நீரிழிவு நோயால் இரு கால்களையும் இழந்த 66 வயது வள்ளியம்மை சத்தியப்பன், சென்ற மாதம் தம் வலக்கையின் நடுவிரலையும் இழந்தார்.
அதனால் சமைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் அவர், உடனடியாக சாப்பிடக்கூடிய உணவுகளையே பெரும்பாலும் உண்கிறார்.
இந்நிலையில், லெங் கீ சமூக மன்றத்தில் மார்ச் 24ஆம் தேதி வியாழக்கிழமை வழங்கப்பட்ட ரொட்டிகள், உணவுப்பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பை தமக்குப் பெரிதும் உதவும் என்றார் அவர். இரவு உணவையும் அவர் பெற்று மகிழ்ந்தார்.
அன்றைய தினம் செட்டியார்கள் கோயில் குழுமம் லெங் கீ சமூக மன்றத்துடன் நான்காம் ஆண்டாக இணைந்து சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
செட்டியார்கள் கோயில் குழுமத்தின் ஆதரவில் உணவுப்பொருள்கள் அடங்கிய பை, $50 ரொக்கம், இஃப்தார் விருந்து ஆகியவை வழங்கப்பட்டன.
அதன்மூலம், குவீன்ஸ்டவுனில் வசிக்கும் ஏறக்குறைய 65 குறைந்த வருமானக் குடும்பங்கள் பயனடைந்தன. பெரும்பாலும் மலாய் முஸ்லிம் குடும்பங்களின் மத்தியில் சில இந்தியர்களும் கலந்துகொண்டனர்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.
“நாம் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாள்களுக்கு வந்துவிட்டோம். நோன்பின் அதிமுக்கியக் கட்டம் இது. நம் முஸ்லிம் நண்பர்கள் பலரும் அதற்காக அரும்பாடுபட்டுவருகின்றனர்,” எனப் பாராட்டினார் திரு சுவா.
தொடர்புடைய செய்திகள்
2018ல் செட்டியார்கள் கோயில் குழுமம் இந்த உதவித்திட்டத்தை முதன்முறையாக (வேறு இடத்தில்) ஏற்பாடு செய்தது. அதைத் தொடர்ந்து, இது ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. கொவிட்-19 காலத்தில் வீடு வீடாகச் சென்று அன்பளிப்புப் பைகளையும் பணப்பைகளையும் அது விநியோகித்தது.
“ரமலான் மாதத்தின் புனிதத்தை மட்டுமல்லாது, நம் ஒற்றுமையையும் இந்நிகழ்ச்சி குறிக்கிறது,” என்றார் செட்டியார்கள் கோயில் குழுமத் தலைவர் சுப்பிரமணியம் காசி, 68.
மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பைகள் குறுகியகால உதவியாகவே இருந்தாலும், அவை நெடுங்கால உதவிகளைவிடப் பயனளிப்பதாகக் கருதுகிறார் பயனாளிகளில் ஒருவரான ஃபரீதா ரஷீத். அவர் ‘#ஐ விஷ் யு இனஃப்’ எனும் சமூக இயக்கத்தை வழிநடத்தி, வசதிகுறைந்தோருக்கு உதவிவருகிறார்.
“நெடுங்கால உதவியை வழங்கினால் மக்கள் அதையே நம்பியிருக்கக்கூடும். இத்தகைய ஒன்றுகூடல்களால் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். தொண்டூழியர்கள் மக்களுடன் உரையாடி அதிக உதவி தேவைப்படுவோரைக் கண்டறிந்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்பாக அமைகிறது,” என்றார் வட்டாரத் தொண்டூழியராகவும் செயலாற்றும் ஃபரீதா.