புகழ்பெற்ற இந்திய அமெரிக்க பரதநாட்டிய கலைஞர் மைதிலி பிரகாஷ், 42, மீண்டும் சிங்கப்பூருக்கு வந்து தனித்துவமிக்க நாட்டியப் படைப்பை வழங்கவிருக்கிறார்.
நாட்டிய படைப்பு என்பதற்கு அப்பால், பெண்களின் வலிமையையும் பொறுமையையும் போற்றும் படைப்பாக இது இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
‘நற்பேறுடையவள்’ (She’s Auspicious) என்ற இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளன்று நடைபெறவுள்ளது.
தொன்மக் கதைகளிலும் நடைமுறை சமூகத்திலும் பெண்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர், தெய்வ நிலையில் இருப்பதாகக் கருதப்படும் இந்தியப் பெண்களிடம் என்னென்ன பண்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன எனச் சிந்தனையைத் தூண்டும் விதமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது.
கலை என்பது இணைப்புகளை உருவாக்குவதாகும். இதைத் தமது படைப்பு நிச்சயம் வெளிக்கொணரும் என்று நம்பிக்கையுடன் கூறினார் திருவாட்டி மைதிலி.
லாஸ் ஏஞ்சலிஸில் பிறந்து வளர்ந்த திருவாட்டி மைதிலி, ஆறு வயதிலேயே தம் தாயாரான பரத நடனமணி விஜி பிரகாஷிடமிருந்து கலையைக் கற்கத் தொடங்கினார்.
“என் இல்லம் ஒரு பரதப்பள்ளியாக இருந்தது. ஆங்கிலத்திற்கு முன்னரே நான் பேசியது பரதத்தில்தான்,” என்றார் திருவாட்டி மைதிலி.
எட்டு வயதில் தம் அரங்கேற்றத்தை மும்பையில் நிகழ்த்தினார் திருவாட்டி மைதிலி.
தொடர்புடைய செய்திகள்
அதன்பிறகு அவர் அமெரிக்காவில் பரதநாட்டியத்தைத் தொடர்ந்து கற்று, சென்னையிலும் மெருகேறக் கற்றார்.
குரு சிவி சந்திரசேகர், மாளவிகா சருக்கை ஆகியோரிடம் பாரம்பரிய நடனத் திறன்களைக் கற்றறிந்த பிறகு, 2018ல் பிரிட்டனிலுள்ள அக்ரம் கான் நிறுவனத்தில் பணியாற்றினார்.
“மாறுபட்ட அனுபவத்தைப் பெற்றேன். நடனத்தில் புதிய பரிமாணங்களை எட்ட அக்ரம் கான் நிறுவனம் கைகொடுத்தது,” என்றார்.
2010ல் சிங்கப்பூரில் நடைபெற்ற கலா உற்சவத்தில் நடனமாட முதன்முதலாக இங்கு வந்தார் திருவாட்டி மைதிலி. அதன் பிறரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆட வந்திருந்தார்.
சிங்கப்பூர் ரசிகர்களின் ஆதரவு அளப்பரிது என்று கூறிய திருவாட்டி மைதிலி, இந்நாடு என்றுமே தம் மனதில் தனி இடம் கொண்டிருப்பதாகக் கூறினார்.
“பாரம்பரியக் கூறுகளைக் கட்டிக்காப்பதில் சிங்கப்பூர்க் கலைஞர்கள் ஆர்வமும் கடப்பாடும் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் புதுமையான வெளிப்பாடுகளையும் அவர்கள் ஆராய்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
முழுக்க முழுக்கப் பெண்கள் படைக்கவுள்ள இந்நிகழ்ச்சியை, திறந்த மனத்துடன் வந்து காணும்படி திருவாட்டி மைதிலி கேட்டுக்கொண்டார்.
“எல்லைகளை விரிவுபடுத்திச் சுய மதிப்பீட்டை ஊக்குவிப்பது கலைப்பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.