தமது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் பராமரிப்பதும் ஆதரிப்பதும் தமது கடமை என்று கருதுகிறார் திருவாட்டி தவமணி ஆறுமுகம் நூர் ஆயிஷா.
உடல்நலம் தொடங்கி, உணர்வுபூர்வமான, சமூகச் சவால்களை எதிர்கொள்வோர்க்கு ஆதரவளிப்பதில் தமது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டுள்ள திருவாட்டி தவமணி, கடந்த மாதம் தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு (என்யுஎச்எஸ்) சார்பில் நடைபெற்ற பராமரிப்பாளர் தின விழாவில் சிறப்பிக்கப்பட்டார்.
மூப்படைந்து வரும் சமூகத்தில் பராமரிப்புத் தேவைகள் அதிகரிக்கும் நிலையில், அத்தகைய பணிகளைச் சிறப்புற மேற்கொள்வோரை இந்நிகழ்ச்சி கெளரவித்தது.
இதில் பங்கேற்ற தவமணி, தாம் மேற்கொண்டவை தனிப்பட்ட பராமரிப்பு என்கிற எண்ணம் தமக்கு இல்லையென்றார். இதனைத் தமது பொறுப்பாகக் கருதுவதாகவும் அவர் சொன்னார்.
அடித்தளத் தலைவராகவும் பங்காற்றியுள்ள இவர், குடும்பச் சேவை மையம் மூலம் ‘கொம்கேர்’ திட்டத்தின்கீழ், சிரமப்படுவோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் பயிற்சி பெற்றவர்.
குடும்ப, சுற்றுப்புற, சமூகத்தினருக்கான பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவதற்காக தமது 54வது வயதில் பணியிலிருந்து விலகினார் இவர்.
உடல்நலக் கோளாறுகள் கொண்ட தமது சகோதரரைத் தற்போது பராமரித்து வருகிறார் திருவாட்டி தவமணி.
“எனது சகோதரரின் ரத்தச் சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பேன். இயன்றவரை அவருக்குத் தேவையான உணவஒயும் சமைத்துக் கொடுப்பேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தமது குடும்பப் பொறுப்பினை முழுமையாக ஏற்று மேற்கொள்ளும் இவர், நாட்பட்ட நோய்கள், மனச்சோர்வு, நிதி நெருக்கடி, சமூகத் தனிமை ஆகியவற்றால் தவிக்கும் நண்பர்களுக்கும் வழிகாட்டி, ஆதரவு வழங்குகிறார்.
“அண்மையில் குடும்பச் சிக்கல், பிரிவு, மனப்போராட்டம் ஆகியவற்றால் தவித்த எனது தோழிக்கு உறுதுணையாக இருந்தேன். என்னால் இயன்ற ஆதரவை வழங்குவது எனக்கும் மனநிறைவு அளிக்கிறது,” என்றார் திருவாட்டி தவமணி.
“பராமரிப்புப் பணி சோர்வையும் மன அழுத்தத்தையும் அளிக்கும் வாய்ப்புண்டு. ஆனால், என்னைச் சுற்றியுள்ளோர் நான் செய்யும் உதவிகளால் பலன் பெறுவதைக் கண்டு மனமகிழ்ச்சி அடையும்போது சோர்வு தெரிவதில்லை,” என்றும் அவர் கூறினார்.
பராமரிப்பாளர் தின விழா
கடந்த மே 16ஆம் தேதியன்று இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற பராமரிப்பாளர் தின விழாவில், தகுதியுள்ள குடும்பங்கள் பராமரிப்பு தொடர்பான செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், தென்மேற்கு பராமரிப்பாளர் ஆதரவு நிதி (South West Caregiver Support Fund) 800 வெள்ளியிலிருந்து 1,000 வெள்ளியாக உயர்த்தப்படுவதாகத் தென்மேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் அறிவித்தது.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு (என்யுஎச் எஸ்), கொள்கை ஆய்வுக் கழகத்துடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது. இது, பராமரிப்பு, பராமரிப்பாளர் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் பரிந்துரைகளிலும் நீண்டகால ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமாகும்.
இது, சிங்கப்பூரில் உள்ள பராமரிப்புச் சவால்கள் குறித்த புரிதலை ஆழப்படுத்துவது, அனுபவங்களைக் கொள்கைசார் நுண்ணறிவுகளாக மாற்றுவது, பராமரிப்பாளர் ஆதரவு அமைப்புகளை குறித்த கலந்தாலோசனைகளை ஆதரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

