கர்நாடக இசையை இளந்தலைமுறையினரும் புதிய பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில் புகழ்பெற்ற வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும் கர்நாடக இசைக் கலைஞர் சந்தீப் நாராயணும் நிகழ்ச்சியொன்றைப் படைக்கவுள்ளனர்.
காலத்தால் அழியாத படைப்புகளையும் உணர்வை மீட்டும் ராகங்களையும் இணைத்து, குரலிசையும் வீணையிசையும் இயல்பாகப் பின்னிப்பிணையும் வளமான நாதவெளியைக் கலைஞர்கள் இருவரும் உருவாக்கவுள்ளனர் .
“இந்தக் கூட்டணி சிறப்பானதோர் அனுபவம். ராஜேஷின் வீணைக்கும் சந்தீப்பின் குரலுக்கும் இடையில் ஆக்ககரமான போட்டியைப் பார்வையாளர்கள் காணலாம். சிறந்த கலைஞர்கள் இருவர் இசையின்மூலம் ஒருவருக்கொருவர் பதிலளிப்பதைப் பார்க்கலாம்.
“இது வழக்கமான பாரம்பரியக் கச்சேரி போல உணரப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது சிங்கப்பூர் ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீ சிந்துஜா நாயர், 24.
‘டைமண்ட் பேர்ல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ‘ரசா’ எனும் இந்தப் புதுமையான கர்நாடக இசை நிகழ்ச்சி, அக்டோபர் 25ஆம் தேதி விக்டோரியா திரையரங்கில் இரவு 7 மணிக்கு இடம்பெறும்.
உள்ளூர்க் கலைச் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நுழைவுச்சீட்டு விற்பனையின் ஒரு பகுதி சிங்கப்பூரின் பாரம்பரியக் கலைக் கல்விக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
‘சிஸ்டிக்’ தளம் அல்லது ‘https://www.sistic.com.sg/events/rasa1026’ என்ற இணையத்தளம் வழியாக நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.
