கடைத்தொகுதிகளுக்குச் சென்றால் திரும்பிய பக்கமெல்லாம் ‘சாஜீ’ தேநீர்க் கடை சுவரொட்டிகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன.
அக்கடைகளுக்கு வெளியே காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நீள்வரிசையே அதற்குச் சான்று.
இளைய தலைமுறையினரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நவீன சுவைகளுடன் தங்கள் தேநீர்ப் பட்டியலைப் புதுப்பிப்பது மட்டுமின்றி, உலகின் பிற பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான தேநீர்ப் பிரியர்களுக்கு அதனை அருந்தும் அனுபவத்தையே மறுவரையறை செய்யும் புதிய வழிகளை அறிமுகப்படுத்தி, சாஜீ பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் யூனான் மாநிலத்தில் தொடங்கப்பட்ட சாஜீ, இன்று உலகம் முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் சீனாவின் முன்னணி தேநீர் வணிகச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
மலேசியாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சாஜீ கடைகள் உள்ளன. சிங்கப்பூரில் சாஜீ தேநீர்க் கடை அண்மையில் பிரபலமாகத் தொடங்கியதிலிருந்து இப்போது தீவு முழுவதும் மொத்தம் 29 கடைகள்வரை உள்ளன.
கடும் போட்டி நிறைந்த உணவு, பானத் துறையில், வேகமாக மாறிவரும் பயனீட்டாளரின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்க, சாஜீயின் தலைமை நிர்வாக அதிகாரி தொடக்கம் முதலே உயர்தர மூலப்பொருள்கள், புதுமையான தேநீர் தயாரிக்கும் நுட்பங்கள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மைய ஆண்டுகளில் ‘பபிள் டீ’ எனப்படும் குமிழித் தேநீர் உலகையே கலக்கிக் கொண்டிருந்தாலும் சாஜீயின் பானங்களில் ஜவ்வரிசி உருண்டைகளோ அல்லது பழச்சாறுகளோ அன்றி தேநீரே முதன்மையான பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
உண்மையான, செழுமையான சுவைக்காக தேயிலைத் தூளுக்குப் பதிலாக புதிதாகப் பறிக்கப்பட்ட தேயிலைகளைக் கொண்டு காய்ச்சப்பட்டு மென்மையான பாலுடன் கலந்து சாஜீயின் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதன் அடையாளமாகத் திகழும் ‘ஜாஸ்மின் கிரீன் மில்க் டீ’தான் அதிகம் விற்பனையாகும் சுவையாகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 438 குவளைத் தேநீர் விற்பனையாகிறது.
நல்ல தேநீர் பருகும் உணர்வு
சாஜீ தேநீர் சிங்கப்பூரில் அறிமுகம் காணும் முன்னர் அதைப் பற்றி அறிந்திருந்த கேசவன் மோகன், 25, சிங்கப்பூருக்கு வந்த பிறகு அதைச் சுவைத்து பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இனிப்பு அதிகம் விரும்பாத கேசவனுக்கு சாஜீ தேநீர்க் கடைகளில் விற்கப்படும் தெரிவுகள் பிடித்தமானவையாக அமைந்தன.
“இதர தேநீர் வகைகளை ஒப்பிடுகையில், சாஜீ தேநீர் பருகும்போது நலமான ஏதோ ஒன்றைப் பருகுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது,” என்றார் கேசவன்.
வாரம் மும்முறை சாஜீ தேநீர் பருகும் அவர், அதன் தேயிலை மணத்தைப் பெரிதும் விரும்புகிறார்.
‘வழக்கமான தேநீரில்தான் சுவை’
‘மாச்சா’ போன்ற புகழ்பெற்ற தேநீர் வகைகளை விரும்பிப் பருகும் 37 வயது ஷிவானி முருகனுக்கு சாஜீ தேநீர் மீது மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு மோகம் என்பது தெரியவில்லை.
“தேநீர் என்றாலே அது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும். மேலும், பால் சேர்க்கப்பட வேண்டும். பாலும் இல்லாமல், சர்க்கரை அளவும் குறைவாக இருக்கும் சாஜீ தேநீர் எவ்வாறு இவ்வளவு பிரபலம் அடைந்தது?” என்று கேட்கிறார் ஷிவானி.
இயற்கையான மூலப்பொருள்கள் கலக்கப்படுவதால் அது தேநீருக்கான அடையாளம் இல்லை என்பது ஷிவானியின் கருத்து.

