உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் யோகப் பயிற்சிக் கூடங்கள், தியான மையங்கள், கோயில் வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் தொடங்கி, சில மேல்நாட்டுத் திரைப்படங்கள், இசைக்கோப்புகள், சமூக ஊடகக் காணொளிகள்வரை பயன்படுத்தப்படும் கணீர்க் குரலுக்குச் சொந்தக்காரர் டாக்டர் பாக்யா மூர்த்தி.
ஜெர்மனியைச் சேர்ந்த ‘எனிக்மா’ குழுவினர், ‘த சைல்ட் வித்தின் அஸ்’ எனும் பிரபல இசைக்கோப்பில் திருவாட்டி பாக்யாவின் குரலைப் பயன்படுத்திய பின்னர், இவரது குரல் உலகில் பல வட்டாரங்களிலும் ஒலித்து வருகிறது.
“எனது குரல் இவ்வளவு தூரம் பயணம் செய்யும் என நினைக்கவில்லை. தற்போது அவை வலம் வருவதும் நண்பர்களும் சுற்றத்தாரும் எனக்கு அவற்றைப் பகிர்ந்து வாழ்த்துவதும் மகிழ்ச்சி தருகின்றன,” என்றார் திருவாட்டி பாக்யா.
1979ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், இங்குள்ள இசைச் சூழலுடன் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பி, இசைப் பயிற்றுநராகத் தமது பணியைத் தொடங்கினார்.
கர்நாடக இசை, மெல்லிசை, பக்திப் பாடல்கள் எனப் பன்முகத்தன்மை கொண்ட குரலால் இவருக்கு சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சிகளில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
தாய்மொழி கன்னடம் என்றாலும் இங்குள்ள சூழலில் தமிழின் அவசியத்தை உணர்ந்து மிகத் துல்லியமான உச்சரிப்புடன் பாடும் திறனை வளர்த்துக்கொண்டதாக இவர் கூறினார்.
“தமிழை அர்த்தம் உணர்ந்து பேசுவது முக்கியம். அது பாடல்களின் அழகியல், உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும்,” என்றார் திருவாட்டி பாக்யா.
“சிராங்கூன் சாலையில் உள்ள அங்காடிப் பலகைகள்தான் எனக்கு ஆசிரியர்கள். அங்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் பெயர்கள் இருக்கும். அதைப் பார்த்து பார்த்து தமிழ் எழுத்துகளைப் பழகிக்கொண்டேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கத்தில் தமிழில் உள்ள சொற்களைப் பொறுமையாகப் படித்து, அவற்றைக் கன்னடத்தில் எழுதிப் பாடியதாகச் சொன்ன அவர், காலப்போக்கில் தமிழில் வாசிக்கப் பழகியதையும் சுட்டினார்.
“இப்போது என்னால் நன்றாகத் தமிழ் படிக்க முடியும். சிலப்பதிகாரப் பாடல்களைக்கூட நான் எழுதிவைத்துப் பாடியிருக்கிறேன்,” என்று திருவாட்டி பாக்யா குறிப்பிட்டார்.
இசைக்கு மொழி தடையாக இல்லை என்றாலும் மொழியின் உச்சரிப்பு, கருப்பொருள், உணர்வு ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு பாடினால் பாடல் சுவையுடன் இருக்கும் என்றார் அவர்.
தமிழ், கன்னடம் மட்டுமன்றி, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் சிங்கப்பூரில் மலாயிலும் ஓரிருமுறை சீனத்திலும் பாடியுள்ளதைத் திருவாட்டி பாக்யா சுட்டினார்.
குரலை உலக மேடைக்கு எடுத்துச் சென்ற ‘சாம்ப்ளிங்’
“நிருத்யாலயா எஸ்தெடிக்ஸ் சொசைட்டியில் 15 ஆண்டுகளாகப் பாடிவந்தேன். அப்போது ஜெர்மனியிலிருந்து அழைப்பு வந்தது. பெரிதாக விவரங்கள் ஏதும் கேட்டறியாமலேயே மூன்று மணிநேரம் பாடிக் கொடுத்தேன். அது தற்போது வரை பயன்படுத்தப்படும் என்று தெரியாது,” என்றார் திருவாட்டி பாக்யா.
“கிருதிகள், சுலோகங்கள், மந்திரங்கள், ஆலாபனை தொடங்கி நாட்டுப்புறப் பாடல்கள் வரை எனக்குத் தெரிந்த அனைத்தையும் பாடச் சொன்னார்கள். பிறகு அவர்கள் இதற்கான உரிமைகளை எடுத்துக்கொள்கிறோம். உங்கள் குரல் உலகெங்கும் பரவும் என்றார்கள். நானும் ஒப்புக்கொண்டேன். சிறிது காலம் கழித்து நான் அதை மறந்தே போனேன். திடீரென ஒருநாள் பெங்களூரிலிருந்து நண்பர்கள் அழைத்து, “உன் குரல், ‘ஃபியூஷன்’ பாணி இசையில் கேட்கிறதே என்றார்கள். மகிழ்ச்சிதான்,” என்று திருவாட்டி பாக்யாதமது பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
சில சமூக ஊடகங்களில், பிரபலங்களின் காணொளிக் கோப்புகளிலும் தமது குரலைக் கேட்பது தனி மகிழ்ச்சி என்றார் இவர்.
தொழில்நுட்ப வளர்ச்சியும் படைப்பாற்றலும்
தற்காலத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இசையைப் படைக்க முடிவது குறித்துப் பேசிய திருவாட்டி பாக்யா, இது வருத்தமளிக்கும் ஒன்றுதான் என்றார்.
ஆய்வு செய்வதற்கு இது சுவாரசியமாக இருந்தாலும், உண்மைத்தன்மையில் இருந்து விலகியுள்ளதை ரசிக்க முடியவில்லை என்கிறார் இவர்.
“ஒரு கலைஞர் ‘ஆஆ’ என சில நொடிகள் பாடினாலும் அதைக் கொண்டு இசையைப் படைக்க முடியும் என்பது சவால்தான்,” என்றார் அவர்.
சிங்கப்பூர், இசைக்கலைஞர்களை மிகவும் ஊக்குவிப்பதாகச் சொன்ன அவர், “நான் பிறந்தது இந்தியாவில் என்றாலும் வளர்ந்தது இங்குதான். அதனால், இந்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. எனக்குத் தெரிந்தது சங்கீதம் மட்டுமே. கவிஞர் அமலதாசன் எழுதிய பல தேசபக்திப் பாடல்களுக்கு நான் மெட்டமைத்ததுடன், என் மகன் கிஷன் மூர்த்தியுடன் இணைந்து அவற்றை வெளியிட்டேன். அது மிகுந்த மனநிறைவு அளித்தது,” என்று சொன்னார்.
சிங்கப்பூரில் மாணவர்கள் பலருக்கு இசை பயிற்றுவிக்கும் இவர், அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று மேடைகளில் பாட வாய்ப்புகளைப் பெற்றுத் தருவது தமது இலக்குகளில் முக்கியமானது என்றார் திருவாட்டி பாக்யா.

