இந்திய மரபுடைமை நிலையத்தில், பிப்ரவரி 23ஆம் தேதி, தாளத்திற்கேற்ப ஒன்றோடு ஒன்று உரசிய குச்சிகளின் ஒலி நிறைந்திருந்தது.
ஆனந்தா மரபுக்கலைகள் கூடத்துடன் (ஆட்டம்) இணைந்து நிலையம் வழங்கும் ‘நம் மரபு’ தொடரின் ஓர் அங்கமாக அங்கு நடைபெற்ற பயிலரங்கு, தமிழர்களின் தொன்மையான நாட்டுப்புற நடனமான சக்கைக் குச்சி ஆட்டத்துக்கு உயிரூட்டியது.
தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் மூலம் இந்திய மரபுக் கலைகளைச் சிங்கப்பூரர்களிடம் முறையாகக் கொண்டுசேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ள இத்தொடர், இரண்டாம் முறையாக இந்த ஆண்டு நடைபெறுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் முதல் பயிலரங்கில் இருபது ஆண்டுகள் அனுபவம் கொண்ட தமிழகத்தின் தாராநல்லூரைச் சேர்ந்த மாஸ்டர் பாஸ்கர் கொளஞ்சிநாதன், 34, சக்கைக் குச்சி ஆட்டத்தைப் பயிற்றுவித்தார்.
நான்கு தேக்கு மரத்துண்டுகளை விரல்களுக்கு இடையே வைத்து, அடித்து ஒலி எழுப்பும்படி ஆடும் ஆட்டம் இது. ‘சக்கை’ எனப்படும் மரத்துண்டுகளை அடித்து ஆடுவதால் இது ‘சக்கைக் குச்சி ஆட்டம்’ என்ற பெயரைப் பெற்றது.
குத்துவரிசை, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த ஆட்டத்தைத் தற்போது பாரம்பரியமாக ஆடும் கலைஞர்கள் இந்தியாவில் ஏறத்தாழ 50 பேர் மட்டுமே உள்ளனர்.
“ஒரு காலத்தில் இந்தக் கலை எங்களது சமூகத்தின் ஆக முக்கியமான அங்கங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது,” என்று பாஸ்கர் நினைவுகூர்ந்தார்.
“இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தாராநல்லூர் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவராவது இந்த நடனத்தைப் பயின்று ஆடுவார்கள். ஆனால் இன்றோ, சக்கைக் குச்சி ஆட்டம் மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது.
“குழு நடனமான இதற்குத் துணையாக தவில், பம்பை போன்ற இசைக்கருவிகள் பொதுவாக இசைக்கப்படும். இந்த நடனத்தில் குறைந்தபட்சம் ஆறு பேரிலிருந்து எத்தனை பேர் வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளலாம்,” என்றார் அவர்.
இது எளிய மக்களின் நடனம் என்றார் பாஸ்கர்.
குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழைக்காய் மண்டிகளில் வேலை செய்த கூலி ஊழியர்கள், தங்கள் ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்குக்காக இந்த நடனத்தை உருவாக்கினர். காலப்போக்கில் மேடையில் ஆடப்படும் ஒரு நடனக் கலையாக மாறி, இது வளர்ந்து வந்துள்ளதாக அவர் சொன்னார்.
பயிலரங்கில் சக்கை ஆட்டம், நெடுங்குச்சி ஆட்டம், பெரிய குச்சி ஆட்டம் ஆகிய மூன்று முக்கிய நடன வகைகளைப் பங்கேற்பாளர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். குழுவாகச் செயல்படுவதை வலியுறுத்தும் வண்ணம், பாரம்பரியக் குச்சிகளை எப்படிக் கையில் பிடிப்பது என்பதிலிருந்து ஒரு பெரிய வட்டத்தில் குழுவாக நின்று எப்படி நகர்வது என்பது வரை அனைத்தையும் மாஸ்டர் பாஸ்கர் விவரித்தார்.
“சக்கைக் குச்சி ஆட்டம் என்பது நடன வகை மட்டுமன்று. இது ஒழுக்கம், ஒருங்கிணைப்பு, கவனக் குவிப்பு முதலியவற்றை ஊக்குவிக்கின்றது.
“இளையர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் மரபையும் மறவாமல், ஏதாவது ஒரு வகை நாட்டுப்புற கலையில் ஈடுபடுவது அவசியம்,” என்று வலியுறுத்தினார் அவர்.
சிங்கப்பூரில் வாழும் உறவினர்களைச் சந்திக்க வந்திருந்த ஜெர்மனியைச் சேர்ந்த 18 வயது மலீன் செல் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றவர்களில் ஒருவராவார்.
“நான் இதற்கு முன்பு சக்கைக் குச்சி ஆட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லை. இந்த நடனத்தை முறையாக ஆட அதிக ஆற்றலும் கவனமும் தேவைப்படுகிறது,” என்றார் அவர்.
மலீனை இந்தப் பயிலரங்குக்கு அறிமுகப்படுத்திய அவரது உறவினரான சிங்கப்பூர் மாணவி எல்லா பும்கே ஸ்கீ, 11, இந்திய மரபுடைமை நிலையம் நடத்தும் பயிலரங்குகளில் குடும்பத்துடன் அடிக்கடி கலந்துகொள்வதாகச் சொன்னார்.
“ஒரு புதிய கலையைக் கற்றுகொண்டது மிகவும் சுவையான அனுபவமாக இருந்தது. குறிப்பாக, குழுவாக அனைவருடனும் இணைந்து ஆடிய அம்சம் மிகவும் பிடித்திருந்தது.
“சக்கைக் குச்சி ஆட்டம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், இதற்கு அதிக துல்லியமும் கவனமும் தேவை,” என்றார் மற்றொரு பங்கேற்பாளரான அரசு ஊழியர் ரோஹினி வர்ஷா, 26.
‘நம் மரபு’ தொடரின் அடுத்த அங்கமாக, மார்ச் 26ஆம் தேதி முதல் மார்ச் 30 வரை தேவாராட்டம் தொடர்பான பயிலரங்குகளும் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 27 வரை துடும்பாட்டம் தொடர்பான பயிலரங்குகளும் நடைபெறவுள்ளன.