்ளார் திருவாட்டி பிரேமா.
“நமக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஓர் ஆடையை வைத்திருப்பது எவ்வளவு சிறப்பு என்பதைத் தன் கைவண்ணம் வழி அம்மா எனக்கு உணர்த்தினார்,” என்றார் அவர்.
திருவாட்டி பிரேமா தையல் பணிகளைக் கையாள, ஐஸ்வரியா சமூக ஊடகச் சந்தா, நிர்வாகப் பொறுப்புகளை மேற்பார்வையிடுகிறார். அதனால், திருவாட்டி பிரேமா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பற்றி அதிகம் கவலைப்படவேண்டியதில்லை என்றும் பகிர்ந்தார் ஐஸ்வரியா.
அம்மா-மகள் இணையும் எந்தவொரு வணிகத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.
“பொதுவாக வியாபாரமும் குடும்பமும் தனித்தனியாக இருப்பதால் வியாபாரத்தில் ஏற்படும் நமது கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் குடும்ப விவகாரங்களை எட்டுவதில்லை,” என்றும் தெரிவித்தார் ஐஸ்வரியா.
இரண்டு தலைமுறைகளிடையே இடைவெளி இருக்கிறது. எப்படியோ அதை அவர்களுக்கு சாதகமாக திருவாட்டி பிரேமாவும் ஐஸ்வர்யாவும் பயன்படுத்திக்கொண்டனர்.
“தற்போதைய காலகட்டத்திற்கு எது பொருந்தும் என்று நான் என் அம்மாவிடம் சொல்வேன். அவரும் தன் ஆற்றலைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்குவார்,” என்றார் ஐஸ்வரியா.
வேற்றுமைகளைத் தாண்டி இரு தலைமுறைகளுக்கிடையே வளரும் கற்றல் தொடர்ந்து இருந்து வருவதால் அம்மாவுடன் இருக்கும் உறவு வலுப்படுகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஐஸ்வரியா.

