சிங்கப்பூரின் ‘என்எச்ஜி ஹெல்த்’ குழுமம் தனது நிர்வாகத்தின்கீழ் உள்ள அனைத்து மருத்துவக் கழகங்களிலும் ‘பராமரிப்பாளர் பங்கேற்புத் திட்டத்தை’ முறைப்படி விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
அதன் தாதியர் தினக் கொண்டாட்டத்தின்போது இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது.
‘தாதிமைத் துறையின் இதயம்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு ஜூலை 29ஆம் தேதி கூ டெக் புவாட் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்வாண்டு இறுதிக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10 விழுக்காட்டினருக்குப் பயிற்சி பெற்ற குடும்பப் பராமரிப்பாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய இத்திட்டம் இலக்கு வகுத்துள்ளது. அதனை 2027ல் 15 விழுக்காடாகவும் 2028க்குள் 20 விழுக்காட்டிற்கு மேலாகவும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
குடும்பப் பராமரிப்பாளர்களை மருத்துவக் குழுவின் பங்காளிகளாக முறைப்படி மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். பயிற்சி பெற்ற குடும்ப உறுப்பினர்கள், நோயாளிகளுக்குத் தேவையான அன்றாட உதவிகள், உணவளித்தல், நடக்க உதவுதல் போன்ற மருத்துவம் சாராத உதவிகளைத் தாதியரின் மேற்பார்வையில் வழங்குவர்.
“நோயாளியின் உடலை ஈரத்துணியால் எவ்வாறு சுத்தம் செய்வது, ஓரிடத்திலிருந்து நோயாளியை எவ்வாறு நகர்த்துவது போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் இருந்த ஒரு தாதி, முயன்றால் சரியாகச் செய்யக் கற்றுக்கொள்ள முடியும் என ஊக்கமளித்தார். என் கணவரை நானே பார்த்துக்கொள்வதற்கான துணிவைப் பெறுவதற்குத் தாதியர் வழிகாட்டினர்,” என்று பராமரிப்பாளர் பங்கேற்புத் திட்டத்தில் பங்கேற்ற திருவாட்டி கங்கா தேவி சரவணன் கூறினார்.
உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய தாதியர், ஒரு குடும்ப உறுப்பினரைப் போல உதவி, நோயாளியாக மருத்துவமனையில் இருந்த தன் கணவரை மட்டுமல்லாது தன்னுடைய நலத்தையும் விசாரித்து ஆறுதல் அளித்தனர் என்றும் அவர் சொன்னார்.
மருத்துவத் துறையில் தாதியரின் சேவையைப் பாராட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘சிறந்த தாதி’ விருது இம்முறை ஒன்பது தாதியர்க்கு வழங்கப்பட்டது. மனவளர்ச்சிக் குறைபாடு, மதியிறுக்கக் குறைபாடுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக மனநலக் கழகத்தின் நிபுணத்துவத் தாதி ஷீபா நித்யா நிருபமா விருது பெற்றார்.
பேச இயலாத நோயாளிகள் தங்களின் தேவைகளைத் தெரிவிக்க ஏதுவாக ‘6எஸ் நடமாட்ட மறுசீரமைப்புத் திட்டத்தை’ உருவாக்கினார். இது நோயாளிகளின் தேவையற்று கோபப்படுவதைக் குறைக்க உதவியுள்ளது.
“நோயாளிகளைப் பற்றித் தெரியவில்லை என்றால், அது ஒரு சவாலாக இருக்கும். அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது, அது பராமரிப்பு வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக மாறுகிறது,” என்றார் 29 ஆண்டுகளாகத் தாதியாக பணிபுரியும் திருவாட்டி ஷீபா.
“ஒரு நிலையான சுகாதாரக் கட்டமைப்பு என்பது கூட்டுமுயற்சியால் மட்டுமே அடையமுடியும். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது என்ற நிலையிலிருந்து மாறி, குடும்பத்தினருடனும் இணைந்து கவனிப்பு வழங்குவதே நோக்கம்,” என்று என்எச்ஜி ஹெல்த் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் ஜோ சிம் குறிப்பிட்டார்.
“சுகாதாரத் துறையின் எதிர்காலம் என்பது மருத்துவக் குழுவினர்க்கும் சமூகத்திற்கும், முக்கியமாக நோயாளிகளோடு இருக்கும் குடும்பத்தினர்க்கும் இடையே அமையும் வலுவான கூட்டுறவில்தான் உள்ளது. தாதிமைத் துறையில் உள்ள நாங்கள், குடும்பத்தினர் இந்தப் பொறுப்பைத் தன்னம்பிக்கையோடு கையாள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்,” என்று அக்குழுமத்தின் தலைமைத் தாதிமை அதிகாரி ஷெர்லி ஹெங் கூறினார்.
“அதிக அளவிலான ஆண்கள் இந்தத் தொழிலில் இணைந்து பணிபுரிவதைக் காண்பது மிகுந்த ஊக்கமளிக்கிறது. கருணை, தலைமைத்துவம், பராமரிப்பில் சிறந்த தரம் ஆகியவை பாலினத்தைக் கடந்தவை. ஒவ்வொரு தாதியும் இந்தத் துறையில் தனித்துவமான பலங்களைக் கொண்டுவருகின்றார்,” என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தமது உரையின்போது குறிப்பிட்டார்.
அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்களில் தாதிமைத் துறையும் ஒன்று என்பதை உணர்வர் என்பதை இன்னும் அதிகமான இளையர்கள் உணர்வர் என்ற அவர், தாதியர் அனைவர்க்கும் தாதியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

