மறதிநோய் உள்ள தன் தாயாரைப் பராமரித்துக்கொண்டே வீட்டுப் பொருள்களை இடமாற்றும் வேலையையும் செய்து வருகிறார் 56 வயதான பார்த்தீபன். ஒரு காலத்தில் பேருந்து ஓட்டுநராக இருந்த அவரது தாயார், இப்போது சாவ் அறநிறுவனத்தின் (Tsao Foundation) பகல்நேரப் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று வருகிறார்.
வேலைக்குச் செல்வதற்குமுன், காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் தாயாரைப் பராமரிப்பு நிலைய வாகனத்தில் ஏற்றி அனுப்புகிறார்.
வீட்டில் அவருக்கு உணவளிப்பது, பற்குச்சியில் பற்பசையை வைத்துத் தருவது என அனைத்துப் பணிகளையும் பார்த்தீபனே கவனிக்கிறார்.
வாரத்தில் மூன்று நாள்களுக்கு வீட்டுப் பராமரிப்பு ஊழியர் ஒருவர் வந்து அவரது தாயாரைக் குளிப்பாட்ட உதவுகிறார். நீக்குப்போக்கான வேலை நேரம் வழங்கப்பட்டுள்ளதால் பார்த்தீபனால் சற்று சமாளிக்க முடிகிறது.
மேலும் அவரது வார இறுதி நாள்கள் முழுவதுமாக தாயாரைச் சுற்றியே அமைகின்றன. “அதிக நேரம் நான் வீட்டில்தான் இருப்பேன். வேலையும் வீடும்தான் என் உலகம்,” என்று அவர் கூறினார்.
சிறுவயதில் தனக்கு ‘அம்புலிமாமா’ புத்தகங்களை வாங்கித் தந்த தாயாருக்கு, இப்போது இரவில் பார்த்தீபன் அதே கதைகளைச் சொல்லி மகிழ்விக்கிறார்.
தாயாரை இடைவிடாது கவனிக்க வேண்டியுள்ள பார்த்தீபன், ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்த்துக்கொள்ளும்படி தம் அண்ணனிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், தாயாரின் மருந்துகளையும் பராமரிப்பையும் கையாள்வதில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.
பராமரிப்பாளர் ஒருவரால் பார்த்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கான திட்டமிடுதலின் அவசியத்தைச் சாவ் அறநிறுவனத்தின் ஹுவா மே ஆலோசனைக் குழுவின் திட்டத் தலைவர் லோ யான் ஜூ, 39, சுட்டிக்காட்டினார்.
பெரும்பாலான குடும்பங்களில் அவசரநிலை ஏற்படும் வரை இத்தகைய உரையாடல்கள் தள்ளிப்போடப்படுவதாக அவர் கூறுகிறார்.
‘உதவியும் பொறுப்பும் ஒன்றாகிவிடாது’
தாய்-மகளான 86 வயது நிக்கியும் 59 வயது மாயாவும் தங்களின் பராமரிப்புப் பொறுப்புகள் நாளடைவில் தலைகீழாக மாறியதைக் கண்டனர்.
நிக்கியும் அவரது மறைந்த கணவரும் ஒரு காலத்தில் மாயாவின் இரு மகள்களை வளர்க்க உதவினர். இப்போது பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நிக்கியை மாயா பார்த்துக்கொள்கிறார்.
இல்லப் பணிப்பெண்களின் உதவி இருந்தாலும், பராமரிப்பைக் கண்காணிக்கும் பொறுப்பு குறைவதில்லை.
“பராமரிப்புப் பணிகளைப் பகிர்வது வேறு, பராமரிப்புப் பொறுப்பைப் பகிர்வது வேறு. இது மிகப்பெரிய சவால்களில் ஒன்று,” என்று திருவாட்டி லோ குறிப்பிடுகிறார்.
மற்றவர்கள் உதவினாலும், முதன்மைப் பராமரிப்பாளர்களே மருத்துவச் சந்திப்புகளை ஒருங்கிணைப்பது, மாற்றங்களைக் கண்காணிப்பது, முடிவுகளை எடுப்பது போன்றவற்றைச் செய்கின்றனர்.
இல்லப் பணிப்பெண்ணின் உதவியுடன் மாயாவின் குடும்பத்தினர் நிலையான வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். காலை 8 மணிக்குச் சிற்றுண்டி, உரையாடல், 12.30 மணிக்கு நண்பகல் உணவு, மாலை 4 மணிக்குத் தேநீர், இரவு 7.30 மணிக்கு இரவு உணவு.
நிக்கி தமது கடைசி மருந்தை இரவு 9 மணிக்கு உட்கொள்கிறார். வெளியே செல்ல சக்கர நாற்காலி ஏற்பாடுகள் உட்பட வெளியூர்ப் பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டமிடல் அவசியம். மாயா தனது உறவினர்களுடன் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டாலும், அவரே முதன்மைப் பராமரிப்பாளராகத் தொடர்கிறார்.
அனைத்தையும் அர்ப்பணித்த அண்ணன்
47 வயதான சுரேஷ், தம் தாயாரின் மறைவுக்குப் பிறகு, பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்ட தம் தம்பி குணசீலனைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
உடற்பயிற்சி ஆசிரியரான சுரேஷின் நாள் அதிகாலை 4 மணிக்கே தொடங்குகிறது. தம்பியைக் குளிப்பாட்டி, உணவளித்து, பகல்நேரப் பராமரிப்பு மையத்திற்கு ஆயத்தப்படுத்துமுன் அவர் உடற்பயிற்சி செய்து முடித்துவிடுவார்.
வீட்டில் உதவியாளர் இருந்தபோதிலும், சுரேஷ் தம் தம்பியைத் தனியாக விட்டதில்லை. தம்பியுடன் உணவங்காடி நிலையத்திற்குச் சென்று உணவருந்துவது, அணையாடையை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளிலும் உதவினார்.
தம்பியைப் பராமரிப்பதற்காகத் தமக்குப் பிடித்த நடிப்பு போன்ற நீண்ட நேரப் பணிகளை விட்டுக்கொடுத்ததாகச் சுரேஷ் கூறினார். திருமணம் செய்துகொள்வதையும் தவிர்த்த அவர், தம் தேவைகளைவிடத் தம்பியின் தேவைகளுக்கே முன்னுரிமை அளித்தார். தம் தம்பியே தனது நெருங்கிய நண்பர் என்றார் அவர்.
“அவருக்கு என்ன வேண்டும் என்றுதான் நினைத்தேனே தவிர, எனக்கு என்ன வேண்டுமென்று நினைக்கவே இல்லை,” என்ற சுரேஷ், தாம் செய்த தியாகங்களைவிட இப்போது தம்பியின் மறைவால் ஏற்பட்ட வெறுமையே பெரிதாகத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.
நிதியாதரவு அடித்தளம்
நிதியுதவி கிடைத்தாலும் பராமரிப்புக்கான தொடர் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாகப் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊழியரிடம் உதவி கோரிய பிறகு, தாயாரைக் குளிப்பாட்டும் சேவைக்கான கட்டணம் குறைக்கப்பட்டதுடன், பகல்நேரப் பராமரிப்புக்கான ஆறு மாதக் கட்டண விலக்கும் கிடைத்ததாகப் பார்த்தீபன் தெரிவித்தார்.
அணையாடைச் செலவுகளைச் சமாளிக்க நிதியுதவி துணைபுரிந்தாலும், சில செலவுகளைக் குடும்பமே ஏற்க வேண்டியுள்ளதாக மாயா கூறினார்.
மருத்துவம், பகல்நேரப் பராமரிப்பு, வீட்டுப் பணிப்பெண் ஆகியவற்றுக்குக் கிடைத்த உதவி போதவில்லை என சுரேஷ் குறிப்பிட்டார்.
பராமரிப்பின் நிதித் தாக்கம் அன்றாடச் செலவுகளுடன் நின்றுவிடுவதில்லை. வேலை நேரத்தைக் குறைப்பதும் பணியிலிருந்து விலகுவதும் தொழில் முன்னேற்றம், ஓய்வுக்காலச் சேமிப்பு, நீண்டகால நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிக்கலாம் என தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே.தனலெட்சுமி கூறினார்.
பராமரிப்பாளர்கள் பணியில் நீடித்திருக்க ஏதுவாக, நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள், சம்பளத்துடன் கூடிய குடும்பப் பராமரிப்பு விடுப்பு ஆகியவற்றை வலுப்படுத்த என்டியுசி கோரியுள்ளது.
வீட்டிலிருந்து பணியாற்ற முடியாதோருக்கு முன்கூட்டியே வழங்கப்படும் பணி அட்டவணை, பணிநேர மாற்றம், பகுதிநேர வேலை, வேலை மறுவடிவமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம் எனத் திருவாட்டி தனலெட்சுமி கூறினார். இவற்றைப் பயன்படுத்துவதால் தொழில் முன்னேற்றம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பராமரிப்பாளர்களுக்கு இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேலையிலிருந்து விலகி, பராமரிப்பில் ஈடுபடுவதால் ஏற்படும் வருமான இழப்பை நிதியுதவிகள் முழுமையாக ஈடுசெய்வதில்லை என ஹுவா மே நிலையத்தின் மூத்த மருத்துவர் டாக்டர் ஆண்ட்ரியா டான் சுட்டினார். பகல்நேரப் பராமரிப்பு நிலையங்கள் செயல்படும் நேரம், மாறுநேர வேலையிலோ சுழற்சிமுறையிலோ பணியாற்றுவோர்க்குப் பொருந்தாமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.
உடலுழைப்பைப் போலவே பராமரிப்பின் மனச்சுமையும் பெரிது எனத் திருவாட்டி லோ யான் ஜூ குறிப்பிட்டார். 2023ஆம் ஆண்டின் ‘சிங்கப்பூர் முதியோர் நல்வாழ்வு’ (WiSE) ஆய்வின்படி, முதுமை மறதிநோய் இல்லாதவர்களைப் பராமரிப்போருடன் ஒப்பிடுகையில், அந்நோய் உள்ளவர்களைப் பராமரிப்போர் அதிகப் பணிச்சுமையை எதிர்கொண்டனர்.
மருத்துவச் சந்திப்புகளை நினைவில் வைத்திருப்பது, உடல்நிலை மாற்றங்களைக் கண்காணிப்பது, பராமரிப்பை ஒருங்கிணைப்பது ஆகிய பொறுப்புகள் வேலை நேரத்திலும் ஓய்விலும் தொடர்கின்றன. குடும்பத்தினரைத் தாமே கவனிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, உதவி கேட்பதற்குத் தடையாகலாம் என்றார் அவர்.
ஆதரவு தேவைப்படும்போது நாடுங்கள்
பராமரிப்பில் சிரமமும் மகிழ்ச்சியும் சேர்ந்து இருக்கலாம். பொறுப்புகளைப் பகிர்வது அன்பைக் குறைப்பதில்லை; நீண்டகாலம் சிறப்பாகப் பராமரிக்கவே அது உதவுகிறது எனத் திருவாட்டி லோ கூறினார்.
“நான் எவ்வளவு என் தாயாருக்குச் செய்தாலும் அது அவர் எனக்கு செய்ததற்கு ஈடாகாது. அதனால் அதை நாம் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்,” என்றார் பார்த்தீபன்.
