இறுதி ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களையும் தொழில்துறைத் தலைவர்களையும் இணைக்கும் ஒரு புதிய முன்னோடித் திட்டத்தைச் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) அறிமுகப்படுத்தியுள்ளது.
‘கரியர் பிரிட்ஜ்’ எனப்படும் அந்தத் திட்டத்தின் தொடக்கவிழா சிண்டா தலைமையகத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்றது.
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைத்தொழிலுக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.
பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தகுதிபெறும் இந்திய மாணவர்களுக்குத் தொழில்துறை அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கும் நோக்கில், திரு சித்தாந்த் கோஷும் அவரது குடும்பத்தினரும் சிண்டாவுடன் இணைந்து ‘கரியர் பிரிட்ஜ்’ திட்டத்தை உருவாக்கினார்கள்.
“வாழ்க்கையில் வாய்ப்புகளும் அவற்றை அணுகும் வசதிகளும் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. சில நேரங்களில் ஒரு சிறிய உரையாடல் அல்லது நம்பிக்கையூட்டும் ஒரு வழிகாட்டி, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைக்க முடியும்,” என்றார் திரு சித்தாந்த் கோஷின் தந்தை திரு அபிஜித் கோஷ். அவரும் இத்திட்டத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார்.
திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், வழிகாட்டிகளாகச் செயல்படும் தொழில்துறைத் தலைவர்கள், மூத்த சமூக, வணிகத் தலைவர்கள், சிண்டா பிரதிநிதிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், அடுத்த தலைமுறையினருக்கு ஆதரவளிப்பது, வழிகாட்டுதலின் அவசியம் ஆகியவை குறித்து தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் திட்டம் உருவான கட்டத்திலிருந்து திரு சித்தாந்தின் குடும்பத்திற்கு ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.
அந்தத் திட்டம் ஆறு மாதங்கள் நீடிக்கும். வேலைவாய்ப்புச் சந்தைக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே, மாணவர்களுக்குத் தொழில்துறை அனுபவத்தையும் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலையும் இத்திட்டம் வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் மூத்த தொழில் நிபுணர்களையும் சந்தித்து, அவர்களது தொழில் அனுபவங்களையும் பயணங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
“ஒரு தலைமுறையின் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதே எங்களின் நோக்கம். எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள் கிடைப்பதை உறுதிசெய்வது முக்கியம்,” என்று கூறினார் திரு சித்தாந்த்.
எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் பல மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த தாமும் தமது தந்தையும் எதிர்பார்ப்பதாகக் கூறினார் அவர்.
இந்நிலையில், ‘கரியர் பிரிட்ஜ்’ திட்டத்தின் மூலம் அனுபவம் வாய்ந்த தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தொழில் சம்பந்தப்பட்ட தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் என்னால் முடியும்,” என்று கூறினார் 22 வயது தாஷா மரியா ஆப்ரஹேம். அவர் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நிதித் தொழில்நுட்பம், வணிகப் பகுப்பாய்வுத் துறையில் பயில்கிறார்.
சிண்டாவுடன் இணைந்து நேர்காணல் பயிற்சி, தலைமைத்துவத் திறன் மேம்பாடு, தொழில் தொடர்புகளை வளர்ப்பதற்கான நிகழ்ச்சிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்க்கைத்தொழில் வளர்ச்சியை மேம்படுத்தத் திட்டமிடுகிறார் திரு சித்தாந்த்.


