இணையவாசிகளை ரசிக்க வைக்கும் ‘டிக்டாக்’ தந்தை

இணையவாசிகளை ரசிக்க வைக்கும் ‘டிக்டாக்’ தந்தை

2 mins read
626a77ef-92ca-4f4a-b7e6-e631ddd879ce
மகள் துளசியுடன் சேதுராமன். - படம்: சுந்தர நடராஜ்
Google News Preferred Icon

மகளுக்கு 32 வயது என்றாலும் என்றுமே தமக்குக் குழந்தைதான் என்றார் சேதுராமன், 62.

இந்தத் தந்தை-மகள் இணையரை அடிக்கடி டிக்டாக் தளத்தில் பார்த்திருக்கலாம்.

இவர்கள் ஏராளமான நடனக் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து புகழ் பெற்றுள்ளனர்.

துளசி முதன்முதலில் 2018ஆம் ஆண்டு தந்தையுடன் இணைந்து டிக்டாக் காணொளிகளைத் தயாரிக்கத் தொடங்கினார்.

தொடக்கத்தில் சேதுராமன் தயங்கினார். ஆனால், நாளடைவில் மகளுக்காக அவர் அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

எல்லாம் தம்முடைய மகளுக்காகத்தான் என்று திரு சேதுராமன் கூறியபோது மகள் மேல் அவர் வைத்திருக்கும் அன்பு அவர் முகத்தில் தென்பட்டது.

பள்ளியில் முழுநேரப் பணியில் இருக்கும் சேதுராமன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகள் அவருக்கு அனுப்பும் நடன அசைவுகளைப் பார்த்து ஒத்திகை செய்துகொள்வார்.

களைப்பாக இருந்தாலும் சேதுராமன் சளைக்காமல் மகளுக்காக ஆடுகிறார்.

சில நடனக் காணொளிகளில் இருவரும் ஒரே மாதிரியான உடை அல்லது காலணிகளை அணிந்திருப்பதைக் காண முடியும். அவர்கள் வெளியே சென்றாலும் இதையே கடைப்பிடித்தனர்.

சேதுராமனுக்கு இரு மகள்கள். துளசி அவரின் இளைய மகள். இரண்டு மகள்களும் தம்முடைய இரு கண்கள் என்று கூறினார் சேதுராமன்.

இளம் வயதில் தந்தை கடினமாக உழைத்து குடும்பத்திற்காக செய்த தியாகங்களை நினைவுகூர்ந்த துளசி, தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட பண்புகள் பல என்றார்.

“அப்பா எதிலும் எளிதில் நம்பிக்கையை இழக்கமாட்டார்,” என்று துளசி கூறினார்.

நிதி தொடர்பான சவால்கள் பல இருந்தாலும் மகள்கள் இருவரும் வாழ்வில் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்பதில் சேதுராமன் உறுதியாக இருந்தார்.

சேதுராமனின் தந்தை தமிழர், தாயார் சீனர். சேதுராமனுக்கு சீன மொழி பேசத் தெரியாது. தமிழ் கலாசாரத்தில் பின்னிப் பிணைந்துள்ள சேதுராமன், துளசியோடு இணைந்து பல நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் பங்கேற்று வருகிறார்.

நடனம் ஆடுவதுடன் சேதுராமனும் துளசியும் ஒன்றாகச் சீன உணவு வகைகளையும் சுவைப்பார்கள்.

இருவரும் வெளியே செல்லும்போது அன்புடன் தம் மகளின் கையை சேதுராமன் பிடித்துக்கொள்வார்.

“நான் ஏன் துளசியின் கைகளைப் பிடித்துக்கொண்டு பொது இடத்தில் நடக்கிறேன் என்று என் நண்பர்கள் பலமுறை கேட்டதுண்டு. ஆனால், அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. என் மகள்தானே?” என்றார் சேதுராமன்.

சிறுவயதில் தம் தந்தையுடன் நெருக்கமாக இல்லை என்பதால் தற்போது தம் மகள்கள் தம்முடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதாகக் கூறினார் சேதுராமன்.

நான் ஏன் துளசியின் கைகளைப் பிடித்துக்கொண்டு பொது இடத்தில் நடக்கிறேன் என்று என் நண்பர்கள் பலமுறை கேட்டதுண்டு. ஆனால், அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? என் மகள் தானே?
சேதுராமன், 62
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்