சிங்கப்பூரின் பண்பாட்டு அடையாளமாகவும் வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்கிய மரபுடைமைக் கடைகள் நவீனமயமாக்கல், நகர்ப்புற வளர்ச்சியின் வேகத்தில் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.
அக்கடைகள் வெறும் வணிக நிலையங்களாக மட்டுமன்றி, பல தலைமுறைகளின் நினைவுகளையும் தனித்துவமான உள்ளூர்ப் பண்பாட்டையும் சுமந்து வந்துள்ளன.
அவ்வாறு 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்த ‘சாம்பியன் ஸ்போர்ட்ஸ்’ கடையும் கூடிய விரைவில் தனது கதவுகளை மூடவுள்ளது.
சாம்பியன் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் ஒரு கடை. கடையின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் சச்தேவா, 71, தம் தந்தையின் ஊக்கத்தில் தொழிலைக் கற்றுத் தேறத் தொடங்கினார்.
ஆனால், இப்போது 53 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலை முன்னெடுத்துச் செல்ல யாருமில்லை என்ற ஒரே காரணத்திற்காக இவர் தம் கடையை நிரந்தரமாக மூட முடிவுசெய்துள்ளார்.
1948ல் தம் தந்தையும் அவரின் சகோதரரும் தொழிலைத் தொடங்கிய பிறகு, தமது 20வது வயதில் திரு அனில்குமார் அத்தொழிலில் கால்பதித்தார்.
“அதற்கு முன்னர் நான் ஒரு மின்சார நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். தந்தை முதலில் ஆறு மாதங்களுக்குக் கடைக்கு வரச் சொன்னார். ஆனால், ஆறு மாதங்கள் 53 ஆண்டுகளாயின,” என புன்முறுவலுடன் கூறினார் திரு அனில்குமார்.
தொடக்கத்தில் கிரிக்கெட் மட்டைகள் விற்கத் தொடங்கி, படிப்படியாக விளையாட்டு பொருள்களின் வகைகளும் எண்ணிக்கையும் விரியத் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
1978 வரை பிராஸ் பாசா சாலையில் இயங்கி வந்த சாம்பியன் ஸ்போர்ட்ஸ் பின்னர் பெனின்சுலா கடைத்தொகுதிக்கு இடமாறியது.
தந்தையின் தொழில் உத்திகள் வணிகத்திற்கு ஏற்றம் தந்தபோதிலும், தமது 20 வயதில் தொழிலில் சேர்ந்ததால் இளரத்தத்தின் சிந்தனைகளும் தொழிலுக்கு மெருகூட்டியதாக திரு அனில்குமார் சொன்னார்.
ரக்பி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளுக்குத் தேவையான, மிகவும் குறிப்பிட்ட விருப்பங்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் பொருள்கள் முதல் அண்மைக் காலத்தில் பிரபலமாகத் தொடங்கிய ஓட்டப் பயிற்சிக் காலணிகள் வரை அனைத்தும் இவரது கடையில் விற்கப்படுகின்றன.
புதிய விளையாட்டுகள் சார்ந்த பொருள்களும் விற்கப்படுவதாகப் பகிர்ந்துகொண்ட திரு அனில்குமார், ‘அடிடாஸ்’ போன்ற பெரிய நிறுவனங்களுடன் கைகோத்துள்ளதாகவும் கூறினார்.
முன்னர் அடிக்கடி ஜெர்மனி சென்று விளையாட்டுப் பொருள்களை வாங்கியுள்ளதைப் பற்றியும் பேசிய திரு அனில்குமார், தொழில் நிலைத்து நிற்க வாடிக்கையாளர்களுடன் பகிரப்படும் உறவு மிக முக்கியம் என்றார்.
பள்ளிகளுடனும் நல்ல உறவு வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட இவர், பல வாடிக்கையாளர்கள் கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் நல்ல பிணைப்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரைநூற்றாண்டுக்குமேல் இயங்கி வந்துள்ள இக்கடை, 1990களில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடி, கொவிட்-19 தொற்றுப் பரவல் போன்ற பெரிய சவால்களையும் தாண்டி வந்துள்ளது.
விளையாட்டுகள் தம்முடன் பின்னிப்பிணைந்த ஒன்று எனக் கூறிய திரு அனில்குமார், மலையேற்றம் போன்ற நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
தொழிலை எடுத்து நடத்த முதலீட்டாளர்களை வரவேற்கும் இவர், இத்தகைய மரபு வாய்ந்த கடைகள் நலிவடைந்து போகாமல் இருக்க இளையர்கள் முன்வர வேண்டுமென விரும்புகிறார்.

