தந்தையும் தாயும் ஓர் உருவில்

தந்தையும் தாயும் ஓர் உருவில்

2 mins read
b3c13b34-688e-4e32-ac1e-4905bc116c88
இளைய மகன் சுதாகருடன் டாக்டர் ராமம். - படம்: அக்கிப்பேடி ராமம்

சுதாகர் 22 மாத குழந்தையாக இருந்தபோது அவருக்கு அரியவகை சிறுநீரகக் கோளாறு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து 10 வயது வரைதான் உயிரோடு இருப்பார் என்று கூறினர். தற்போது சுதாகருக்கு 29 வயது.

அவருக்குத் தந்தையாகவும் தாயாகவும் பணிவிடை செய்துவருகிறார் டாக்டர் அக்கிப்பேடி ராமம், 64.

டாக்டர் ராமமின் மனைவி நிணநீர்க்கணுப் புற்றுநோயால் 13 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

சுதாகரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், தற்போது அவர் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குச் சென்று வருகிறார்.

தம்முடைய மனைவி உயிருடன் இருந்த காலகட்டத்தில் மகனின் மருத்துவப் பிரச்சினையை ஏற்றுக் கொண்டு அடுத்தது என்ன என யோசிக்கும் மனவலிமையை டாக்டர் ராமம் பெற்றிருந்தார்.

ஆனால், திடீரெனப் புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் மனைவி இருப்பது தெரிய வந்தபோது டாக்டர் ராமம் உருக்குலைந்து போனார்.

“காலையில் மனைவியை கீமோதெரபி சிகிச்சைக்காக மருத்துவமனையில் விடுவேன். சுதாகரை ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் விட்ட பின்னர் வேலைக்குச் செல்வேன். பிறகு, வேலை முடிந்ததும் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்,” என்று அந்த நாள்களை நினைவுகூர்ந்தார் டாக்டர் ராமம்.

மனைவிக்குச் சிகிச்சை பலனளிக்காமல் போக, அவர் உயிர் பிரிந்தது. அன்றுமுதல் சுதாகருக்காக வாழத் தொடங்கினார் டாக்டர் ராமம். மூத்த மகன் அமெரிக்காவில் உள்ளார்.

“நான் மன உறுதியுடன் இருந்தால்தான் சுதாகரனைக் கவனித்துக்கொள்ள முடியும். அழுவதற்கும் நேரமில்லை. துயரத்திற்கும் இடமில்லை. என் மகன்களுக்கு அம்மாவும், அப்பாவும் நானே,” என்றார் அவர்.

சுதாகருக்குச் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தாக வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் திரு ராமம். ஆனால், இந்தியாவில் சுதாகருக்கு நடந்த மாற்று அறுவை சிகிச்சை, சிக்கல்களை ஏற்படுத்தியது. இதனால், சுதாகரின் உடலில் பொருத்தப்பட்ட புதிய சிறுநீரகம் அகற்றப்பட்டது.

“மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுதாகர் மிகவும் சிரமப்பட்டார். பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஸ்டெராய்டு மாத்திரைகளை அவர் உட்கொள்ள வேண்டியிருந்தது,” என்றார் டாக்டர் ராமம்.

தற்போது ரத்த சுத்திகரிப்புச் சிகிச்சையை மேற்கொள்ள சுதாகரின் உடலில் எந்த இடத்திலும் பொருத்தமான ரத்தக்குழாய் இல்லை.

இதனால், அவருக்கு அவசரமாக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

“நான் சுதாகர் மீது பொழியும் அன்பைவிட அவரது மனவலிமை அதிகமானது. என்ன நடந்தாலும் அவர் தைரியமாக இருப்பார்,” என்று டாக்டர் ராமம் தழுதழுத்த குரலில் சொன்னார்.

எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும் டாக்டர் ராமம், ஒரு முறை தமது இதயத்தில் பிரச்சினையை எதிர்நோக்கினார். அவரின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது.

தான் ஆரோக்கியமாக இருந்தால்தான் சுதாகரின் வாழ்க்கை சுமுகமாக இருக்கும் என்றெண்ணிய டாக்டர் ராமம், ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.

யோகா, நடைப்பயிற்சி, வலைப்பந்து ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

தம் உயிர் உள்ளவரை மகனுக்காகப் போராடப் போவதாகக் கூறிய இந்தத் தந்தை, வாழ்க்கையில் தாம் சந்தித்த இன்னல்களை ஆவணப்படுத்தும் விதமாக ‘மெமோரெபிலியா’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

நான் மன உறுதியுடன் இருந்தால்தான் சுதாகரனைக் கவனித்துக்கொள்ள முடியும். அழுவதற்கு நேரமில்லை. துயரத்திற்கு இடமில்லை. என் மகன்களுக்கு அம்மாவும், அப்பாவும் நானே.
டாக்டர் அக்கிப்பேடி ராமம், 64
குறிப்புச் சொற்கள்