தமது நான்கறை வீட்டில் இந்துவான திருவாட்டி டான் சியாக் ஹியாங், பழங்கால இந்து கோயில் சிலைகளை வைத்திருப்பது பலரையும் வியக்கவைத்துள்ளது.
தினந்தோறும் ஏறத்தாழ மூன்றடி உயரம் கொண்ட காளியம்மன் சிலையையும் இருபுறமும் உள்ள விநாயகர், முருகர் சிலைகளையும் வைத்து வழிபடும் 71 வயது திருவாட்டி டான், இச்சிலைகளை 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கிறார்.
வந்த கதை
ஶ்ரீ மாரியம்மன் கோயிலின் 1971 கும்பாபிஷேகத்திற்கு முன்னர் இச்சிலைகள் மாற்றப்படவிருந்ததாகவும், அவற்றைத் தம்முடைய கணவர் திரு இங் கிம் சுவீ கோரியதாகவும் கூறினார் திருவாட்டி டான். அச்சமயத்தில் லோரோங் ஆ சூ கம்போங்கில் அத்தாப்புக் கூரை வீட்டில் வசித்து வந்த இத்தம்பதியிடம், ஏறக்குறைய 15 சிலைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்திய ஓவியக் கலைஞரின் உதவியோடு வரவேற்பறையில் காணப்படும் சிலைகளுக்குப் புது வண்ண சாயம் பூச வைத்தனர். இருப்பினும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் பதிவுகளிலோ, இச்சிலைகள் ஶ்ரீ மாரியம்மன் கோயிலிடமிருந்து பெறப்பட்டவை எனக் காட்டும் சான்றுகள் ஏதும் இல்லை.
கணவர் வழியில்...
பதின்ம வயதிலிருந்தே இந்து சமயத்தின்மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மறைந்த திரு இங், 1990கள் வரை ஆண்டுதோறும் தைப்பூசத்திலும் தீமிதியிலும் கலந்துகொண்டவர். 18 வயதில் அவரைக் கைபிடித்த திருவாட்டி டான், அவரின் வழியிலேயே இந்து சமயத்தைத் தழுவினார்.
சமயம் குறித்து திறந்த மனப்பான்மை கொண்டிருந்த பெற்றோரின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது. இந்து முறைபடியே அவர்களின் திருமணம் ஶ்ரீ மாரியம்மன் கோயில் சன்னதியில் இடம்பெற்றதாக திருவாட்டி டான் நினைவுகூர்ந்தார்.
கைவிடாத வழிபாடு
வீவக வீட்டிற்கு 1980களில் மாறிய சமயத்தில் கிட்டத்தட்ட 10 பேரின் உதவியோடு லோரோங் ஆ சூவிலிருந்த தெய்வச் சிலைகள் இடம்பெயர்ந்தன. திரு இங் 2002ல் இறப்பதற்கு முன்னர், அவரின் இந்து நண்பர்கள் வழக்கமாக வீடு தேடி வந்து காளியம்மனை வழிப்பட்டு செல்வதுண்டு.
இப்போதும், வரவேற்பறையில் உள்ள சிலைகளுக்கு ஏறக்குறைய இரு மாதங்களுக்கு ஒருமுறை புத்தாடை, ஆபரணங்கள் உடுத்த 400 வெள்ளி வரை செலவிடுகிறார், துப்புரவுப் பணியில் உள்ள திருவாட்டி டான். கணவரின் இந்து நண்பர் ஒருவர் இந்நாள் வரை சிலைகளைப் பராமரிக்க திருவாட்டி டானிற்கு உதவி புரிகிறார்.
தொடர்புடைய செய்திகள்
சீன நாள்காட்டியின்படி மாதந்தோறும் 1ஆம், 15ஆம் தேதிகளில் இடம்பெறும் அமாவாசை, பௌர்ணமி தினங்களன்று திரு டான் சைவ உணவு உட்கொள்ளும் விரதத்தை கடைப்பிடிக்கிறார். தான் வீட்டில் உள்ள சமயத்தில் எல்லாம் லட்சுமி விளக்கு ஒளி மங்காது பார்த்துக்கொள்கிறார். திருநீறு அணிந்து, தீபம் காட்டி தமது நாள்களைத் தொடங்கி முடிக்கிறார்.
இதய, முழங்கால், கை அறுவை சிகிச்சைகளைக் கடந்தாண்டுகளில் செய்துகொண்டுள்ள திருவாட்டி டான், “ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்கும் செல்லும் முன்னர் காளியிடம் நான் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்வேன். இதுவரை நான் கேட்டபடி நடந்துள்ளது,” என்று தியோசூ மொழியில் கூறினார்.
இந்து சமயத்தில் உள்ள ஈடுபாட்டினால் திருவாட்டி டானுக்கு கம்பத்து காலத்திலிருந்தே பல இந்திய நண்பர்கள் உண்டு. விழாக்காலங்களிலும், அவ்வப்போது வந்து வழிபடவும், அவர்கள் திருவாட்டி டானை வீடுதேடி வருவதுண்டு. மொழி புரியாவிடினும், செய்கைகளில் உரையாடும் அவர்களின் நட்பு காலந்தாண்டி நிற்பதாக திருவாட்டி டான் தெரிவித்தார்.
மூன்று தலைமுறைகள்
திருவாட்டி டானின் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையினர் வரை இந்துசமய வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் திருவாட்டி டானோடு அவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மனதுக்கு நெருங்கிய ஶ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இதற்கிடையே, இனம், மொழி தாண்டிய பல்லாண்டு கால நட்புகளைத் தமது பாட்டி வளர்த்துக்கொண்டுள்ளதைக் கண்டு வியக்கிறார், அவரின் 25 வயது பேத்தி எஸ்டெல் இங். சிங்கப்பூரர்களின் அடையாளத்திலேயே பன்முகத்தன்மை பொதிந்துள்ளது என்று கூறிய அவர், திருவாட்டி டான் தம் குடும்பத்தினரிடையே அனைவரையும் அரவணைக்கும் பண்பை விதைத்துள்ளதைக் குறிப்பிட்டார்.
வளரும் பருவத்தில் தமது கம்பத்தில் இடம்பெற்ற இன சச்சரவுகளைக் கண்டவர் திருவாட்டி டான். சமயம், வேறுபாடுகளின்றி அரவணைக்கவல்லது என்பதற்கு சீனரான தாமும் தமது கணவரும் முன்னுதாரணங்கள் என உணர்ந்துள்ளார். இன, சமய வேறுபாடுகள் குறித்த புரிந்துணர்வு மேம்பட்டுள்ளதில் மாற்றம் வந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறார் இவர்.