‘அன்புதான் உறவுகளின் ஆணிவேர்’

‘அன்புதான் உறவுகளின் ஆணிவேர்’

3 mins read
b7f182a2-b1b5-4896-9c4c-e8a2ce8fb11e
தாயாரைச் சிறுவயதில் இழந்த பெ.ராமச்சந்திரன், 68. - படம்: கா.விக்ரம்

ஆதரவற்றோர் இல்லத்தில் பிஞ்சு வயதில் சேர்க்கப்பட்டதால், நினைத்த நேரத்தில் தம்முடைய தந்தையைக் காண முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் வளர்ந்தார் பெ.ராமச்சந்திரன், 68.

அதே தந்தையின் கடைசி மூச்சுவரை அவரைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார் அவர்.

தமக்கு ஒன்றரை வயது இருந்தபோது தீ விபத்து ஒன்றில் தாயாரைப் பறிகொடுத்தார். அக்காவுடன் ஆதரவற்றோர் இல்லத்திற்குப் பின்னர் அனுப்பப்பட்டார். சிங்கப்பூரில் பிறந்த திரு ராமச்சந்திரன், ஐந்து பிள்ளைகளில் ஆக இளையவர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் விடப்பட்டாலும் திரு ராமச்சந்திரன் தம் தந்தையால் கைவிடப்படவில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, தந்தை வந்து தம்மைப் பார்க்கும்போது கவலைகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்துபோய்விடும் என்று நினைவுகூர்ந்தார் அவர்.

“ஒற்றைப் பெற்றோராக எங்கள் தந்தை எல்லோரையும் சரியாக வளர்க்க முடியாது என்று முடிவெடுத்த காலனித்துவ அதிகாரிகள், எங்களில் சிலரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டனர்,” என்றார் ராமச்சந்திரன்.

புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ரட்சண்ய சேனை, யோர்க் ஹில் சிறார் இல்லம், பாசிர் பாஞ்சாங்கிலுள்ள போரக் சிறார் இல்லம் ஆகியவற்றில் அவர் வளர்ந்தார்.

“என்னை ஆதரவற்றோர் இல்லத்தில் விடும் கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். ஆனால், எங்களைப் பார்த்துக்கொள்ளும்படி என் அப்பாவிடம் என் அம்மா வாங்கிய சத்தியத்தை அவர் ஒரு பொழுதும் மீறவில்லை,” என்று அவர் கூறினார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் பி.ராமச்சந்திரன் வளர்ந்தபோதும் தம் தந்தைக்குக் கடைசிவரை ஆதரவாக இருந்தார்.
ஆதரவற்றோர் இல்லத்தில் பி.ராமச்சந்திரன் வளர்ந்தபோதும் தம் தந்தைக்குக் கடைசிவரை ஆதரவாக இருந்தார். - படம்: கா.விக்ரம்

அடித்தள அமைப்புகளில் செயலாற்றுதல், மனநல ஆலோசகராகப் பணியாற்றுதல், சமரச நடுவராகச் செயல்படுதல் போன்ற பணிகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டுவரும் திரு ராமச்சந்திரன், சமூக விவகாரங்களின் மீது அக்கறை கொண்டவர்.

“குறிப்பாக, சமரச நடுவராக, கருத்து வேறுபாட்டால் பிரிந்த குடும்பங்களைச் சேர்த்துவைக்கும் பணியைச் செய்து வருவதில் மனநிறைவு அடைகிறேன்,” என்றார் அவர்.

இந்தச் சமூக உணர்வைத் தம் தந்தையிடமிருந்து பெற்றதாக திரு ராமச்சந்திரன் நம்புகிறார்.

மதுரை மாவட்டத்தின் கல்லுப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் அவரின் தந்தை திரு பிள்ளை பெருமாள்.

அதன் பின் மலேசியாவின் பினாங்கு, கெடா மாநிலங்களுக்குச் சென்றார். மலாயா மற்றும் சிங்கப்பூரின் மீது ஜப்பானியர்கள் படையெடுத்த காலகட்டத்திலும் தம் தந்தை பிறருக்கு இயன்ற அளவு உதவியதாக ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.

“ஜப்பானிய ஆட்சியின்கீழ் ரயில் தண்டவாளப் பணிகளில் ஈடுபட்ட தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர். ஜப்பானிய அதிகாரிகள் பிறரைத் துன்புறுத்துவதைக் காணும்போது அவர்களைத் தடுத்து பரிவைப் போதிக்க முயல்வார். ஜப்பானியர்கள் அவரைத் துன்புறுத்தினாலும் தைரியத்துடன் மீண்டும் நயமாகப் பேசுவார்,” என்று அவர் கூறினார்.

வளரும் காலத்தில் மலாய் மொழியிலும் ஹாக்கியன் மொழியிலும் பேசியதால் தமிழில் பேசிப் பழகும் வாய்ப்பு இவருக்கு அதிகம் கிடைக்கவில்லை.

தொலைக்காட்சி, வானொலி செய்திகள் மூலம் தமிழ் கற்ற அவர், தமிழில் நன்கு பேசக் கற்றுக்கொண்டதால் தந்தையின் இறுதிக் காலத்தில் தமது பாசத்தைத் தமிழிலேயே வெளிப்படுத்த முடிந்தது என்றார்.

தம் தந்தையின் ஞாபகமாக திரு ராமச்சந்திரன் வைத்திருக்கும் ஒரு புகைப்படம்.
தம் தந்தையின் ஞாபகமாக திரு ராமச்சந்திரன் வைத்திருக்கும் ஒரு புகைப்படம். - படம்: பெ.ராமச்சந்திரன்

ஒரு நாள் முழுவதும் எதையும் சாப்பிடாத தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் முற்பட்டபோது, தந்தை தமது கையைப் பிடித்து ‘வேண்டாம்’ என்றதாகச் சொன்னார் ராமச்சந்திரன்.

“அப்போது நான் சிந்திய கண்ணீர்த் துளிகள் என் தந்தையின் கன்னங்கள் மீது பட்டன. என்னை மனதார வாழ்த்தி அவர் உயிர் பிரிந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது,” என்றார் அவர்.

அன்புதான் குடும்பத்தின் ஆணிவேர் என்று தீவிரமாக நம்பும் ராமச்சந்திரன், அதே சிந்தனையுடன் தம் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

என்னை ஆதரவற்றோர் இல்லத்தில் விடும் கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். ஆனால், எங்களைப் பார்த்துக்கொள்ளும்படி என் அப்பாவிடம் என் அம்மா வாங்கிய சத்தியத்தை அவர் ஒரு பொழுதும் மீறவில்லை.
பெ.ராமச்சந்திரன், 68
குறிப்புச் சொற்கள்