வசதி குறைந்த மாணவர்கள், உன்னதத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என மொத்தம் 300 பேருக்கு கல்வி உதவிநிதி வழங்கியுள்ளது செட்டியார் கோவில் குழுமம்.
தொடக்கநிலை முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரை கல்வி உதவிநிதி வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வளாக மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திருவாட்டி ஜோன் பெரேரா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மாறிவரும் புவிசார் அரசியல் நிலவரம், அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட சூழலுக்கு மத்தியில் தனித்துவத்தை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் பேசினார். கல்வியுடன் பிற வாழ்வியல் ஒழுக்கங்களையும் கற்றுக்கொள்வது அவசியம் என்றார் அவர்.
“பெற்றோர் சிலவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லும்போது எரிச்சல் ஏற்படலாம். ஆனால், அவை பெற்றோரின் அன்புக்கும் அக்கறைக்கும் சான்று. அவர்கள் சொல்வதைக் கேட்பது எதிர்காலத்தில் நன்மை செய்யும்,” என்றும் மாணவர்களுக்கு திருவாட்டி பெரேரா அறிவுறுத்தினார்.
கடந்த 2013, 2014ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் இணைந்து கல்வி உதவிநிதி வழங்கி வந்த செட்டியார் கோவில் குழுமம், கடந்த பத்தாண்டுகளாக தனிப்பட்ட முறையில் வழங்கி வருவதாக சங்கம் தெரிவித்தது.
வசதி குறைந்த தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கல்வியில் உன்னதத் தேர்ச்சி பெற்ற தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த உதவிநிதி வழங்கப்படுகிறது. மொத்தம் $100,000 செலவிடப்பட்டதாகவும் குழுமம் கூறியது.
“கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பள்ளி, கல்லூரிகளைத் தொடர்புகொண்டு, எட்டுப் பேர் கொண்ட குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து 300 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது,” என்றார் செட்டியார் கோவில் குழுமத்தின் துணைத் தலைவர் சௌந்தரராஜன்.
தொடர்புடைய செய்திகள்
“செட்டியார் கோவில் குழுமம் பக்தியுடன், சமூகப் பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கல்வி விருதும் வழங்கப்படுகிறது. பல இன சமூகத்தில் தேவையுள்ள அனைத்துத் தரப்பினரையும் கண்டறிந்து அவர்களுக்கேற்ற உதவிகளை வழங்குவது அவசியம். இதில் இன, சமய, மொழி பேதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவிநிதி வழங்கியதில் மகிழ்ச்சி,” என்றும் அவர் சொன்னார்.
“கல்வி உதவிநிதி பெற்றது மகிழ்ச்சி. நன்கு படித்து எதிர்காலத்தில் காற்பந்தாட்ட வீரராக வருவேன்,” என்றார் நார்த் வியூ தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயிலும் சக்திவேலன் முருகைய்யன்.
விழாவில் பங்கேற்றதும் கல்வி உதவிநிதி பெற்றதும் மகிழ்ச்சி என்றனர் வெஸ்ட் குரோவ் தொடக்கப்பள்ளி மாணவர் சஞ்சீவ் தருண்ராஜ், யூஹுவா உயர்நிலைப்பள்ளி மாணவி யுவிகா தர்மராஜ்.
நல்ல மதிப்பெண்கள் பெற்று வருவதால் தொடர்ந்து ஈராண்டுகளாக உதவிநிதி பெற்று வருகிறார் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மாணவி சஸ்மித்தா, 23.
வணிகத் துறையில் இறுதியாண்டு படிக்கும் இவர், “இந்தக் கல்வி உதவிநிதி எனக்கு ஊக்கமளிக்கிறது. மேலும் நன்கு படிக்க வேண்டும் எனும் எண்ணத்தைத் தூண்டுகிறது,” என்றார்.
“என் மகள் கடின உழைப்பாளி. அவரது உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் இந்த உதவிநிதி. இது பெருமையான தருணம்,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் மாணவியின் தாயார் ஹேமலதா, 55

