மலாவியில் சிங்கப்பூரர் கொலையுண்ட விவகாரம்: ஓராண்டுக்குப் பிறகும் நீதிக்காகப் போராடும் குடும்பத்தினர்

மலாவியில் சிங்கப்பூரர் கொலையுண்ட விவகாரம்: ஓராண்டுக்குப் பிறகும் நீதிக்காகப் போராடும் குடும்பத்தினர்

2 mins read
b0fc7741-c9ec-460e-a985-b0797dc6eab0
அமரர் அர்ஜுன் மேனன் (வலது). - படம்: சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம்

மலாவியில் 2025ஆம் ஆண்டு சிங்கப்பூரர் அர்ஜுன் மேனன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விடைதெரியாமல் அவர் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

மலாவியின் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் மேனன், 48, சென்ற ஆண்டு மே மாதம் பிளான்டயர் நகரில் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், விரைவாக நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அர்ஜுனின் இளைய சகோதரி பிரேமா மேனன், 42.

இது குறித்துத் தமிழ் முரசிடம் பேசிய அவர், தமது சகோதரர் இறந்துவிட்டதாக அதிகாலையில் வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு தங்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டதாகக் கூறினார்.

“பெற்றோர் பிள்ளையை இழப்பது மிகப் பெரிய கொடுமை. என் பெற்றோர் தங்களது மகனை இழந்துவிட்டனர். இந்தச் சூழலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்று தெரியவில்லை,” என்றார் திருவாட்டி பிரேமா.

மலாவியின் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய அர்ஜுன் மேனன் (வலம்).
மலாவியின் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய அர்ஜுன் மேனன் (வலம்). - படம் : ஃபிரான்சிஸி

மீளாத் துயரில் குடும்பத்தினர்

சகோதரர் கொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் மாதம் தமது தாயார் காலமானதாகக் கூறிய திருவாட்டி பிரேமா, கொலை நடந்து ஓராண்டுக்கும் மேலாகியும் குற்றவாளி எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. பலமுறை தொடர்புகொண்டபோதும் மலாவி காவல்துறையினர் விசாரணை தொடர்கிறது என்றே கூறுகின்றனர் என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் மலாவியின் தூதரகம் இல்லை என்பதால், கிடைக்கும் உதவிகள் வெளியுறவு அமைச்சின் வரம்புக்குட்பட்டதாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக மலாவி அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளதாகவும் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணையில் சிங்கப்பூர்க் காவல்துறையினர் சிங்கப்பூர்ச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உதவத் தயாராக இருப்பதாகத் திருவாட்டி பிரேமா தெரிவித்தார்.

கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அமரர் அர்ஜுன் அவரது விளையாட்டுச் சாதனைகளுக்காக அனைவராலும் நினைவுகூரப்படுகிறார். சிங்கப்பூர் தேசிய அணிக்காக விளையாடியவர் அர்ஜூன்.

பிறகு பயிற்றுவிப்பாளராகவும் மாறி, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூர் தேசிய அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் தங்கப்பதக்கத்தை வெல்ல வழிவகுத்தவர் அமரர் அர்ஜூன்.

அர்ஜுன் மேனனின் நினைவைப் போற்றும் வகையில், அவரது நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான 51 வயது ஷெஹ்சாத் ஹக் உள்ளிட்டோர் சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தில் விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்தினர்.

இதன் மூலம் ‘கிவ்.ஏஷியா’ இணையப்பக்கத்தில் திரட்டப்பட்ட $13,000க்கும் அதிகமான நிதி, மலாவியில் உள்ள மௌனி ஆதரவற்றோர் இல்லத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள விவேகானந்தர் கலாசார நிலையத்திற்கும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

“அர்ஜுன் மலாவியை மிகவும் நேசித்தார். அவர் நேசித்த நாட்டிலேயே அவரது மரணம் விடைதெரியாமல் முடிந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது,” என்று தெரிவித்தார் திருவாட்டி பிரேமா.

சகோதரரின் மரணத்திற்கு நீதி கிடைக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திருமதி பிரேமா, கடந்த ஜூலை மாதம் முதல் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இது குறித்த தகவல்களைப் பதிவிட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சிங்கப்பூர்கொலைகிரிக்கெட்குடும்பம்