புதுப்பிப்புப் பணிகளை முன்னெடுக்கும் சிலோன் விளையாட்டு மன்றம்

புதுப்பிப்புப் பணிகளை முன்னெடுக்கும் சிலோன் விளையாட்டு மன்றம்

3 mins read
236abe06-5340-4c6a-9bf4-4e7403082b13
சிலோன் விளையாட்டு மன்றத்தின் கிரிக்கெட் திடல். - படம்: சிலோன் விளையாட்டு மன்றம்
Google News Preferred Icon
1951ல் மீண்டும் திறக்கப்பட்ட சிலோன் விளையாட்டு மன்றத்தில் உரையாற்றிய பேராசிரியர் சி. சுப்பிரமணியம்.
1951ல் மீண்டும் திறக்கப்பட்ட சிலோன் விளையாட்டு மன்றத்தில் உரையாற்றிய பேராசிரியர் சி. சுப்பிரமணியம். - படம்: சிலோன் விளையாட்டு மன்றம்

பாலஸ்டியர் சாலையில் அமைந்துள்ள சிலோன் விளையாட்டு மன்றம் அதன் வளாகத்தைப் புதுப்பிக்க ஐந்து மில்லியன் வெள்ளி நிதியைத் திரட்டும் பெருந்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மன்றத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக $810,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டுத் திடல் மேம்பாட்டிற்காக 510,000 வெள்ளியும், சமூகக் கூடத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக 300,000 வெள்ளியும் செலவிடப்படவுள்ளன.

விளையாட்டுத் திடலில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்

திடலின் பயன்பாட்டை அதிகரிக்கவும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுவரை பகல் நேரத்தில் மட்டுமே போட்டிகளை நடத்த முடிந்த நிலையை மாற்றி, இரவு நேரங்களிலும் போட்டிகளை நடத்தும் வகையில் மின்விளக்குகள் நிறுவப்பட்டு வருகின்றன.

அதோடு, கிரிக்கெட் பந்துகள் சாலையை நோக்கிப் பறந்து வாகனங்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கத் திடலைச் சுற்றிப் பாதுகாப்பு வலைகள் அமைக்கப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, திடலைப் பராமரிக்க மாதந்தோறும் மன்றம் ஏறத்தாழ $30,000 செலவிடவிருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு உருவெடுக்கும் கட்டடம்

உறுப்பினர்கள் ஒன்றுகூடும் இடங்கள், உணவக வசதிகள், சமூகக் கூடங்களை மேம்படுத்துவதில் கட்டடப் புதுப்பிப்புத் திட்டம் கவனம் செலுத்துகிறது.

120 பேர் அமரக்கூடிய பாரம்பரிய இலங்கை உணவகம் முதல் தளத்தில் அமைக்கப்படவுள்ளது. இதில் பனங்கிழங்கு மாவில் செய்யப்படும் ‘கூழ்’ போன்ற பாரம்பரிய யாழ்ப்பாண உணவுகள் பரிமாறப்படும்.

மேல்தளத்தில் இருக்கும் அரங்கம் புதுப்பிக்கப்படுவதோடு, கருத்தரங்குகளை நடத்த ஏதுவாகத் தடுப்புச் சுவர்கள் கொண்ட அரங்குகள், மேம்படுத்தப்பட்ட ஒப்பனை அறைகள், உறுப்பினர்களுக்கான தனி ஓய்வறைகள் ஆகியவை உருவாக்கப்படவுள்ளன.

பாரம்பரியக் கட்டட வடிவத்தைப் பாதுகாத்தல்

1915ல் ‘லங்கா யூனியன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, 1928ல் சிலோன் விளையாட்டு மன்றமாக முறைப்படி பதிவு செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் படையினரின் வெடிமருந்துச் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட மன்றத்தின் கட்டடம், பின்னர் குண்டுவீச்சில் சேதமடைந்து, மீண்டும் 1950களில் கட்டப்பட்டது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தற்போது புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டடத்தின் அசல் வடிவத்தை மாற்றாமல், அதன் பழைமையான தோற்றத்தைக் காக்க நகர மறுசீரமைப்பு ஆணையத்தோடு இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது சிலோன் விளையாட்டு மன்றம்.

விளையாட்டுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பன்முக வசதிகள்

முதன்மை கிரிக்கெட் திடலைத் தவிர, இரண்டு ‘புட்சால்’ திடல்கள், மின்விளக்கு வசதியுடன் கூடிய மூன்று கிரிக்கெட் பயிற்சி வலைகள், ‘பிக்கல்பால்’ விளையாட்டுக் கூடங்கள் போன்ற வசதிகளும் மன்றத்தில் இருக்கின்றன.

கிரிக்கெட் மட்டுமன்றி, கபடி, காற்பந்து, தற்காப்புக் கலைகள் போன்ற பல்வேறு விளையாட்டுகளும் தொடர்ந்து மன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

சிலோன் விளையாட்டு மன்றம் நடத்தும் பாலஸ்டியர் கிரிக்கெட் கழகம் ஓராண்டிற்குள் 60 மாணவர்களிலிருந்து 140க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது.

அதோடு, ஆண்டுமுழுதும் நடைபெறும் ‘பாலஸ்டியர் பிரிமியர் லீக்’ தொடரில், 60 அணிகளைச் சேர்ந்த 1,400க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளிநாட்டு விளையாட்டாளர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.

நிகழ்ச்சிகளுக்கு மட்டுமன்றி விளையாட்டு வசதிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் திறக்கப்படுகின்றன. இலங்கைச் சமூகத்தால் இச்சங்கம் தொடங்கப்பட்டிருந்தாலும், சிங்கப்பூரின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் செயல்பட்டு வருகிறது.

“எதிர்காலத் தலைமுறைக்காக ஒரு வலுவான விளையாட்டுப் பாரம்பரியத்தை விட்டுச் செல்வதே எங்கள் முதன்மை இலக்கு,” என்றார் சிலோன் விளையாட்டு மன்றத்தின் துணைத் தலைவர் இந்திரா ஈஸ்வரன்.

முழுமையாகத் தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படும் இச்சங்கம், கால மாற்றத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு அடுத்த நூறாண்டை நோக்கித் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.

அதற்குக் களமமைக்கும் வகையிலேயே இந்தப் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இத்திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களின் ஆதரவு அவசியம் என்றும் சிலோன் விளையாட்டு மன்றத்தின் நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுமறுசீரமைப்புபுதுப்பிப்புப் பணி