ஸ்ரீ கைலாச ஆசிரமத்தின் அறத்தொண்டு

ஸ்ரீ கைலாச ஆசிரமத்தின் அறத்தொண்டு

2 mins read
84cd8cd9-c30d-42be-86a3-20cb1b1bf05e
இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் அமைந்திருக்கும் ஶ்ரீ கைலாச ஆசிரம மஹாசமஸ்தானம் 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. - படம்: ஶ்ரீ கைலாச ஆசிரம மஹாசமஸ்தானம்

இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கைலாச ஆசிரம மஹாசமஸ்தானம், ஆன்மிகச் சிந்தனையை மக்களிடம் விதைப்பதற்கும் அப்பால், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது.

பரம்பூஜ்ய ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திருச்சி மஹாசுவாமிகளால் 1960ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்தின் பாதசேவக பீடாதிபதியாக பரம்பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி திகழ்கிறார்.

மகிழ்ச்சியான, மனநிறைவுள்ள வாழ்க்கையை ஒவ்வொரு மனிதரும் வாழ வேண்டும் என்பதே ஆசிரமத்தின் உன்னத நோக்கமாகும்.

ஆகவே, வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களுடைய தேவைகளுக்கேற்ப, கல்வி, சுகாதாரம், நலன் பேணுதல் போன்றவற்றில் அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

உடல்நலக் கோளாறுகளைத் தீர்க்க பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்றினாலும், நவீன மருத்துவப் பராமரிப்பிலும் ஆசிரமம் கவனம் செலுத்தி வருகிறது.

1992ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மருத்துவமனை அறக்கட்டளையின் தனிப் பிரிவாக ‘ஸ்ரீ சிவரத்னபுரி ஆரோக்கியக் கோயில்’ இயங்கிவருகிறது.

உலகின் முதல் ‘பிரமிட்’ உருவிலான பலதுறை மருந்தகமாகவும் நல்வாழ்வு நிலையமாகவும் அது விளங்குகிறது.

யோகா, தியானம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏற்றவகையில் இந்த மருத்துவமனை உலோகங்கள் இன்றி செதுக்கப்பட்டுள்ளது.

“மருந்திலிருந்து விடுபடுவோம்” என்ற குறிக்கோளுடன் இயங்கும் இந்த மருத்துவமனை ஆயுர்வேத, இயற்கை மருத்துவம், யோகா போன்ற முறைகளில் நோய்களைத் தடுக்க முனைந்துள்ளது.

அத்துடன், இந்த மருத்துவமனையின் இலவச மருந்தகத்தின் மூலமாக வசதி தேவைப்படுவோருக்கும் ஆசிரமம் உதவிவருகிறது.

ஸ்ரீ ராஜேஸ்வரி சம்ஸ்கிருத மஹா பாத்ஷலா எனும் பள்ளியை ஆசிரமம் நிறுவி வருகிறது.

இளம் வயதிலிருந்தே, மாணவர்கள் வேத மந்திரங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இந்தப் பள்ளி நல்குகிறது.

ஆசிரமம் நிறுவும் ஶ்ரீ ராஜேஸ்வரி சமஸ்கிருத மஹா பாத்ஷலாவில் பயிலும் மாணவர்கள்.
ஆசிரமம் நிறுவும் ஶ்ரீ ராஜேஸ்வரி சமஸ்கிருத மஹா பாத்ஷலாவில் பயிலும் மாணவர்கள். - படம்: ஶ்ரீ கைலாச ஆசிரம மஹாசமஸ்தானம்

அதன் மூலமாக, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக் கோயில்களில் சேவையாற்ற அவர்கள் ஆயத்தமாவாரகள்.

ஏற்றத்தாழ்வு பாராமல், எல்லாப் பின்னணிகளையும் சேர்ந்த மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்க இந்தப் பள்ளி வகைசெய்கிறது.

கர்நாடகாவையும் தென்னிந்தியாவையும் சேர்ந்த கிட்டத்தட்ட 7,000 மாணவர்களின் கல்விக்கு இந்த ஆசிரமம் தற்போது ஆதரவளித்து வருகிறது.

அத்துடன், திருமணம் செய்வதில் நிதிச் சவால்களை எதிர்கொள்வோர்க்கு ஆசிரமம் திருமண மண்டபத்தைக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

நிதி நெருக்கடியால் சிரமப்படும் அமைப்புகளுக்கும் மேலாண்மை தொடர்பான இன்னல்களில் உதவி தேவைப்படும் அமைப்புகளுக்கும் இந்த ஆசிரமம் கைகொடுத்து வருகிறது.

அந்த அமைப்புகளுக்குப் புதுப்பிப்புப் பணிகளில் உதவி தேவைப்பட்டால், அதற்கும் இவ்வாசிரமம் பக்கபலமாக இருந்துள்ளது.

இயற்கையைப் பாதுகாப்பதிலும் ஆசிரமம் அதிகக் கடப்பாடு கொண்டுள்ளது.

ஆகவே, ஆசிரமத்திலும் அதன் கிளைகளிலும் உள்ள உயிரினங்கள் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

பரம்பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி சிங்கப்பூருக்கு வருகை அளித்துள்ளார்.

இங்குள்ள ஆறு இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளையும் அவர் நடத்திவருகிறார்.

சனிக்கிழமை (ஜூன் 20) ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அவர் அருளுரை ஆற்றவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்